இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, “உமது கையை நீட்டும்!” என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது.” என வாசித்தோம்.
“சகோதர சகோதரிகளே! நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளர வேண்டாம்.” (2 தெச. 3:13) என்பார் பவுல். எத்தகைய ஆபத்துக்கள், எதிர்ப்புகள் வந்தாலும் பிறருக்கு நன்மை செய்வதில் இயேசுவைப் போல பின் வாங்காது மனம் உறுதியுடன் இருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
‘பிறர் அன்பின் பணியாளர் சபை’யின் நிறுவனரும், இன்றைய புனிதருமான புனித அன்னை தெரசா அனைத்து கருணை இல்லங்களின் பாதுகாவலராவார்.
உலகம் முழுவதும் கருணை இல்லங்களில் சேவை செய்துவரும் எண்ணற்ற சபைகளின் அருட்பணியாளர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
ஆசிரியர் தினமான இன்று நமக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்காக செபிப்போம்.
ஆசிரியர்கள் கல்வி நிலையங்களில் பணி செய்ய ஏற்ற நல்ல சூழ்நிலை நிலவிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
இந்த புதிய வாரம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் திறம்பட செய்யவும், குறித்த காலத்துக்கு முன்னமே நமது வேலைகளை வெற்றிகரமாக முடிக்கவும், தூய ஆவியின் துணையை வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.