இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்
“உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் தம் கைகளில் தாங்கிக் கொண்டிருந்தார். மோசே கடவுளோடு பேசியதால் அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்தது. ” என வாசித்தோம்.
உடன்படிக்கைப் பலகையில் உள்ள பத்துக் கட்டளைகளையும் கடைபிடித்து இறைவனின் பிள்ளைகளாக நாம் வாழ்ந்தால் ஒளிமயமான மோசேயின் முகம் போல நம் வாழ்வும் ஒளிமிக்கதாக இருக்கும். நம் வாழ்வு ஒளிமயமிக்கதாக மாற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில்,
“வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச்செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
விண்ணகப் பேரின்பத்தை அடைய இவ்வுலகில் நமக்குரியவற்றை இழக்கத் தயாராக இருப்போம். இறைவனின் முடிவில்லா விண்ணக வாழ்வைக் கைக்கொள்ள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றைய நாள் முழுவதும் நமது பேச்சிலும், செயலிலும் நாம் ஞானத்தோடு செயல்பட தூய ஆவியானவரின் துணையை நாடி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
அனைவருக்கும் அச்சத்தை உண்டாக்கி இருக்கும் கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலை மக்களை அதிகம் பாதிக்காத வகையில் இருக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இவ்வாண்டு விவசாயிகள் எதிர்பார்க்கும் பருவமழை நன்கு பெய்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.