இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நம்மை தூய ஆவியின் துணைகொண்டு வழி நடத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்திக்குமுன் வாழ்த்தொலியில்
“கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும்.” என கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் ஏற்கும் வல்லமை நமக்குக் கிடைத்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
மனிதர்களைக் கண்டு நாம் ஒரு போதும் அஞ்சக் கூடாது. அந்த மனிதர்களைப் படைத்த நம் தேவன் ஒருவருக்கே அஞ்ச வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டோடு இருக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் தேவையான அளவுக்கு பொது மக்களுக்குக் கிடைத்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
நோய்த்தொற்றின் தீவிரத்தால் மரணித்த அனைவருக்காகவும் பிராத்திப்போம். அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.