சனவரி 30 : நற்செய்தி வாசகம்

எலியா, எலிசா போல் இயேசு யூதர்களுக்காக மட்டும் அனுப்பப்படவில்லை.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-30
இயேசு தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.
அவர் அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.
ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப் படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார்.
தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————-
கலக்கமுறாமல் கடவுளின் வார்த்தையை அறிவி!
பொதுக் காலத்தின் நான்காம் ஞாயிறு
I எரேமியா 1: 4-5, 17-19
II 1கொரிந்தியர் 12: 31:13
III லூக்கா 4: 21-30
கலக்கமுறாமல் கடவுளின் வார்த்தையை அறிவி!
நற்செய்திக்காக உடல் முழுவதும் தழும்புகள்:
வியட்நாம் மக்களுக்குக் கடவுளின் வார்த்தையை முதன்முதலில் கொண்டு சென்றவர் மறைப்பணியாளரான அடோனிரம் ஜுட்சன் (Adoniram Judson 1788-1850). அமெரிக்காவைச் சார்ந்த இவர் தனது இருபத்து ஐந்தாவது வயதிலேயே வியட்நாமிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்று, ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் அங்கு மிகச்சிறப்பான முறையில் நற்செய்தியை அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொள்ளச் செய்தவர்.
இவர் வியட்நாமிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்ற புதிதில் பலவிதமான துன்பங்களைச் சந்தித்தார். ஒருபக்கம் பட்டினி, தனிமை போன்ற துன்பங்கள் என்றால், இன்னொரு பக்கம் ஆட்சியாளர்களிடமிருந்து துன்பங்கள். ஒருமுறை இவர் இயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவித்ததற்காக கைதுசெய்து செய்யப்பட்டு அவா சிறைச்சாலையில் (Ava Prison) பதினேழு மாதங்கள் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார். இதனால் இவருக்கு உடல் முழுவதும் காயங்களும் தழும்புகள் ஏற்பட்டன.
இவர் தண்டனைக் காலம் முடிந்தபின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது இவர் தன்னைச் சிறையிலிருந்து விடுவித்த அதிகாரியிடம், “இந்நாட்டின் ஒரு பகுதியில் நான் நற்செய்தி அறிவித்து விட்டேன். இதன் இன்னொரு பகுதியில் நற்செய்தி அறிவிக்கலாமா?” என்றார். இதற்கு அந்த அதிகாரி, “இயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவித்ததற்காகத்தானே இத்தனை காலமும் நீ சிறைத் தண்டனையை அனுபவித்தாய். இப்போது மீண்டுமாக இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கப் போவதாகச் சொல்கிறாயே! உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? மேலும் நீ நினைப்பதுபோல் அங்குள்ள மக்கள் நற்செய்தியைக் கேட்டதும், அதை நம்பி ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவ்வளவு மூடர்கள் இல்லை. அதே நேரத்தில் உன்னுடைய உடலில் இருக்கும் தழும்புகளைக் கண்டு, அவர்கள் நிச்சயம் கடவுளை ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது” என்றார்.
இதன்பிறகு அடோனிரம் ஜூட்சன் வியட்நாமின் இன்னொரு பகுதிக்குச் சென்று, ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை மிகுந்த வல்லமையோடு அறிவித்து, ஆயிரக் கணக்கான மக்கள் ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொள்ளச் செய்தார்.
ஆம், இறைவார்த்தையை அறிவிக்கும்போது எத்தனையோ துன்பங்கள் வந்தபோதும், அவற்றையெல்லாம் பொறுமையோடு தாங்கிக்கொண்டு, மிகுந்த வல்லமையோடு இறைவார்த்தையை அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டவரிடம் கொண்டு வந்தவர் என்ற வகையில் அடோனிரம் ஜூட்சன் நம் அனைவருக்கும் சிறந்த முன்மாதிரி. பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “கலக்கமுறாமல் கடவுளின் வார்த்தையை அறிவி” என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
கலக்கமுறத் தேவையில்லை:
கடவுளின் விருப்பமெல்லாம், எல்லா மனிதரும் மீட்புப் பெற வேண்டும்; உண்மையை அறிந்துணர வேண்டும் என்பதே ஆகும் (1திமொ 2:4) இதற்காகவே அவர் இறைவாக்கினர்களை மக்கள் நடுவில் அனுப்புகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியாவின் அழைப்பைக் குறித்து வாசிக்கின்றோம். இவர் கி.மு ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், கி.மு.ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் வாழ்ந்தவர். யூதா நாட்டினர் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடியாமல், தங்கள் விருப்பம் போன்று வாழ்ந்ததால், அவர்கள்மீது பாபிலோனியர்களின் படையெடுத்து நிகழப்போகிறது என்று எச்சரிப்பதற்காக ஆண்டவரால் இவர் தேர்ந்துகொள்ளப்பட்டார். மக்களிடம் தன்னுடைய வார்த்தையை அறிவிப்பதற்காக ஆண்டவர் எரேமியாவைத் தேர்ந்தெடுக்கும்போது, எரேமியா, “சிறுபிள்ளைதானே!” என்று கலங்குகின்றார். அப்போது ஆண்டவர் அவரிடம், “அவர்கள் முன் கலக்கமுறாதே!’ என்று சொல்லிவிட்டு, “உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன்” என்று அவருக்கு நம்பிக்கையூட்டுகின்றார்.
