இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட சாமுவேல் நூலில்,
“நீ நம்மைப் புறக்கணித்து, உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக்கிக் கொண்டாய்.” என தாவீதுக்கு ஆண்டவருடைய வாக்கு அருளப்பட்டதை காண்கிறோம்.
பரத்தமை எனும் சாவான பாவம் அலகையின் சூழ்ச்சியாகும். அந்த கொடிய பாவத்தில் சிக்குண்டு இருப்பவர்கள் தங்களது தவறை உணர்ந்து அதிலிருந்து மீண்டு வரவேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 51:3-4ல்,
“ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்.” என கூறப்பட்டுள்ளது.
நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் ஆண்டவர் ஒருவர் அறிவார் என்பதை உணர்ந்து மனம் மாறி நல்லதொரு பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
திருச்சபையின் சிறந்த மறைவல்லுனரும், குருத்துவ கல்வி பயில்வோருக்கு சிறந்த முன்மாதிரி என திருச்சபையால் போற்றப்பட்டவரும், இன்றைய புனிதருமான புனித தாமஸ் அக்குய்னஸை நமது திருச்சபைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
சென்ற ஆண்டு நம்மை விட்டு பிரிந்த நமது உற்றார், உறவினர்களின் ஆன்மாக்களின் நித்திய இளைப்பாற்றிக்காக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.