மூவேளை செப உரை – வாழ்வு, இறைவன் வழங்கும் கொடை

கிறிஸ்தவ வாழ்வு என்பது, இறைவன் வழங்கும் ஒரு கொடை என்றும், இந்த வாழ்வு, நாம் வகுக்கும் திட்டங்களின் அடிப்படையில் அல்ல, மாறாக, இறைவனின் அன்புப் பார்வையின் கீழ் அமையவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.

அக்டோபர் 10, இஞ்ஞாயிறன்று, 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்பு நிகழ்வாக, புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, அத்திருப்பலியின் இறுதியில், புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்தோருக்கு வழங்கிய மூவேளை செப உரையில், இயேசுவுக்கும், செல்வந்தர் ஒருவருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பை மையப்படுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

கடவுள் தந்த அனைத்து கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இருந்த செல்வந்தரை, கடமைகள், கட்டாயங்கள் என்ற வட்டத்திலிருந்து வெளியேறி, சுதந்திர உள்ளத்த்துடன், இன்னும் கூடுதலாக இறைவனுக்கு அவர் என்ன செய்யக்கூடும் என்பதைச் சிந்திக்க இயேசு அழைத்தார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நாம் என்ன தரமுடியும், கடவுள் நமக்கு என்ன தருவார் என்ற வர்த்தக கண்ணோட்டம் கொண்ட மத நம்பிக்கையைத் தாண்டி, நம் வாழ்வை இறைவன் வழங்கும் ஒரு கொடையாகக் காண்பதற்கு இயேசு அழைக்கிறார் என்று குறிப்பிட்டார் திருத்தந்தை.

தன் வாழ்வை இறைவன் தந்த ஒரு கொடையாக முழுமையாக ஏற்றுக்கொண்ட அன்னை மரியாவிடம், நமக்குத் தேவையான அருளை வேண்டுவோம் என்று கூறி,  தன் உரையை நிறைவுசெய்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நண்பகல் மூவேளை செபத்தை, மக்கள் அனைவரோடும் இணைந்து வேண்டினார்

Comments are closed.