வாசக மறையுரை (செப்டம்பர் 06)

பொதுக் காலத்தின் இருபத்து மூன்றாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I 1 கொரிந்தியர் 6: 1-11
II லூக்கா 6: 12-19
“தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை”
எதிரி வெளியே இல்லை:
வியட்நாமிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் நடந்த சமயம் அது.
ஒருநாள் காலையில், அமெரிக்க வீரர்கள் தாங்கள் இருந்த முகாமில் உணவருந்திக் கொண்டிருகையில், இரண்டு வீரர்களுக்கிடைய வாக்குவாதம் ஏற்பட்டு, அது சண்டையில் போய் முடிந்தது. அதைப் பார்த்துப் பதறிப் போன இராணுவத் தளபதி, “எதிரிகள் நமக்கு வெளியேதான் இருக்கிறார்களே அன்றி, உள்ளே அல்ல” என்றார். இதன்பிறகு அந்த இரண்டு வீரர்களும் சண்டை போடுவதை விட்டுவிட்டுச் சமரசமானார்கள்.
இந்த நிகழ்வில் வருகின்ற இராணுவ வீரர்களைப் போன்று, நாமும் பலநேரங்களில் இறைவனின் அன்பு மக்களாக இருந்தும், நமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றோம், அல்லது தீங்கு செய்கின்றோம். இப்படியெல்லாம் தீங்கு செய்வோருக்கு இறையாட்சியில் இடமில்லை என்கிறது இன்றைய இறைவார்த்தை. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கிறிஸ்துவை நம்பி ஏற்றுக்கொண்ட கொரிந்து நகர மக்கள், கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கேற்ப வாழாமல், தங்களுக்குள் வாக்குவாதம் செய்துகொண்டும், அதைத் தீர்த்துக்கொள்ள, திருஅவையில் இருந்த மூப்பர்களை நாடாமல் வெளியாள்களின் உதவியை நாடியும் வாழ்ந்தார்கள். அவர்களோ பிரச்சனையை மேலும் பெரிதாக்கினார்கள். இதுபோக, பரத்தமை, சிலைவழிப்பாடு, விபசாரம் போன்ற பாவங்களையெல்லாம் அவர்கள் செய்து வந்தார்கள். இது கிறிஸ்தவர்களுக்கு அழகில்லை என்பதால், பவுல் அவர்களிடம், “தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை” என்கிறார்.
நற்செய்தியில் இயேசு பன்னிருவரைத் திருத்தூதர்களாகத் தேர்ந்தெடுப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசுவைப் பலரும் பின்தொடர்ந்தார்கள். அவர்களெல்லாம் தன்னை உண்மையாய்ப் பின்தொடரவில்லை என்பதை அறிந்த இயேசு, அவர்களிலிருந்து பன்னிருவரைத் தேர்ந்தெடுக்கின்றார். இவர்கள் தன்னுடைய பதிலாள்களாக இருந்து, இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கவும், பேய்களை ஒட்டவும், நோய்களை நலமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களை மக்கள் நடுவில் அனுப்பி வைக்கின்றார்.
இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருதூதர்கள் அவர் செய்ய வேண்டிய பணிகளை அவர் சார்பாகச் செய்தார்கள். எனில், இயேசுவைப் பின்தொடரும் ஒவ்வொருவரும் அவரைப் பிரதிபலிக்கவேண்டும் ஒழிய, ஊனியல்பின்படி செயல்பட்டு, தீங்கிழைக்கக்கூடாது. இது நாம் நம்முடைய மனத்தில் இருத்தவேண்டிய முக்கியமான செய்தி.
சிந்தனைக்கு:
சாத்தான்தான் தீமையின் மொத்த வடிவாய் இருப்பவன். அதனால் தீங்கு செய்யும் அனைவரும் சாத்தானின் பிள்ளைகளே!
இயேசுவின் சீடர்கள் அவரைத் தங்கள் வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்வாலும் பிரதிபலிக்க வேண்டும்.
எல்லாவிதத்திலும் இயேசு நமக்கு முன்மாதிரி காட்டியிருக்கின்றார். அவரது முன்மாதிரியைப் பின்பற்றி நாம் நடப்போம்.
இறைவாக்கு:
‘கிறிஸ்து கொண்டிருந்த மனநிலையே உங்களில் இருக்கட்டும்’ (பிலி 2:5) என்பார் புனித பவுல். எனவே, நாம் கிறிஸ்துவின் மனநிலையை கொண்டு வாழ்ந்து, அவரது உண்மையான சீடராகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.