செப்டம்பர் 3 : நற்செய்தி வாசகம்

மணமகன் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது நோன்பு இருப்பார்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-39.
அக்காலத்தில்
பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, “யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!” என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா? ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” என்றார்.
அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.
அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்ப மாட்டார்; ஏனெனில் ‘பழையதே நல்லது’ என்பது அவர் கருத்து.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————
லூக்கா 5: 33-39
பொதுக்காலம் இருபத்து இரண்டாம் வாரம்
வெள்ளிக்கிழமை
லூக்கா 5: 33-39
ஏன் வழிபடுகின்றோம் என்று தெரியாமலேயே வழிபடுபவர்கள்
நிகழ்வு
ஒரு சமயம் யூத இனத்தைச் சார்ந்த படைவீரர்கள், எதிர் நாட்டவரோடு போர்த்தொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் போரிட்டுக் கொண்டிருக்கும்போதே ஓய்வுநாள் தொடங்கிவிட்டது. ஓய்வுநாளில் எந்தவொரு வேலையும் செய்யக்கூடாது என்பதால் யூத இனத்தைச் சார்ந்த படைவீரர்கள் அனைவரும் போர் புரிவதிலிருந்து பின்வாங்கி, ஒரு குகைக்குள் போய் ஒளிந்துகொண்டார்கள்.
இதற்காகவே காத்திருந்தவர்கள் போல் எதிரி நாட்டவர் குகைக்குள் ஒளிந்திருந்த எல்லா யூதப் படைவீரர்களையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்கள். அவர்களோ எந்தவோர் எதிர்ப்பும் காட்டாமல், ஓய்வுநாள் சட்டத்தை மீறக்கூடாது என்பதற்காக பரிதாபமாக செத்து மடிந்தார்கள்.
சில விசயங்களை ஏன் பின்பற்றுகின்றோம். எதற்காகப் பின்பற்றுகின்றோம் என்று தெரியாமலேயே பின்பற்றும் மனிதர்களைப் போன்றுதான் இந்த யூதப்படைவீரர்கள் இருந்தார்கள் என்பதை நினைக்கும்போதே, வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கின்றது. நற்செய்தியில் நோன்பு பற்றிய கேள்வி எழுகின்றது. அதற்கு இயேசு என்ன பதிலளித்தார் என்பதைத் தெரிந்துகொண்டு, இன்றைய சூழலில் நாம் எப்படி அர்த்தமுள்ள விதமாக நோன்பு மேற்கொள்ளலாம் அல்லது வழிபாடு செய்யலாம் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
பாவப்பரிகார நாளில் நோன்பு
ஆண்டுக்கொரு முறை பாவப் பரிகார நாளில் நோன்பிருக்கவேண்டும் (லேவி 25) என்பது மோசே இஸ்ரயேல் மக்கட்குக் கொடுத்த சட்டமாகும். வேறு சில காரணங்கட்காகவும் இஸ்ரயேல் மக்கள் நோன்பிருந்தார்கள். அதெல்லாம் எப்போதாவதுதான் நடந்தது. ஆனால், சட்டக் காவலர்கள் அல்லது சட்டத்தை மிக நுணுக்கமாகக் கடைப்பிடிக்கின்றவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட பரிசேயர்கள் வாரம் இருமுறை நோன்பிருக்கத் தொடங்கினார்கள் (லூக் 18: 12) அதையே இயேசுவின் சீடர்கள் கடைப்பிடிக்கவேண்டும் என்று இயேசுவிடம் எடுத்துக் கூறுகின்றார்கள். அதைத்தான் நாம் இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்.