இதன்பிறகு எரேமியா ஆண்டவருடைய வார்த்தையை மக்களிடம் அறிவித்தபோது அவருக்குப் பலவிதமான துன்பங்கள் வந்தாலும், ஆண்டவர் அவரை உடனிருந்து பாதுகாத்தார் (எரே 11:18-23, 20:1ff, 38:7-13). ஆதலால், எல்லா மனிதரும் உண்மையை அறிந்துணரவும் மீட்புப் பெறவும் கடவுள் விரும்புவதால், அவருடைய பாதுகாப்பை உணர்ந்து, அவரது வார்த்தையை எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் எல்லாருக்கும் அறிவிப்பது இன்றியமையாதது.
இறைவாக்குப் பணி எல்லாரையும் சென்றடைய வேண்டும்:
கடவுள், யூதர்கள் மட்டுமல்ல, எல்லா மக்களும் மீட்புப் பெற விரும்புகின்றார். அதனால் கடவுளின் வார்த்தை அவர்களுக்கும் அறிவிக்கப்படவேண்டும். அதற்குக் கடவுளின் அடியார்கள் அவர்கள் நடுவிலும் பணிசெய்ய வேண்டும். இச்செய்தியை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குக் உணர்த்துகின்றது.
இயேசு நாசரேத்தில் இருந்த தொழுகைக்கூடத்திற்கு வந்து, இறைவாக்கினர் எசாயாவின் சுருளேட்டை வாசித்த பின் இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றார். ஒன்று, இஸ்ரயேலில் மூன்றரை ஆண்டுகள் வானம் பொய்த்தபோது இறைவாக்கினர் எலியா சாரிபாத்தில் இருந்த கைம்பெண்ணிடம் அனுப்பப்பட்டது (1 அர 17: -24). இரண்டு, இறைவாக்கினர் எலிசா சிரியாவை சார்ந்த, தொழுநோயால் பாதிக்கப்பட்ட நாமானை நலமாக்கியது (2 அர 5). இயேசு குறிப்பிடும் இவ்விரு நிகழ்வுகளிலும் வருகின்ற இறைவாக்கினர்கள் எலியாவும் எலிசாவும் பிற இனத்தார் நடுவில் பணிசெய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயேசு இந்த இரண்டு நிகழ்வுகளையும் தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களிடம் குறிப்பிடுவதன் மூலம், தானும் பிற இனத்தாருக்குப் பணி செய்வேன் என்று சொல்லாமல் சொல்கின்றார். இதனால் தொழுகைக் கூடத்தில் இருந்தவர்கள் அவரைக் கொல்லத் துணிகின்றார்கள்.
மெசியா என்பவர் யூதர்கள் நடுவில் பணிசெய்வார் என்றிருந்த யூதர்களிடம், அவர் பிற இனத்தார் நடுவிலும் பணிசெய்வார் என்று சொன்னதன் மூலம், இயேசு கடவுளுடைய பணியைச் செய்கின்றவர்கள் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாதாலும் எல்லாருக்கும் பணி செய்ய வேண்டும் என்ற உண்மையை உணர்த்துகின்றார்.
அன்போடு இறைவாக்குப் பணி
கடவுளின் வார்த்தையை அறிவிப்பவர் கலக்கமுறாமலும் எல்லாருக்கும் அறிவிப்பது முக்கியமானதாக இருந்தாலும், அவருக்கு இன்னொன்றும் தேவைப்படுகின்றது. அதுதான் அன்பு.
கொரிந்து நகரில் இருந்தவர்கள் தங்களிடம் இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் இருக்கின்றது; பரவசப் பேச்சுப் பேசும் ஆற்றல் இருக்கின்றது என்று மற்றவர்களை இழிவாக நடத்தினார்கள். இந்நிலையில்தான் பவுல் அவர்களிடம் அன்பு இல்லை என்றால் எல்லாமும் ஒன்றுமில்லை என்கிறார். ஆம், இறைவாக்கு உரைப்பவராக இருந்தாலும் சரி, அதைக் கேட்கும் மக்களாக இருந்தாலும் சரி அவர்களுடைய உள்ளத்தில் அன்பு இருக்க வேண்டும். ஏனெனில் அன்புதான் தலைசிறந்தது. அன்புதான் தீவினையில் மகிழுறாமல் உண்மையில் மகிழும்.
எனவே, நாம் கடவுளின் துணையை நம்பி, அவருடைய வார்த்தையை எல்லாருக்கும் அறிவிப்போம். அதுவும் அன்போடு அறிவிப்போம். அதன்மூலம் இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.
சிந்தனைக்கு:
‘ஒரே வாழ்க்கைதான். அதுவும் மிகவும் வேகமாகக் கடந்துபோயிடும்; ஆனால், கிறிஸ்துவுக்காக நாம் புரியும் பணி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்’ என்பார் மறைப்பணியாளரான சி.டி.ஸ்டட். ஆதலால், நாம் கடவுளின் வார்த்தையைக் கலக்கமுறாமல், அன்போடு, எல்லாருக்கும் அறிவிக்கபோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.