வாசக மறையுரை (செப்டம்பர் 13)

பொதுக்காலம் இருபத்து நான்காம் வாரம்
திங்கட்கிழமை

I திமொத்தேயு 2: 1-8
II லூக்கா 7: 1-10

“அனைவருக்காகவும் மன்றாடுங்கள்”

மன்றாடியதால் மனமாற்றம்:

சீனாவிற்கு நற்செய்தியைக் கொண்டுசென்றவர்களில் முன்னோடியாகத் திகழ்பவர் ஹட்சன் டெய்லர் (Hudson Taylor 1832-1905). தொடக்கத்தில் கடவுள்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்த இவருக்குப் பதினெட்டு வயது நடக்கும்போது, தன் தந்தை வைத்திருந்த நூலகத்திற்குச் சென்று, ஒவ்வொரு புத்தகமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். தற்செயலாக இவருடைய கண்ணில் திருவிவிலியம் படவே, இவர் அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். சிறிதுநேரத்திற்குள்ளாகவே இவர் அதனால் ஈர்க்கப்பட்டு, ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்.

இது நடந்து சில நாள்கள் கழித்து, வெளியூர் சென்றிருந்த இவரது தாயார் வீட்டிற்குத் திரும்பி வந்தார். ஹட்சன் டெய்லர் அவரிடம் நடந்ததையெல்லாம் எடுத்துச் சொல்லி, “இப்பொழுது நான் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுவிட்டேன்” என்றார். “எனக்குத் தெரியும் மகனே! நீ சொல்லும் அந்த நாளில், அந்த நேரத்தில் நான் கோயிலில் முழந்தாள் படியிட்டு உனக்காகக் கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு நீ கடவுள்மீது நம்பிக்கை கொண்டுவிட்டதாக உணர்த்தப்பட்டது” என்ற கண்களில் ஒளிமின்னச் சொல்லி முடித்தார் ஹட்சன் டெய்லரின் தாயார்.

கடவுள்மீது நம்பிக்கை இல்லாத ஹட்சன் டெய்லர், அவருடைய தாயின் மன்றாட்டினால் கடவுளின்மீது நம்பிக்கை கொண்டதும், கடவுளின் வார்த்தையை அறிவிக்கச் சீனாவிற்குச் சென்றதும் இறைவேண்டலின் வல்லமையை நமக்கு உணர்த்துகின்றது. இன்றைய இறைவார்த்தை அனைவருக்காகவும் மன்றாட வேண்டியதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தை நாம் கருத்தூன்றி வாசித்தோமெனில், ‘அனைவர்’, ‘எல்லா’ ஆகிய வார்த்தைகள் மீண்டும் மீண்டுமாக வருவதை நம்மால் காண முடியும். ஆம், புனித பவுல் திமொத்தேயுவிடம் யூதருக்கு மட்டுமல்ல, “அனைவருக்காகவும் மன்றாடுங்கள்” என்கிறார். ஏனெனில், “எல்லா மனிதரும் மீட்புப்பெற கடவுள் விரும்புகின்றார்” என்பதால்தான்.

கடவுள் அனைவரும் மீட்புப் பெற அல்லது அனைவரும் நலம்பெற விரும்புகின்றார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம். நற்செய்தியில் நூற்றுவத் தலைவருடைய பணியாளரை ஆண்டவர் இயேசு நலப்படுத்துகின்றார். இந்த நூற்றுவத் தலைவர் யூதர் அல்லர்; பிறவினத்தார். அப்படிப்பட்டவருடைய பணியாளரை இயேசு நலப்படுத்தியதன் மூலம், கடவுள் எல்லாரும் நலம் பெற விரும்புகின்றார்; எல்லாரும் மீட்புப் பெற விரும்புகின்றார் என்ற உண்மையையைப் பறைசாற்றுகின்றார்.

நாம் இயேசுவைப் போன்று எல்லார்மீதும் இரக்கம்கொண்டு, அவர்கள் நலம் விரும்புகின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனைக்கு:

 அவர்களுள் எவரும் அழிவுற வில்லை (யோவா 17:12).

 இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் (1 தெச 5:17)

 இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர் (மத் 24:13).

இறைவாக்கு:

‘நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன்’ (யோவா 5: 34) என்பார் இயேசு. எனவே, நாம் அனைவரும் மீட்புப் பெற விரும்பும் இயேசுவின் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.