இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட எசாயா நூலில்,
“பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.” என ஆண்டவர் கூறுகிறார்.
நம்மில் பலரின் இருண்ட வாழ்க்கையானது, ஒளி மிக்கதாக மாற, பசித்திருப்போர்க்கு உணவளித்து, வறியோரின் தேவைகளை நிறைவு செய்ய இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
“ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்; வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்; உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்றுபோலும் இருப்பாய்.” என ஆண்டவர் கூறுகிறார்.
ஏழைகளுக்கு இரங்குவதன் மூலம் நாம் ஆண்டவர் கூறிய இத்தகைய ஆசீர்வாதங்களைப் பெற்றிட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
“நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்.” என நமதாண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறுகிறார்.
“கடவுள் நம் குற்றங்களை நினைவில் கொண்டிருந்தால், யாரும் அவர் முன் நிலைத்து நிற்க முடியாது.” என திருப்பாடல் 130 கூறுகிறது.
இறைவனைப் போல பிறரது தவறுகளை, பாவங்களை மன்னிக்கும் மனப்பக்குவத்தை நாம் பெற்றிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து
ரஷ்ய-உக்ரைன் யுத்தம் விரைவில் முடிவுக்கு வரவும், இதில் காயமடைந்தவர்கள் பூரண சுகம் பெறவும், போரினால் இறந்த அனைத்து ஆன்மாக்களின் நித்திய இளைப்பாற்றிக்காகவும் இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.