#வாசக மறையுரை (பிப்ரவரி 04)
பொதுக் காலத்தின் நான்காம் வாரம்
வெள்ளிக்கிழமை
I சீராக்கின் ஞானம் 47: 2-11
II மாற்கு 6: 14-29
நேர்மையும் தூய்மையும் நிறைந்த யோவான்!
வறுமையிலும் நேர்மை:
விடுதலைப் போராட்டத் தியாகியான சித்தரஞ்சன்தாஸ் ஒரு பிரபல வழக்குரைஞரும் கூட. அவர் ஒருவரிடம் பத்தாயிரம் உரூபாய் கடன் வாங்கியிருந்தார். அவரால் கடனை குறிப்பிட்ட தேதிக்குள் திரும்பிச் செலுத்த முடியாததால், கடன் கொடுத்தவர் அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது சித்தரஞ்சன்தாசைப் பார்க்க ஒருவர் வந்தார். அவர் சித்தரஞ்சன்தாசிடம், “என்னுடைய வழக்கை மட்டும் நீங்கள் எப்படியாவது நல்லபடியாக முடித்துத் தாருங்கள். நான் உங்களுக்கு இலட்ச உரூபாய் வேண்டுமானாலும் தருகின்றேன்” என்றார். அதற்கு சித்தரஞ்சன்தாஸ் அவரிடம், “உங்களுடைய வழக்கை என்னால் நடத்தித் தர முடியாது. ஏனெனில், அதில் உண்மையில்லை” என்று உறுதியாய்ச் சொல்லிவிட்டார். இதனால் வந்தவர் வருத்தத்தோடு திரும்பிச் சென்றார்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு, சித்தரஞ்சன்தாசிற்குக் கடன் கொடுத்தவர், “தன்னுடைய வழக்கை நடத்தித் தந்தால் ஒரு இலட்சம் உரூபாய் வரை தருவதாக அவர் சொல்கின்றார். ஆனாலும், நீங்கள், வழக்கில் உண்மையில்லை என்று அவரைப் போகச் சொல்லிவிட்டீர்கள். நீங்கள் நினைத்திருந்தால் அவர் தருவதாகச் சொன்ன பணத்தை வாங்கி, என்னுடைய கடனை அடைத்துவிட்டு, எஞ்சிய பணத்தை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம்; ஆனால் நீங்கள் நேர்மையோடு இருந்தீர்கள். இதனால் நீங்கள் என்னிடம் வாங்கிய பணத்தை, உங்களிடம் எப்போது பணம் வருகிறதோ, அப்போது தந்தால் போதும்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார், சித்தரஞ்சன்தாசிற்குக் கடன் கொடுத்த அந்த மனிதர்.
ஆம், தமது வறுமையிலும் நேர்மையோடு இருந்த சித்தரஞ்சன்தாஸ், நாம் எல்லாச் சூழ்நிலையும் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற செய்தியை நமக்குக் கற்றுத் தருகின்றார். இன்றைய நற்செய்தியில் நேர்மையும் தூய்மையும் நிறைந்த திருமுழுக்கு யோவானைக் குறித்து வாசிக்கின்றோம். அவரைப் போன்று நாம் எப்படி நேர்மையாகவும் தூய்மையாகவும் இருப்பது என்று சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
எந்தச் சூழ்நிலையிலும் கொண்ட கொள்கையிலிருந்து விலகக் கூடாது அதுவே நேர்மைக்கு அழகு. திருமுழுக்கு யோவான், தனது சகோதரரனின் மனைவியோடு வாழ்ந்த ஏரோதின் தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றார். ஏரோது சாதாரண மனிதன் அல்லன்; அவன் ஒரு குறுநில மன்னன். அவனைப் பகைத்தால் அல்லது அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டினால் தனக்கு என்ன ஆகும் என்பதெல்லாம் யோவானுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனாலும் அவர் நேர்மையோடு ஏரோதின் தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றார். இவ்வாறு தூயவரான கடவுளின் வழியில் யோவான் நடந்து தூய்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். இதற்காக அவர் கொல்லப்படுகின்றார்.
இந்நிலையில், இயேசு தமது சீடர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்பியதால், அவரைப் பற்றிக் கேள்விப்படும் ஏரோது, ‘யோவானைத்தான் நாம் கொன்றுவிட்டோமே, அப்படியானால் இவர் யார்?’ என்று குழப்பமுறுகின்றான். ஏனெனில், அவன் இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார் என்று பேசிக்கொண்டதைக் கேட்டிருந்தான்.
இங்கு யோவான் நேர்மையாகவும் தூய்மையாகவும் நடந்ததற்காகக் கொல்லப்பட்டது கவனிக்கத்தக்கது. நாம் நேர்மையாளர்களாய் நடந்தால் திருமுழுக்கு யோவானைப் போன்று துன்புறுத்தப்படலாம்; ஏன், கொலைகூடச் செய்யப்படலாம்; ஆனால், நாம் நேர்மையாளர்களாய் நடக்கும்போது கடவுள் தரும் கைம்மாறு மிகுதியானது. எனவே, நாம் எத்தகைய இடர் வரினும் கொண்ட கொள்கையில் மிக உறுதியாய் இருந்து, நேர்மையாளர்களாய், தூய்மைக்கு இலக்கணமாய் வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனைக்கு:
நேர்மையாளர்கள் சிந்தும் இரத்தம் ஒருபோதும் வீண்போகாது.
நேர்மையின்றி வாழும் மனிதர்கள் நடுவில், குறைந்த பட்ச நேர்மையோடு நடப்பதே பெரிதுதான்
கறைபடியாத கைகளுக்குக் கடவுளிடமிருந்து தக்க கைம்மாறு உண்டு.
இறைவாக்கு:
‘நேர்மையாளர்க்கு நீர் ஆசி வழங்குவீர்’ (திபா 5:12) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் திருமுழுக்கு யோவானைப் போன்று நேர்மையாளர்களாய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.