வாசக_மறையுரை (ஆகஸ்ட் 23)

பொதுக்காலம் இருபத்து ஒன்றாம் வாரம் திங்கட்கிழமை
I 1 தெசலோனிக்கர் 1: 1-5, 8-10
II மத்தேயு 23: 13-22
“செயலில் வெளிப்பட்ட நம்பிக்கை”
என் பங்குக்குக் கொடுத்துவிட்டேன்: உங்கள் பங்குக்கு கொடுத்துவிட்டீர்களா?
கையில் இருநூறு உரூபாயைக் கொடுத்து, கடைத்தெருவிற்குச் சென்று, சீக்கிரம் பத்து முட்டைகளை வாங்கி வா என்று செல்வி, தன் மகன் அன்புவைக் கடைத்தெருவிற்கு அனுப்பி வைத்தாள். சிறுவன் அன்புவும் வேகமாகக் கடைத்தெருவிற்குச் சென்று, பத்து முட்டைகளை ஒரு துணிப்பையில் வாங்கிக்கொண்டு, கவனமாக வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தான்.
வழியில், எதிரில் வந்த பெரியவர் ஒருவர் அவன்மீது தெரியாமல் மோதிவிட, அவன் வைத்திருந்த முட்டைகளெல்லாம் கீழே விழுந்து உடைந்தன. ‘வெறுங்கையோடு வீட்டிற்குச் சென்றால் அம்மா அடிக்குமே!’ என்று அன்புவிற்கு அழுகை அழுகையாக வந்தது. இதற்கு நடுவில் அங்கே கூடிய கூட்டத்திலிருந்த இளைஞன் ஒருவன் சிறுவன் அன்புவின் இக்காட்டான சூழ்நிலையை உணர்ந்தவனாய், “என்னுடைய பங்கிற்கு இருபது உரூபாய் இவனுக்குத் தருகின்றேன், உங்களுடைய பங்கிற்கு நீங்கள் என்ன தருகிறீர்கள்?” என்றான். உடனே அங்கே திரண்டிருந்தவர்கள் பத்து உரூபாய், ஐந்து உரூபாய் என அவனுக்குக் கொடுத்தார்கள். இவ்வாறு அவனுடைய கையில் இருநூற்று ஐம்பது உரூபாய் சேர்ந்தது. அதைக் கொண்டு அவன் பத்து முட்டைகளை வாங்கிக்கொண்டு பத்திரமாக வீட்டிற்குச் சென்றான்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவன் அன்பு ஓர் இக்கட்டான சூழ்நிலைக்கு உள்ளானபோது, கடைத்தெருவில் இருந்தவர்கள், அவன்மீது இரக்கம்கொண்டு, அவனுக்குப் போதுமான பணத்தைக் கொடுத்துத் தாங்கள் மாந்த நேயமுடையவர்கள் என்பதை வெளிப்படுத்தினார்கள். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நம்பிக்கையானது செயல்வடிவம் பெற வேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
பவுல் தனது இரண்டாவது திருத்தூதுப் பயணத்தின்போது சீலா மற்றும் திமொத்தேயுவோடு சென்ற ஓர் இடம்தான் தெசலோனிக்கா (திப 17: 1-9). இங்கிருந்தவர்கள் நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பதையும், அன்பினால் உந்தப்பட்டு உழைப்பதையும் நினைத்து பவுல் ஆண்டவருக்கு நன்றிகூறுகின்றார். தெசலோனிக்கர்கள் நம்பிக்கைக்குச் செயல் வடிவம் கொடுக்கும் அளவுக்கு வாழ்ந்தார்கள் எனில், அவர்கள் பவுல் மற்றும் அவரோடு இருந்தவர்கள் அறிவித்த நற்செய்திக்கு முழுவதும் கீழ்ப்படிந்து நடந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
இதற்கு முற்றிலும் மாறாக, இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் மோசேயின் அதிகாரத்தைத் தங்களிடம் வைத்துக்கொண்டு, அவர்களும் விண்ணரசில் நுழையாமல், மற்றவர்களையும் விண்ணரசில் நுழையவிடாமல் தடுத்தார்கள். மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருந்த அவர்கள் எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்து, அவர்களும் விண்ணரசில் நுழைந்து, மற்றவர்களையும் விண்ணரசில் நுழைய வழிவகை செய்திருக்கவேண்டும்; ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யாததால் இயேசு அவர்களை வெளிவேடக்காரர்கள் என்று சாடுகின்றார். நாம் ஆண்டவரில் கொண்டிருக்கும் நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுக்கின்றோமா? அல்லது பெயரளவுக்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
 நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால், தன்னிலே உயிரற்றது (யாக் 2: 17).
 செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் (1 யோவா 3: 18).
 பெயருக்கு வாழாமல், பெயர் சொல்லும் அளவுக்கு வாழ்வோம்.
இறைவாக்கு:
‘நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்’ (திபா 1: 6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் நேர்மையாய், நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பவர்களாய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.