பிப்ரவரி 11 : நற்செய்தி வாசகம்
காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும், ஆண்டவர் செய்கிறார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37
இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக்கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ் நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி, “எப்பத்தா” அதாவது ‘திறக்கப்படு’ என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.
இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————
யாவற்றையும் நன்றாகச் செய்யும் இயேசு
பொதுக்காலத்தின் ஐந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை
I 1 அரசர்கள் 11: 29-32; 12:19
II மாற்கு 7: 31-37
யாவற்றையும் நன்றாகச் செய்யும் இயேசு
காதுகேளாதவரும் பார்வையற்றவருமான பீத்தோவன்:
பேராசிரியர் ஒருவர் தன்னிடம் கல்வி பயின்ற மாணவர்களிடம், “காதுகேளாமலும், பார்வையின்றியும், இன்னும் ஒருசில உடல் குறைபாடுகளுடனும் ஒரு குழந்தை பிறக்க இருக்கின்றது என்றால், அந்தக் குழந்தையை நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், “அப்படிப்பட்ட குழந்தையைக் கருக்கலைப்பு செய்வதுதான் நல்லது” என்றார்கள்.
“காதுகேளாமாலும் பார்வையின்றியும், இன்னும் ஒருசில உடல் குறைபாடுகளுடனும் பிறக்கும் குழந்தையைக் கருக்கலைப்பு செய்வீர்கள் என்றால், லுட்விட் வான் பீத்தோவன் என்ற மிகப்பெரிய இசைக் கலைஞன் கருக்கலைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்றார் பேராசிரியர்.
ஆம், மிகப்பெரிய இசை மேதையான லுட்விட் வான் பீத்தோவன் காதுகேளாதவர், பார்வையாற்றவர், இன்னும் ஒருசில உடல் குறைபாடுகளைக் கொண்டவர். அப்படியிருந்தும் அவர் இசைத் துறையில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர். இன்றைய நற்செய்தியில் இயேசு காதுகேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவருக்கு இயேசு நலமளிப்பது குறித்து நாம் வாசிக்கின்றோம். அது பற்றி நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு, யூதர்கள் நடுவில் மட்டுமல்லாமல், பிற இனத்தார் நடுவிலும் பணிசெய்தார். அதற்குச் சான்றாக இருப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகம். இன்றைய நற்செய்தியில் இயேசு காதுகேளாதவரும் திக்கிப் பேசுபவருமான மனிதருக்கு நலமளிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம்.
இயேசு இந்த மனிதருக்கு நலமளிப்பதற்குக் கையாண்ட முறை மிகவும் கவனிக்கத் தக்கது. இந்தச் சமூகம் உடல் குறைபாடுகளுடன் இருப்பவர்களை எப்படியெல்லாம் கேலியும் கிண்டலும் செய்கின்றது என்பது நாம் அறியாத ஒன்று அல்ல. அதிலும் குறிப்பாக காது கேளாத மனிதர் என்றால், அவர் எந்தளவுக்குக் கேலியும் கிண்டலும் செய்யப்படுவார் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். இதையெல்லாம் நன்கு உணர்ந்தவராய் இயேசு, காதுகேளாதவரும் திக்கிப் பேசுபவருமானவரைத் தனியே அழைத்துக் கொண்டு போய்த் தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ் நீரால் அவரது நாவைத் தொடுக்கின்றார். இதனால் அவர் நலம் பெறுகின்றார். இதைப் பார்த்துவிட்டு மக்கள், “இவர் எத்துணை நன்றாய் யாவற்றையும் செய்து வருகின்றார்” என்று பேசிக் கொள்கின்றார்கள்.
இயேசு உடல் ஊனமற்றவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள்மீது கொண்ட அன்பு நம்மை வியக்க வைக்கின்றது. நாமும் இயேசுவைப் போன்று மாற்றுத் திறனாளிகள்மீதும், வறியவர்கள்மீது அன்பு கொண்டு வாழ்ந்தால், அவர்கள் அனுபவிக்கும் துன்பம் முற்றிலுமாகக் குறையும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.
சிந்தனைக்கு:
வறியவர்கள் படும் துன்பத்தைப் போக்குவதே மிகப்பெரிய நற்பணி
அடுத்தவர்மீது நாம் கொள்ளும் அன்பு பேச்சளவில் நின்று விடாமல், செயல் வடிவம் பெறவேண்டும்
மாற்றுத் திறனாளிகள் நம்மீது எதிர்பார்ப்பது இரக்கத்தை அல்ல, மனித மாண்பையே
ஆன்றோர் வாக்கு:
‘அன்பு உங்களுக்குள் வளர்வதால் அழகு வளர்கிறது. அன்பு ஆன்மாவின் அழகு’ என்பார் புனித அகுஸ்தின். எனவே, ஆன்மாவின் அழகான அன்பை ஒருவர் மற்றவர்மீது கொண்டு வாழ்ந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.