அர்ப்பண வாழ்வு இன்றைய உலகிற்கு ‘நற்செய்தி’

நாம் ஆற்றுகின்ற பணி எதுவானாலும், அது நற்செய்திக்கு ஆற்றுகின்ற பணியே என்றும், குறிப்பாக, துறவியர், அர்ப்பண வாழ்வாகிய அந்த “நற்செய்திக்கு”ப் பணியாற்றுகின்றனர், இதன் வழியாக, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு இன்றைய உலகிற்கு ‘நற்செய்தி’யாக அமைந்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

துறவியர் பேராயம் நடத்திய ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் கலந்துகொண்ட ஏறத்தாழ அறுபது பிரதிநிதிகளை, டிசம்பர் 11, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துறவியர் ஆற்றுகின்ற இப்பணி எளிதானதல்ல என்று கூறி, அத்தகைய வாழ்வு வாழ்கின்ற மற்றும், வருங்காலத்தில் அவ்வாழ்வைத் தெரிவுசெய்யும் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார். திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1994ம் ஆண்டில், துறவியர்பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தை நடத்தியதைக் நினைவுகூர்ந்த திருத்தந்தை, அக்காலக்கட்டத்தில், உலகின் பல்வேறு பகுதிகளில் துறவியர் எண்ணிக்கை குறைந்துவந்தது, இப்போதும் அது அதிகமாகக் குறைந்து வந்தாலும், அர்ப்பண வாழ்வு என்ற கடவுளின் அழகிய கொடையில் வேரூன்றப்பட்ட நம்பிக்கை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்திருந்தது என்றும், இந்த எண்ணத்தோடு, வருங்காலத்தை நம்பிக்கையோடு நோக்குமாறும் ஊக்கப்படுத்தினார்.

தெளிந்துதேர்தல், உடன்பயணித்தல் 

துறவியரின் பணிகளை, தெளிந்துதேர்தல், உடன்பயணித்தல் ஆகிய இரு சொற்களில் இரத்தின சுருக்கமாகச் சொல்லமுடியும் என்றும், தெளிந்துதேர்தலிலும், உடன்பயணித்தலிலும் சில கூறுகளை எப்போதும் உயிரூட்டம் பெறச்செய்யவேண்டும்   என்று திருத்தந்தை கூறினார்.

சிக்கலான சூழல்கள் நிலவும் சமயங்களில், நம்பிக்கை மற்றும், இறைவேண்டலில், பொறுமையுடன் தெளிந்துதேர்தலில் ஈடுபடுமாறும் கூறியத் திருத்தந்தை, அர்ப்பண வாழ்வு, திருஅவையில் பிறந்தது, அது, இறைமக்களோடு ஒன்றித்து வாழ்வதில்    திருஅவையில் மட்டுமே பலன்தரமுடியும் எனவும், தெளிந்துதேர்தல், மற்றும், உடன்பயணித்தலில், சில கூறுகளுக்கு கவனம் செலுத்தவேண்டும் எனவும் கூறினார்.

புதிய நிறுவனங்கள், அர்ப்பண வாழ்வின் புதிய முறைகள், அல்லது புதிய குழுமங்களை உருவாக்கும்போது, தெளிந்துதேர்தல் இருந்தாலும், மறைமாவட்ட ஆயர்களோடு ஒத்துழைப்பை வளர்த்துக்கொள்ளுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

Comments are closed.