வாசக மறையுரை (ஆகஸ்ட் 28)

பொதுக்காலம் இருபத்து ஒன்றாம் வாரம் சனிக்கிழமை
I தெசலோனிக்கர் 4: 9-11
II மத்தேயு 25: 14-30
யார் நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளர்?
தன் பொறுப்பினை உணர்பவரே நம்பிக்கைக்குரியவர்:
பேரரசி விக்டோரியா சிறுமியாக இருந்தபோது, தான் அரச குடும்பத்தைச் சார்ந்தவர் என்ற எண்ணமே இல்லாமல் மிகவும் விளையாட்டுத் தனமாக இருந்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சிகளை உதாசீனப்படுத்தி கொண்டு, சரியாகப் படிக்காமல் ஏனோதானோ என்று இருந்த அவரைப் பார்த்துப் பலருக்கு வருத்தமாக இருந்தது.
இந்நிலையில் அவருக்குப் பாடம் கற்றுத்தந்த ஓர் ஆசிரியர் அவரிடம், “விக்டோரியா! நீ சாதாரண பெண்மணி கிடையாது! எதிர்காலத்தில் இந்த இங்கிலாந்து நாட்டையே ஆளப் போகிறாய்! அப்படிப்பட்ட நீ பொறுப்பை உணராமல், இன்னும் விளையாட்டுத்தனமாவே இருக்கின்றாயே! முதலில் உன்னுடைய பொறுப்பை நன்கு உணர்ந்து செயல்படு” என்றார். அப்பொழுதுதான் விக்டோரியாவிற்குத் தன் தவறு புரிந்தது. அதன்பிறகு அவர் தான் யார், எதிர்காலத்தில் தான் எத்தகைய பொறுப்பை வகிக்கப்போகிறோம் என்பதை நன்கு உணர்ந்தவராய், கொடுக்கப்பட்ட பயிற்சிகளை நல்ல முறையில் பெற்றுக்கொண்டு, ஓர் அரசிக்குரிய எல்லாக் குணநலன்களுடன் திகழ்ந்தார்.
ஆம், பேரரசி விக்டோரியா தன்னுடைய பொறுப்பை உணர்ந்த பின்னரே, அவரால் நல்ல அரசியாக, நம்பிக்கைக்குரிய அரசியாக இங்கிலாந்து நாட்டை ஆட்சி செய்யமுடிந்தது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நமக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகள், திறமைகளைக் கொண்டு, நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான திறமையை, தாலந்தைக் கொடுத்திருக்கின்றார். அந்தத் தாலந்தை அவர் எப்படிப் பயன்படுத்துகின்றார் என்பதை பொறுத்தே அவரது உயர்வும் தாழ்வும் இருக்கின்றது என்ற உண்மையை எடுத்துச் சொல்வதுதான் இயேசு சொல்லும் தாலந்து உவமையின் சாராம்சம்.
இயேசு சொல்லும் இவ்வுவமையில் வரும் நெடும்பயணம் செல்லும் தலைவர், கடவுளை அல்லது இயேசுவைக் குறிக்கின்றார். அவர் தம் பணியாளர்களுக்கு ஐந்து, இரண்டு, ஒன்று எனத் தாலந்தைக் கொடுப்பதுபோல, கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான திறமையைக் கொடுத்திருக்கின்றார். இந்தத் திறமை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம் என்பதைப் பொறுத்து நமது வாழ்வு இருக்கின்றது. உவமையில் வருகின்ற முதல் இரு பணியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகளை நல்ல முறையில் பயன்படுத்தினார்கள். அதனால் அவர்கள் தலைவரின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டார்கள். கடைசியாக வந்த பணியாளரோ தனக்குக் கொடுக்கப்பட்ட தாலந்தைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. அதனால் அவர் புறம்பே தள்ளப்படுகிறார்.
அடிப்படையில் முதல் இரண்டு பணியாளர்களும் தங்கள் தலைவருக்கு, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகளுக்கு நம்பிக்கையோடு இருந்தார்கள். அதுவே அவர்களை உயர்த்தியது; தலைவரின் மகிழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தது. நாம் கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்தால், இன்றைய முதல் வாசகத்தில் பவுல் சொல்வது நமது சகோதரர்களை அன்பு செய்யமுடியும். அதனால் நமக்குப் பல்வேறு தாலந்துகளைக் கொடுத்திருக்கும் கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருப்போம்.
சிந்தனைக்கு:
 நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது (யோவா 15: 😎.
 தன் பொறுப்பினை உணரும் எவரும் நம்பிக்கைக்குரியவராய் இருப்பார்
 கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்பினை உணர்ந்து, அவருக்கு நம்பிக்கைக்குரியவராய் வாழ்வது எப்போது? சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர்; நேர்மையுள்ளவர்’ (1 யோவா 1: 9) என்பார் யோவான். ஆகையால், நம்பிக்கைக்குரிய ஆண்டவருக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்து, மிகுந்த கனி தந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.