#வாசக மறையுரை (ஆகஸ்ட் 20)

பொதுக்காலம் இருபதாம் வாரம் வெள்ளிக்கிழமை
I ரூத்து 1: 1, 3-6, 14b-16, 22
II மத்தேயு 22: 34-40
“அன்பிற்கு இரண்டு பக்கங்கள் உண்டு”
கடவுளை நேரில் கண்டவர்:
ஞாயிற்றுக்கிழமை காலை நேரமது. ஞாயிறு கடன் திருப்பலியைக் காண்பதற்காக அமலன் தன் மனைவியோடு இருசக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தான். அமலனின் வீடு பங்குக் கோயிலை விட்டுச் சற்றுத் தொலைவில் இருந்தாலும், தவறாமல் தன் மனைவியுடன் ஞாயிறு திருப்பலியில் கலந்துகொள்வதுண்டு. அன்றும் அப்படித்தான் அவன் தன் மனைவியோடு ஞாயிறு திருப்பலியில் கலந்துகொள்வதற்காகச் சென்றுகொண்டிருந்தான்.
வழியில், சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென மயக்கம் போட்டுக் கீழேவிழுந்தார். அவர் கீழே விழுந்ததைப் பார்த்த அமலன் வண்டியை நிறுத்திவிட்டு, ஓடிச்சென்று அவரைத் தூக்கி, அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தான். அவரோ, “பசிக்கிறது… பசிக்கிறது” என்று முனங்கியதும், அமலன் அருகில் இருந்த ஓர் உணவகத்திற்குச் சென்று, உணவும் தண்ணீரும் வாங்கிக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான். பின்னர் அவன் அவர் போகவேண்டிய இடத்தில் கொண்டுபோய் இறக்கிவிட்டுத் திரும்பி வந்தான்.
இதற்குள் பங்குக்கோயிலில் திருப்பலி முடிந்து எல்லாரும் வெளியே வந்துகொண்டிருந்தார்கள். இதைப் பார்த்துவிட்டு, அமலனின் மனைவி அவனிடம், “நம்மால் இன்று ஆண்டவரைத் தரிசிக்க முடியாமல் போய்விட்டதே!” என்று வருத்தத்தோடு சொன்னாள். “ஆண்டவரைக் கோயிலுக்குச் சென்று தரிசிக்க முடியாவிட்டாலும், நம்மால் இந்தப் பெரியவரில் தரிசரிக்க முடிந்ததே! அதற்காக நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்” என்று கண்களில் ஒளி மிக்கச் சொன்னான் அமலன்.
ஆம், கடவுள், அவரது சாயலாகப் படைக்கப்பட்ட ஒவ்வொருவரிலும் இருக்கின்றார். அதனால் மனிதர்களை நாம் அன்பு செய்வதன்மூலம் கடவுளை அன்பு செய்பவர்களாகின்றோம். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, அன்பின் இரண்டு பக்கங்களை விவரிக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
எருசலேம் திருக்கோயிலை இயேசு தூய்மைப்படுத்திய பிறகு, அவரைச் சூழ்ச்சியால் வீழ்த்தவேண்டும் என்பதற்காக, அதிகாரத்தில் இருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக அவரைச் சோதிக்கும் நோக்குடன் அவரிடம் ஒரு கேள்வியோடு வருகிறார்கள். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, எழுவரை மணந்த ஒரு பெண் உயிர்த்தெழுதலின்போது யாருக்கு மனையவியாவார்… போன்ற கேள்விகளுக்கு இயேசு தெளிவாய்ப் பதிலளித்ததைத் தொடர்ந்து, பரிசேயர் அதாவது திருச்சட்ட அறிஞர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், அனைத்திலும் முதன்மையான கட்டளை எது என்ற கேள்வியோடு வருகின்றார். இயேசு அவரிடம் இணைச்சட்ட நூல் 6: 5, லேவியர் 19: 18 ஆகிய இரண்டு இறைவார்த்தைப் பகுதிகளை இணைத்து, கடவுளை அன்புசெய்வது முதன்மையான கட்டளை; அடுத்திருப்பவரை அன்பு செய்வது அதற்கு இணையான கட்டளை என்கிறார்.
இவ்விரு கட்டளைகளுக்கும் எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றார்கள் இன்றைய முதல் வாசகத்தில் வரும் நகோமியும் ரூத்தும். நகோமி தன் மருமகளாகிய ரூத்தை மகளாகப் பாவித்து அன்பு செய்கின்றார். ரூத்தோ தான் வழிபட்டுவந்த கடவுளை அன்பு செய்வதை விட்டுவிட்டு, இஸ்ரயேலின் கடவுளான யாவேயை அன்பு செய்கின்றார். இவ்வாறு இருவரும் இறையன்புக்கும் பிறரன்புக்கும் நல்ல எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றார்கள். நாம் ஆண்டவரையும் அயலாரையும் அன்பு செய்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
 செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் (1 யோவா 3: 18).
 கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக்கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர் (1 யோவா 4: 20).
 அன்பே திருச்சட்டத்தின் நிறைவு (உரோ 13: 10).
ஆன்றோர் வாக்கு:
‘மற்றவரைத் தீர்ப்பிட்டுக்கொண்டே இருந்தால், அவர்களை அன்பு செய்வதற்கு உங்களுக்கு நேரம் இருக்காது’ என்பார் கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா. ஆகையால், நாம் ஆண்டவரையும் அடுத்திருப்பவரையும் அன்பு செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.