குடும்பங்கள் தயாரிக்கும் புனித வெள்ளி சிலுவைப் பாதை சிந்தனைகள்

உரோம் நகரின் கொலோசேயத்தில் நடைபெறும் புனித வெள்ளி சிலுவைப் பாதை தியானச் சிந்தனைகள், மற்றும், செபங்களைத் தயாரிக்கும் பொறுப்பை, கத்தோலிக்க குழுமங்கள் மற்றும், கழகங்களோடு தொடர்புடைய பல குடும்பங்களிடம் ஒப்படைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 07, இவ்வியாழனன்று இத்தகவலை வெளியிட்ட திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி அவர்கள், Amoris laetitia அதாவது அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி, திருஅவையில் குடும்ப ஆண்டு சிறப்பிக்கப்படும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித வெள்ளி சிலுவைப் பாதை தியானச் சிந்தனைகளைத் தயாரிக்கும் பொறுப்பை குடும்பங்களிடம் ஒப்படைத்துள்ளார் என்று கூறினார்.

இச்சிந்தனைகளுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள தலைப்புக்களின்படி, சில குடும்பங்கள், சிலுவைப் பாதை நிலைகளுக்கு இடையே சிலுவையை ஏந்திச் செல்லும் என்றும் புரூனி அவர்கள் தெரிவித்தார்.

கொலோசேயத்தில் மீண்டும் புனித வெள்ளி சிலுவைப் பாதை

இம்மாதம் 15ம் தேதி புனித வெள்ளிக்கிழமை மாலையில், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், ஆண்டவரின் திருப்பாடுகள் திருவழிபாட்டை நிறைவேற்றியபின்னர், அன்று உரோம் நேரம் இரவு 9.15 மணிக்கு, கொலோசேயத்தில் சிலுவைப் பாதை பக்திமுயற்சியை தலைமையேற்று நடத்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்

கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளால் கடந்த இரண்டுகளாக, புனித வெள்ளி சிலுவைப் பாதை பக்திமுயற்சி, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்றது.

Amoris Laetitia குடும்ப ஆண்டு

2014, மற்றும், 2015ம் ஆண்டுகளில் வத்திக்கானில் நடைபெற்ற குடும்பம் பற்றிய, உலக ஆயர்கள் மாமன்றங்களின் தீர்மானங்களின் அடிப்படையில், குடும்பங்களுக்கு மேய்ப்புப்பணி ஆற்றவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி Amoris laetitia என்ற அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலை வெளியிட்டார்.

குடும்பத்தில், அன்பின் அழகு மற்றும், மகிழ்வு ஆகியவை பற்றிய Amoris laetitia திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும்வண்ணம், திருஅவையில் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி, Amoris Laetitia குடும்ப ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த குடும்ப ஆண்டு, 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி நிறைவடையும். வருகிற ஜூன் மாதம் 22ம் தேதி 26ம் தேதி வரை, உரோம் நகரில் சிறப்பிக்கப்படும் பத்தாவது உலக குடும்பங்கள் மாநாட்டின் இறுதியில், திருத்தந்தை இக்குடும்ப ஆண்டை நிறைவுசெய்து வைப்பார்.

Comments are closed.