நவம்பர் 16 : நற்செய்தி வாசகம்

இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 1-10
அக்காலத்தில்
இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.
இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார். அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். இதைக் கண்ட யாவரும், “பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே இவர்” என்று முணுமுணுத்தனர். சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினார். இயேசு அவரை நோக்கி, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I 2 மக்கபேயர் 6: 18-31
II லூக்கா 19: 1-10
நற்பண்புகளுக்கு அடையாளமாக விளங்கியவர்கள்
எத்தனை ஆன்மாக்களை மீட்டிருக்கிறீர்கள்?
ஒருவர் தன் நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, “நான் இயேசு தோற்றம் மாறிய தாபோர் மலையில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றேன்” என்று பெருமையாகச் சொன்னார். “அப்படியா!” என்று அவரை வியப்போடு பார்த்த அவரது நண்பர், “அங்கே இறையனுபம் பெற்றிருப்பீர்கள் அல்லவா! அந்த அனுபவத்தைக் கொண்டு எத்தனை ஆன்மாக்களை மீட்டிருக்கின்றீர்கள்?” என்றார்.
நன்றாக யோசித்த அந்த மனிதர், “இது வரைக்கும் எந்த ஆன்மாவையும் மீட்டதாக எனக்குத் தெரியவில்லை” என்றார். அப்போது அவருடைய நண்பர், “இயேசு தோற்றம் மாறிய மலையில் ஐந்து ஆண்டுகள் இருந்திருக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். அங்கே இறையனுபவம் பெற்றிருக்கிறீர்கள் என்றும் சொல்கிறீர்கள். அப்படியிருந்தும் நீங்கள் ஓர் ஆன்மாவையும் மீட்கவில்லை எனில், அந்த இறையனுபவத்தால் என்ன பயன்?” என்றார்.
ஆம், நாம் பெற்ற இறையனுபவம் மற்றவர்களைக் கடவுளிடம் கொண்டுவதற்கு ஒரு கருவியாய் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையெனில் அதற்குப் பெயர் இறையனுபவமே இல்லை. இன்றைய இறைவார்த்தை, இறையனுபவம் பெற்ற இருவர் சான்றாண்மைக்கு எடுத்துக்காட்டாகவும், நற்பண்புக்கு அடையாளமாகவும் விளங்குகின்றார்கள். அவர்களைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
‘மாசுபடிந்தவராய் வாழ்வதைவிடவும், மதிப்புடையவராய் இறப்பதே மேலானது’. இவ்வார்த்தைகளுக்கு அர்த்தம் தருபவராய் வாழ்ந்தவர்தான் இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் மறைநூல் அறிஞரான எலயாசர்.
யூதத் திருச்சட்டம் பன்றி இறைச்சி உண்பதைத் தடை செய்திருந்ததது. அப்படியிருக்கையில், அதை உண்ணுமாறு எலயாசர் கட்டாயப்படுத்தப்படுகின்றார். அவருக்குத் தெரிந்தவர்கள், அவர் உண்ணப்போகும் இறைச்சியை அவரே தயாரிக்கலாம். இதன்மூலம் வெளிப்பார்வைக்கு இறைச்சியைப் போன்று இருந்தாலும், உள்ளுக்குள் வேறொன்றை வைத்துக்கூட உண்ணலாம் ஒன்று வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றார்கள். அவரோ தன்னுடைய முடிவிலிருந்து கொஞ்சம்கூடப் பின்வாங்காமல், இறைச்சியை உண்ணாமல், சித்திரவதைக் கருவியின் முன் சென்று, தன் உயிரைத் தருகின்றார். இவ்வாறு அவர் எல்லா மக்களுக்கும் எடுத்துக்காட்டாகவும், நற்பண்புக்குக் அடையாளமாகவும் திகழ்கின்றார்.
நற்செய்தியில், வரிதண்டுபவர்களின் தலைவரான சக்கேயுவைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் காண விரும்பி இந்தச் சக்கேயு, அவருடைய தகுதிக்கும் மாறாக, காட்டு அத்திமரத்தில் ஏறிக் கொள்கிறார். இதைக் காணும் இயேசு சக்கேயுவை நோக்கி, “சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்…..” என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகளால் தொடப்பட்ட சக்கேயு, தன் உடைமைகளில் பாதியை ஏழைக்குக் கொடுத்துவிடுவதாகவும், எதையாவது கவர்ந்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் என்று (பாவ) அறிக்கையிடுகின்றார். இதன்மூலம் அவர் தன் பாவத்தை விட்டு விலகி நற்பண்புக்கு அடையாளமாக விளங்குகின்றார்.
ஆம், கடவுள் நமக்கு இந்த வாழ்வினைக் கொடுத்திருக்கின்றார் எனில், அதை எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக வாழவேண்டும். நாம் அவ்வாறு வாழ்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
 இறையனுபவம் நம்மை எளியவர்மீது இரக்கம் கொள்ளச் செய்ய வேண்டும்.
 நம்பிக்கை வாழ்வில் துன்பம் வந்தாலும், மனவுறுதியோடு இருப்பதே சிறந்தது.
 வாழ்வு என்பது கடவுள் கொடுத்த கொடை. இதை நாம் அர்த்தமுள்ள வகையில் வாழ்வோம்.
இறைவாக்கு:
‘உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்போது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்’ (மத் 5:16) என்பார் இயேசு. எனவே, நாம் நமது நற்செயல்களால் இயேசுவுக்குச் சான்று பகர்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.