மருத்துமனை ஊழியர்களுக்கு திருத்தந்தையின் நன்றி

தனக்கு அண்மையில் அறுவை சிகிச்சையை நிறைவேற்றிய, உரோம் நகர் ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகக்குழு தலைவர் Carlo Fratta Pasini அவர்களுக்கும், அங்குள்ள பணியாளர்கள் அனைவருக்கும், தன் பாசத்தையும், நன்றியையும் வெளியிட்டு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு குடும்பத்தில் இருப்பதுபோன்ற உடன்பிறந்த நிலை எனும் உணர்வை இந்த ஜெமெல்லி மருத்துவமனையில் தான்  அனுபவித்ததாக, திருத்தந்தையின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மனிதாபிமான உணர்வுகளும், அறிவியல் திறமைகளும் ஒருங்கிணைந்து காணப்படும் இந்த நல மையத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் வருவது குறித்த தன் மகிழ்ச்சியையும் இக்கடிதத்தில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜெமெல்லி மருத்துவமனையில், உடல்நலம் குறித்த சிகிச்சை இடம்பெறும்போது, மனதிற்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கும் வகையில் ஒன்றிணைந்த குணப்படுத்தலும் இடம்பெறுகின்றன என்பதை, தன் மடலில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை, இயேசுவின் காயம்பட்ட உடலைத் தொட்டு நோயாளிகள் ஆறுதலும் குணமும் அடைய, ஜெமெல்லி மருத்துவமனை ஊழியர்கள், தங்களை அர்ப்பணித்து உழைக்கின்றனர், என பாராட்டியுள்ளார்.

ஜெமெல்லி மருத்துவமனையின் ஊழியர்கள் அனைவருக்கும் தன் நன்றியை வெளியிடும் அதேவேளை, அவர்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்குவதாக, தன் கடிதத்தின் இறுதியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.