வாசக மறையுரை (ஜனவரி 18)

பொதுக்காலத்தின் இரண்டாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I 1சாமுவேல் 16:1-13
II மாற்கு 2: 23-38
மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை
ஆடைக்கு இருக்கும் மரியாதை மனிதருக்கு இல்லை:
தனக்குத் தெரிந்த ஒருவருடைய இல்லத் திருமண விழாவிற்கு முல்லா புறப்பட்டுச் சென்றார். அவரிடத்தில் ஆடம்பரமான உடை இல்லை; மிகச் சாதாரண உடையே இருந்தது. அதனால் அவர் அதை உடுத்திக்கொண்டு, திருமண விருந்திற்குச் சென்றார். திருமண மண்டபத்திற்கு முன்பாக இருந்த காவலர் அவருடைய சாதாரண உடையைப் பார்த்துவிட்டு, அவரை உள்ளே விடவில்லை. இதனால் வருத்தத்தோடு திரும்பி வந்த முல்லா, வழியில் இருந்த ஒரு சலவைக் கடையில், புத்தம் புதிய உடையை வாடகைக்கு எடுத்து, அணிந்துகொண்டு, திருமண மண்டபத்திற்குச் சென்றார். இந்த முறை வாயிற் காவலர் அவரை இன்முகத்தோடு வரவேற்று உள்ளே அனுமதித்தார்.
திருமண மண்டபத்திற்குள் நுழைந்தபின் பந்தியில் அமர்ந்த முல்லாவிற்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. முல்லாவோ அவற்றை எடுத்துத் தான் அணிந்திருந்த உடைக்கு உண்ணக் கொடுத்தார். முல்லா செய்த இந்த வித்தியாசமான செயலைப் பார்த்துவிட்டு அவரை விருந்துக்கு அழைத்தவர், “உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டபோது, “ஆடைக்குத்தானே இங்கு மதிப்பிருக்கின்றது. மனிதருக்காக?’ என்றார். முல்லா சொன்ன எதுவும் புரியாமல் விழித்த அவரை விருந்துக்கு அழைத்தவர், நடந்ததைக் கேள்விப்பட்டு மிகவும் வருந்தினார்.
ஆம், இன்றைக்கு வெளித்தோற்றத்தை பார்த்து மனிதர்களை மதிப்பிடும் போக்கு இருக்கின்றது. ஆனால், கடவுள் அப்படியில்லை. அவர் மனிதர்களைப் போன்று வெளித்தோற்றத்தைப் பார்க்காமல், உள்ளத்தைப் பார்க்கின்றவர். அதை இன்றைய இறைவார்த்தை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இஸ்ரயேலின் முதல் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுல் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை. அதனால் கடவுள் சாமுவேலிடம், “…..நான் உனக்குக் காட்டுகிறவனை நீ எனக்காகத் திருப்பொழிவு செய்” என்கிறார். இதைத் தொடர்ந்து சாமுவேல் பெத்லகேம் சென்று, அங்கிருந்த ஈசாயின் புதல்வர்களைத் தன்முன் வரவழைக்கின்றார். பிறகு அவர் ஈசாயின் மூத்த புதல்வரைத்தான் கடவுள் திருப்பொழிவு செய்யச் சொல்வார் என்று நினைக்கையில் கடவுள் அவரிடம், “மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்கிறார். பின்பு ஈசாயின் இளைய மகனான தாவீது சாமுவேலால் திருப்பொழிவு செய்யப்படுகின்றார். அன்று முதல் தாவீதுமீது ஆண்டவரின் ஆவி நிறைவாக இருக்கின்றது.
தாவீது சாமுவேலால் திருப்பொழிவு செய்யப்பட்ட நிகழ்வு, ஒருவரை அவரது வெளித் தோற்றத்தை வைத்து மதிப்பிடக்கூடாது என்ற செய்தியை உணர்த்துகின்றது.
நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாளில் செய்யக்கூடாததைச் செய்துவிட்டதாகப் பரிசேயர் அவர்கள்மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இயேசுவின் சீடர்கள் பசியோடு இருந்ததால்தான் கதிர்களைக் கொய்து உண்டார்கள் என்று பரிசேயர்கள் பெருந்தன்மையாக நடந்திருக்கலாம்; ஆனால், அவர்கள் அவ்வாறு நடக்காமல், தன் சீடர்கள்மீது குற்றம் சுமத்தியதால், இயேசு தாவீதின் வாழ்வில் நடந்த நிகழ்வைச் (1சாமு 21:1-6) சுட்டிக்காட்டி அவர்களுக்குப் பதில் அளிக்கின்றார்.
எனவே, நாம் ஒருவருடைய சூழ்நிலை என்ன, அவர் எந்த நோக்கத்திற்காக ஒன்றைச் செய்கின்றார் என்பன பற்றி எதையும் அறியாமல், அவரது தோற்றத்தைப் பார்த்து மதிப்பிடும் போக்கினை அறவே விட்டுவிட்டு, ஆண்டவரைப் போன்று உள்ளத்தைப் பார்ப்போம்.
சிந்தனைக்கு:
 வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடுவது ஒரு நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து, அதை மதிப்பிடுவது போன்றது.
 சட்டங்களை விடவும் மானுட நேயம் பெரியது.
 ஆண்டவர் கண்ணால் கண்டதைக் கொண்டு மட்டும் தீர்ப்பிடுவதில்லை.

Comments are closed.