இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயித்தெழுந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும், பேசுவதிலும் சினங்கொள்வதிலும் தாமதமும் காட்ட வேண்டும். ஏனெனில் மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது.” என திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்.
கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிற நமது சினத்தை நாம் முற்றிலும் கைவிட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.” என திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்.
எல்லாத் தருணங்களிலும் நமது செயல்களை ஆண்டவர் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை எப்பொழுதும் நினைவில் கொண்டு பாவங்களிலிருந்து நாம் முற்றிலும் விலகியிருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.” என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்.
ஆண்டவருக்கு உகந்த தூய்மையான, மாசற்ற வாழ்வினை நாம் எப்பொழுதும் வாழ வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப்பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.” என வாசித்தோம்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தை நம் அகக் கண்களுக்கு ஒளி தர வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
தலை துண்டிக்கப்பட்டு மறைசாட்சியாக மரித்தவரும், இன்றைய புனிதருமான ஜூலியானா நோய்களிலிருந்து குணம் பெற நமக்கு பாதுகாவலராவார்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் எண்ணற்ற நோயாளிகள் பரிபூரண சுகம் பெற வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.!

Comments are closed.