இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.

1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள். ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்; நீங்கள் அமைதியாயிருங்கள்” என மோசே இஸ்ரயேல் மக்களிடம் கூறுவதாக வாசித்தோம்.

இந்த வாரத்தில் நாம் சந்திக்கிக்கப் போகிற அனைத்து பிரச்சனைகள், சிக்கல்கள் அனைத்திற்கும் எதிராக ஆண்டவரே போரிடப் போகிறார் என முழுமையாக விசுவசித்து நாம் மன அமைதி காக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,

இன்றைய திருப்பலி நற்செய்தி முன் வாழ்த்தொலியில்,
“இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!” என வாசித்தோம்.

திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறித்துவர்களும் இறுகிய மனதோடு இல்லாமல் இரக்கமும், கனிவும் நிறைந்த உள்ளத்தோடு இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தியில், “இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

இறைவன் செய்யும் அற்புதங்கள் வேண்டுமா? அல்லது அற்புதங்கள் செய்யும் இறைவன் வேண்டுமா? என்று நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கப்படும் கேள்விக்கு நாம் தூய ஆவியின் ஞானத்தோடு விடையளித்து அதற்கேற்ப செயல்பட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,

இந்த வாரம் முழுவதும் நமது பேச்சிலும், செயலிலும் தூய ஆவியானவர் நம்மை நன்கு வழி நடத்திட தேவையான ஞானத்தைத் தந்தருள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,

தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.