#வாசக மறையுரை (ஆகஸ்ட் 18)

பொதுக்காலம் இருபதாம் வாரம் புதன்கிழமை
I நீதித் தலைவர்கள் 9: 6-15
II மத்தேயு 20: 1-16
“நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?”
ஆண்டவர் நல்லவர்:
ஒரு கல்லூரில் ஒன்றாகப் படித்துவந்த நான்கு மாணவர்கள் வெளியே ஓர் அறை எடுத்துத் தங்கியிருந்தார்கள். ஒரு சனிக்கிழமை மாலையில் அவர்கள் இருந்த அறைக் கதவு தட்டப்படும் சத்தம்கேட்டு ஒருவர் போய்க் கதவைத் திறந்தார். எதிரில் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக ஒரு பெரியவர் நின்றுகொண்டிருந்தார். சாப்பிட்டு இரண்டு மூன்று நாள்கள் ஆகியிருப்பதுபோல் இருந்த அந்தப் பெரியவர்மீது பரிவுகொண்ட நான்கு மாணவர்களும், அவருக்கு உணவு வாங்கிக்கொடுத்து, கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
அடுத்த சனிக்கிழமை மாலைவேளையில், நான்கு மாணவர்களும் அறையில் இருந்தபொழுது கதவு தட்டப்பட்டது. ஒருவர் சென்று கதவைத் திறந்தபோது, முன்பு வந்த அதே பெரியவர் அங்கே நின்றுகொண்டிருந்தார். அன்றைக்கும் அவர்கள் அவருக்கு உணவு வாங்கிக்கொடுத்து, கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் தங்கள் அறைக்கு வந்ததும், ‘அடிக்கடி நமது அறைக்கு வரும் இந்தப் பெரியவர் யார், இவர் எங்கிருக்கின்றார் என்று தேடிப்பார்த்து, ஒருவேளை இவருக்கு உண்மையிலேயே உதவி தேவைப்பட்டது என்றால், உரிய உதவியைச் செய்வோம்’ என்று பேசி முடிவெடுத்தனர்.
இதையடுத்து அவர்கள் அந்தப் பெரியவர் யார், எங்கிருக்கின்றார் என்பன குறித்து அறிய முற்பட்டபொழுது, அவர் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர் என்பதும், இதய நோயாளர் என்பதும் தெரிய வந்தது. இதனால் அவர்கள் தங்களிடமிருந்த பணத்தைக் கொண்டு, துணிமணிகளையும், மளிகைச் சாமான்களையும் வாங்கி, இரவோடு இரவாக அவருடைய வீட்டிற்கு முன்பாக வைத்துவிட்டுத் தங்கள் அறைக்குத் திரும்பி வந்துவிட்டனர்.
மறுநாள் பெரியவர் அவர்களைப் பார்க்க வந்தார். அன்று அவரது முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி! அவர்கள் அவரைத் தாங்கள் இருந்த அறைக்குள் அழைத்து அவரோடு பேசுகையில், அவர் அவர்களிடம், “ஆண்டவர் நல்லவர்” என்றார். முந்தைய நாள் இரவில் தாங்கள் அவரது வீட்டிற்கு முன்பாக வைத்திருந்த துணிமணிகளையும் மளிகைச் சாமான்களையும் பார்த்துவிட்டுத்தான் இவர் இப்படிச் சொல்கின்றார் போலும்’ என்று நினைத்துக்கொண்டு நான்கு இளைஞர்களில் ஒருவர் அவரிடம், “கடவுளை ஏன் நல்லவர் எனச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, அவர், “இன்று நான் என் வீட்டுக் கதவைத் திறந்து பார்த்தபோது, ஒரு பையில் துணிமணிகளும் மளிகைச் சாமான்களும் இருந்தன. யாரோ ஒருவர் என்மீது இரக்கப்பட்டு இப்படியொரு செயலைச் செய்திருக்கின்றார் என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் அதிலிருந்து ஒருசில துணிமணிகளையும் கொஞ்சம் மளிகைச் சாமான்களையும் எடுத்துக்கொண்டு, என்னிலும் வறியவர்களாய், அடுத்த தெருவில் இருந்த ஒரு குடும்பத்திற்குக் கொடுத்தேன். ஆண்டவர் எனக்கு மட்டுமல்லாமல், என்னிலும் வறிய ஒருவருடைய குடும்பத்திற்கும் துணிமணிகளையும் மளிகைச் சாமான்களையும் கொடுத்திருக்கின்றார் அல்லவா! அதனால்தான் அவர் நல்லவர் என்று கூறினேன். என்றார். இதைக் கேட்டு அந்த நான்கு பேரும் மிகவும் வியப்படைந்தனர்.
ஆம், கடவுள் நல்லவர்; அவர் தன் கைவிடாமல், தாராளமாக வழங்குகின்றார். அதனைத்தான் இந்த நிகழ்வும் இன்றைய இறைவார்த்தையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இஸ்ரயேலில் அறுவடைக் காலத்தில் எவ்வளவு பணியாளர்களைக் கொண்டு அறுவடை செய்யமுடியுமோ, அவ்வளவு பணியாளர்களைக் கொண்டு அறுவடை செய்வார்கள். இந்தப் பின்னணியில் இயேசு சொல்லும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமையில் வரும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, அந்த நாளின் முடிவில் தன் மேற்பார்வையாளரிக் கொண்டு, கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவரை ஒரு தெனாரியம் கூலியாகக் கொடுக்கின்றார்கள். இதனால் முதலில் வந்தவர்கள் தங்களுக்கு அநீதி இழக்கப்பட்டதாகச் சொல்கின்றபோது, திராட்சைத் தோட்ட உரிமையாளர், உங்களிடம் பேசியது போன்று ஒரு தெனாரியம் உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்பட்டுவிட்டது. கடைசியாக வந்தவருக்கு ஒரு தெனாரியம் கூலியாகக் கொடுப்பது என் விருப்பம் என்கிறார். இதன் மூலம் வறியவர்கள், எளியவர்கள் ஆகியோர்மீது கடவுள் தன் அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார் என்ற உண்மையை எடுத்துக்கூறப்படுகின்றது..
சமூகத்தில் வறிய நிலையில் உள்ளவர்மீது நாம் அன்போடும் இரக்கத்தோடும் இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
 திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள் (எசாயா 1: 17)
 ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார் (நீமொ 14: 21)
 தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ ஆண்டவர் கருணை காட்டுவார் (நீமொ 3: 34)
இறைவாக்கு:
‘ஆண்டவர் எளியோர்க்கு அடைக்கலமாய் இருக்கின்றார்’ (திபா 14: 6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகவே, ஆண்டவர் எளியோர்க்கு அடைக்கலமாய் இருப்பது போல், நாமும் அடைக்கலமாய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.