இயேசு, அவர்கள் கேட்ட கேள்விக்கு மூன்றுவிதமான உவமைகளைப் பயன்படுத்திப் பதிலளிக்கின்றார். அது குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது முன்பாக பரிசேயர்கள் எதற்காக வாரத்தில் இரண்டு முறை நோன்பிருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம். யூதர்கள் நோன்பினை பல காரணங்கட்காக மேற்கொண்டாலும் முதன்மையான காரணம், மெசியாவின் வருகைக்காகத் தங்களையே தயார்செய்வதற்குத்தான். ஆனால், பரிசேயக்கூட்டம் அந்த உண்மையை உணர்ந்துகொள்ளாமல், தங்களைப் பற்றித் தம்பட்டம் அடிப்பதற்காக நோன்பிருந்தார்கள் (மத்6: 16). இத்தகைய பின்னணியில்தான் அவர்கள் இயேசுவிடம், உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருக்கவிருக்கவில்லை என்ற கேள்வியைக் கேட்கின்றார்கள். அவர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு எப்படிப் பதிலளித்தார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு இவ்வுலகிற்கு துக்கத்தை அல்ல, மகிழ்ச்சியைக் கொண்டுவந்தார்
தன்னிடம் கேள்விகேட்ட பரிசேயக் கூட்டத்திற்குப் பதிலளிக்கும் விதமாய் இயேசு பயன்படுத்தும் முதல் உவமைதான், மணமகன் மணவீட்டார் உவமையாகும். யூதர்களின் திருமண விழா ஒரு வாரத்திற்கு நடைபெறும். அந்த ஒரு வாரம் முழுவதும் மணமகனை வாழ்த்துவதற்கும் சந்திப்பதற்கும் உறவினர்கள், நண்பர்கள் வந்துகொண்டே இருப்பர். இதனால் மணவிருந்தினரோடு மணமகன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்கள் துக்கம் கொண்டாடுவதற்கு வாய்ப்பே இல்லை. இந்த உண்மையை உவமையாகக் கையாளும் இயேசு, ‘மணமகனாகிய நான் மணவிருந்தினராகிய சீடர்களோடு இருக்கும்போது அவர்கள் துக்கம் கொண்டாடுவதற்கு வாய்ப்பே இல்லை” சொல்கின்றார். இவ்வாறு இயேசு இந்த உலகிற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்தவராக (லூக் 10: 21; யோவா 10: 21. 17:13) எடுத்துக்கூறுகின்றார்.
இயேசு இவ்வுலகிற்கு புதிய சாசனத்தைக் கொண்டுவந்தார்
தன்னிடம் கேள்விகேட்ட பரிசேயர்கட்கு பதிலளிக்கும் வண்ணமாக இயேசு பயன்படுத்தும் இரண்டாவது மற்றும் மூன்றாவது உவமைதான், புதிய ஆடை – புதிய துணி, புதிய தோற்பை – புதிய திராட்சை இராசமாகும்.
மோசேயின் சட்டம் சட்டங்களை அதிகம் முன்னிலைப்படுத்தியது. ஆனால் இயேசுவோ சட்டங்களை அல்ல, அன்பையும் இரக்கத்தையும் முன்னிலைப்படுத்தினார். அதனால்தான் அவர் புதிய துணியை பழைய ஆடையோடு ஒட்டுபோட்டால் அது கிழிந்துபோகும்; பொருந்தாது என்கின்றார். புதிய தோற்பையில் பழைய திராட்சை மதுவை ஊற்றினாலும் இதே நிலைதான் ஏற்படும் என்கின்றார். இவ்வாறு இயேசு தன்னிடம் நோன்பு குறித்த கேள்வியைக் கேட்ட பரிசேயக்கூட்டத்திடம் பழைய சட்டங்களை, தான் கொண்டுவந்த அன்பு நெறியோடு ஒப்பிடவேண்டாம் என்று சொல்கின்றார்.
நற்செய்தியில் வருகின்ற பரிசேயர்களைப் போன்று பலரும் இன்றைக்குத் தங்களை நல்லவர்கள் போன்று காட்டிக்கொள்வதற்கும் அடுத்தவர்மீது தேவையில்லாத்தையும் திணிப்பதற்கும் இருக்கின்றார்கள். நாமும் கூட சில சமயங்களில் தேவையில்லாத கருத்துகளை அடுத்தவர்மீது திணிக்க முயற்சிக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், இன்றைய இறைவார்த்தைமூலம் நாம் சிந்தித்தது போன்று, யார்மீதும் எதையும் திணிக்காமல் இருக்க முயற்சி செய்வோம். அதே நேரத்தில் எதையும் அர்த்தமில்லாமல் பின்பற்றுவதையும் தவிர்ப்போம்.
சிந்தனை
‘எதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது என்பது வழிபாடு கிடையாது. அதற்குப் பெயர் சிலைவழிபாடு.’ என்பார் ஓர் அறிஞர். ஆகையால், இவ்வார்த்தையை உள்வாங்கியவர்களாய் பொருள் உணர்ந்து வழிபடுவோம்; யார்மீதும் எதையும் திணிக்காதிருப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடந்து, இறையருள் நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.