ஆகஸ்ட் 9 : நற்செய்தி வாசகம்

மானிட மகனைக் கொலை செய்வார்கள்; அவர் உயிருடன் எழுப்பப்படுவார்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 22-27.
அக்காலத்தில்
கலிலேயாவில் சீடர்கள் ஒன்றுதிரண்டிருக்கும் போது இயேசு அவர்களிடம், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார். அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்” என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள்.
அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தபோது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?” என்று கேட்டனர். அவர், “ஆம், செலுத்துகிறார்” என்றார்.
பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, “சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?” என்று கேட்டார். “மற்றவரிடமிருந்துதான்” என்று பேதுரு பதிலளித்தார்.
இயேசு அவரிடம், “அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல. ஆயினும் நாம் அவர்களுக்குத் தடையாய் இருக்கக் கூடாது. எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
ஆண்டவருக்குப் பணிந்து நடந்தால், எல்லாம் நலமாகும்
பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம் திங்கட்கிழமை
I இணைச்சட்டம் 10: 12-22
II மத்தேயு 17: 22-27
ஆண்டவருக்குப் பணிந்து நடந்தால், எல்லாம் நலமாகும்
ஆண்டவருக்குப் பணிந்து நடந்த முன்னாள் குடிகாரர்:
ஒரு காலத்தில் பெரிய குடிகாரராக இருந்து, கடவுளின் வார்த்தையால் தொடப்பட்டு, அவருக்குப் பணிசெய்து வந்தார் ஒருவர். இவர் குடியை அறவே விட்டுவிட்டு இறைப்பணியை செய்து வந்தபோது, சாத்தானை இவரைப் பலமுறை சோதித்தது. ஒருநாள் இவர் தன் நிலத்தில் வளர்த்த உருளைக் கிழங்குகளைக் கொத்தி எடுத்துக்கொண்டிருந்தார். அப்பொழுது சாத்தான் இவரிடம், “கடவுளை நீ அன்புசெய்யும் அளவுக்கு, அவருக்கு உன்மேல் அன்பு இல்லை. ஒருவேளை அவருக்கு உன்மேல் அன்பு இருந்தால், நீ வளர்த்த உருளைக் கிழங்குகள் பெரிது பெரிதாக விளைந்திருக்கும்! கடவுளுக்கு உன் மேல் அன்பு இல்லாததால்தான், உருளைக் கிழங்குகள் இப்படிச் சிறிது சிறிது விளைந்திருக்கின்றன” என்றது.
சாத்தான் இவ்வாறு சொல்லி முடித்ததும் இவர், “கடவுளுக்கு என்மேல் அன்பு இல்லாததால், அவர் உருளைக்கிழங்குகளைச் சிறிது சிறிதாக விளையச் செய்திருக்கின்றார் என்கிறாய். கடவுளை நான் அன்புசெய்து, அவருக்குப் பணிந்து நடப்பதற்கு முன், உன்னை அன்புசெய்து, உனக்குப் பணிந்து நடந்தேன். அப்பொழுதும் நான் என் நிலத்தில் உருளைக் கிழங்குகளைத்தான் பயிரிட்டிருந்தேன். ஆனால், எதுவுமே விளையவே இல்லை. இப்பொழுது சொல், உன்னை அன்பு செய்து, உனக்குப் பணிந்து நடந்ததால் எதுவுமே கிடைக்காதற்கு, கடவுளை அன்பு செய்து அவருக்குப் பணிந்து நடந்ததால், சிறிது சிறிதாக உருளைக் கிழங்குகள் விளைந்திருப்பது பெரிதல்லவா!” என்றார். இதற்குச் சாத்தானால் எதுவுமே பேச முடியாமல், அங்கிருந்து மறைந்தது.
ஆம், ஆண்டவரை அன்பு செய்து அவருக்குப் பணிந்து நடந்தால் அவரது ஆசி நமக்கு நிச்சயம் கிடைக்கும். அதைத்தான், இந்தக் கதையும், இன்று நாம் படிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஆண்டவருக்கு அஞ்சி, அவர் வழி நடந்து, அவரை அன்பு செய்யவேண்டும் – இதுதான் இன்றைய முதல் வாசகத்தில் மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கும் கட்டளையாகும். இக்கட்டளையின்படி அவர்கள் நடந்தால் எல்லாம் நலமாகும் என்கிறார் மோசே. இஸ்ரயேல் மக்கள் மோசே வழியாக ஆண்டவர் கொடுத்த இக்கட்டளைக் கடைப்பிடிக்காமல், வேற்று தெய்வங்களை வழிபட்டார்கள. அதனால் கடவுளிடமிருந்து ஆசியைப் பெறாமல் தண்டனையைப் பெற்றார்கள்.
நற்செய்தியில் இயேசு கோயில் வரியாக இரண்டு திராக்மா செலுத்துவதைக் குறித்துப் படிக்கின்றோம். இயேசு இறைமகன் என்பதால், கோயில் வரி கட்டத் தேவையில்லை; ஆனாலும் பிறருக்குக் இடறலாக இருக்கக்கூடாது என்பதாலும், கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதாலும் (விப 30: 13, 14) அவர் கோயில் வரி கட்டுகின்றார். இவ்வாறு இயேசு கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர் ஆகின்றார். நாம், ஆண்டவருக்கு அஞ்சி, அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
 உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட (இச 6: 13).
 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழியில் நடப்போர் பேறுபெற்றோர் (திபா 128: 1).
 நாம் யாருக்கு அஞ்சி நடக்கின்றோம், ஆண்டவருக்கா? அலகைக்கா?
இறைவாக்கு:
‘ஆண்டவர்மீது அன்புகூர்வோருக்கு தம் இரக்கத்தின் உடன்படிக்கையைக் காக்கின்றவர் அவர்’ (இச 7: 9) என்கிறது இறைவார்த்தை. எனவே, நாம் ஆண்டவர்மீது அன்பு கூர்ந்து, அவர் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.