#வாசக_மறையுரை (நவம்பர் 08)

பொதுக்காலம் முப்பத்து இரண்டாம் வாரம்
திங்கட்கிழமை
I சாலமோனின் ஞானம் 1: 1-7
II லூக்கா 17: 1-6
“அவர் மனம் மாறினால் மன்னியுங்கள்”
மன்னியாவிடில் வெறுப்பு உங்களை அழித்துவிடும்!
மூதாட்டி ஒருத்தி தன் வீட்டிற்கு முன் ஒரு மாமரத்தை ஆசை ஆசையாய் வளர்த்து வந்தார். அதுவும் நன்றாக வளர்ந்து, அவருக்குக் கனிகள் கொடுத்து வந்தது. திடீரென்று அந்நாட்டில் உள்நாட்டுப் போர் மூண்டது. போரில் அவர் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த மாமரத்தில் எதிரிகள் குண்டு வீசினர். இதனால் அம்மரம் பட்டுப்போனது. அப்போது அவர் அடைந்த துயருக்கு அளவே இல்லை.
இது நடந்து சில நாள்கள் கழித்து, மூதாட்டியைப் பார்க்க அவருக்குத் தெரிந்தவர் ஒருவர் வந்தார். மூதாட்டி அவரைப் பட்டுப்போயிருந்த மரத்தின் அருகே கூட்டிச் சென்று, நடந்தவற்றை அவரிடம் எடுத்துச்சொன்னார். அப்பொழுது அந்த மனிதர் மூதாட்டியிடம், “இந்த மரத்தை அப்படியே வைத்திருக்கவேண்டாம். ஏனெனில், இதை நீங்கள் அப்படியே வைத்திருந்தால், இதன்மீது குண்டு வீசியவர்மீது உங்களுக்கு வெறுப்பு ஏற்படும். பிறகு அவரை நீங்கள் சபிக்கத் தொடங்குவீர்கள். அதுவே உங்களுக்குத் தேவையில்லாத நோய்களை வரவைக்கும். மாறாக, நீங்கள் இந்த மரத்தை வெட்டிவிட்டு, இதன்மீது குண்டு வீசியவரை மன்னித்து, மறந்தீர்கள் எனில், உங்களுக்கு நோயே வராது” என்றார்.
ஆம், நமக்கெதிராகத் தீங்கு செய்பவரை நாம் மன்னித்தோம் எனில், நாம் பலவிதமான நோய்களிலிருந்து காப்பாற்றப் படுவோம் என்பது உண்மை. இன்றைய இறைவார்த்தை, நமக்கெதிராகப் பாவம் செய்பவர்களை மன்னிக்க வேண்டும் என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
மனிதர்கள் பலவீனமானவர்கள். அதனால் சோதனைக்கு உள்ளாகக்கூடியவர்கள். ஆண்டவர் இயேசுவே சோதிக்கப்பட்டார் என்பதை வைத்துப் பார்க்கும்போது, சோதனை எல்லாருக்கும் வரும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அதே நேரத்தில் சோதனை வருகின்றது என்பதற்காக பாவம் செய்யக்கூடாது; மற்றவரைப் பாவத்தில் விழச் செய்யவும் கூடாது. அது தண்டனைக்குரிய குற்றம்.
நற்செய்தியில் இயேசு, “உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள்” என்கிறார். இயேசு சொல்லும் இவ்வார்த்தைகளில் இரண்டு செய்திகள் அடங்கியிருக்கின்றன. ஒன்று பாவம் செய்பவரைக் கடிந்துகொள்வது. நாம் ஒவ்வொருவரும் நம் சகோதரர் சகோதரிகளுக்குக் காவலாளியாக இருக்கின்றோம் (தொநூ 4:9). அதனால் நாம் நம் சகோதர் சகோதரிகள் நமக்கெதிராகப் பாவம் செய்கின்றபோது, அவர்கள் திருந்தும் பொருட்டு, அவர்களைக் கடிந்து கொள்ளவேண்டும். இரண்டு, நமக்கெதிராகப் பாவம் செய்த சகோதரர் சகோதரிகள் மனம்மாறுகின்றபோது, அவர்களை மன்னிக்கவேண்டும். இதற்கு நிபந்தனை எல்லாம் கிடையாது.
நமக்கெதிராகப் பாவம் செய்த சகோதரர் சகோதரிகளை மன்னிப்பது, மனிதர்களாகிய நமக்குக் கடினம். ஆனால், கடவுளுடைய வல்லமையால் அது முடியும். அதனால்தான் சீடர்கள் இயேசுவிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்கிறார்கள். இன்றைய முதல் வாசகத்தில், “அவரை நம்பினோர்க்கு அவர் தம்மை வெளிப்படுத்துவார்” என்று வாசிக்கின்றோம். ஆம், மனிதர்களாகிய நம்மால், நமக்கெதிராகப் பாவம் செய்தவர்களை மன்னிப்பது கடினம்; ஆனால், ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு வாழும்போது, அவர் தம் திருவுளத்தை நமக்கு வெளிப்படுத்துவார். அப்பொழுது நம்மால் நமக்கெதிராகப் பாவம் செய்தவர்களை நம்மால் எளிதாக மன்னிக்க முடியும். எனவே, நாம் நமக்கெதிராகப் பாவம் செய்தவர்களை மன்னிப்பதற்கான ஆற்றலைக் கடவுளிடம் கேட்போம்.
சிந்தனைக்கு:
 மன்னிக்கின்றபோது நாம் கடவுளின் மக்களாகின்றோம். ஏனெனில், அவர் தம்மை வெறுப்போரையும் சபிப்போரையும் மன்னிப்பவர்.
 வெறுப்பினால் அல்ல, மன்னிப்பினால் மட்டுமே இந்த மானுடம் தழைக்கும்.
 கணக்கு வைத்து மன்னிப்பவன், மன்னிக்காதவனே!
இறைவாக்கு:
‘கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்’ (எபே 4:32) என்பார் புனித பவுல். எனவே, கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெற்றிருக்கும் நாம், அதைப் பிறருக்கும் வழங்கி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.