இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“அஞ்சுதற்குரிய கடவுள் அவரே. அவர் ஓரவஞ்சனை செய்வதில்லை; கையூட்டு வாங்குவதும் இல்லை. அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அன்னியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே. அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்;” என வாசித்தோம்.
ஓரவஞ்சனை செய்யாதிருத்தல், கையூட்டு வாங்காதிருத்தல், அன்னியருக்கு அன்பு செலுத்துதல் ஆகிய அவரது குணநலன்களை ஆண்டவர் நம்மிடமும் எதிர்பார்க்கின்றார். நாம் அவரது விருப்பங்களை நிறைவேற்ற இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில் இயேசு கோயில் வரியாக இரண்டு திராக்மா செலுத்துவதைக் குறித்துப் படிக்கின்றோம். இயேசு இறைமகன் என்பதால், கோயில் வரி கட்டத் தேவையில்லை. ஆனாலும் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் அவர் வரி கட்டுவதைக் காண்கிறோம்.
நாம் முழு உள்ளத்தோடு, முறுமுறுக்காமல் கோவில் வரியையும், காணிக்கைகளையும் செலுத்துகின்றோமா? என சிந்தித்துப் பார்க்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
ஹிட்லரின் நாஜி படைகளினால் சித்திரவதைகளுக்கு உள்ளாகி மறைசாட்சியாக மரித்தவரும், இன்றைய புனிதருமான சிலுவையின் புனிதர் தெரெசா பெனடிக்டாவிடமிருந்து நாம் துணிவினைக் கற்றுக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நமது பேச்சிலும், செயலிலும் தூய ஆவியானவர் நம்மை நன்கு வழி நடத்திட தேவையான ஞானத்தைத் தந்தருள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.