ஜூலை 11 : நற்செய்தி வாசகம்

இயேசு பன்னிருவரையும் இருவர் இருவராக அனுப்பினார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-13
அக்காலத்தில்
இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார்.
அவர்களுக்குத் தீய ஆவிகள்மீது அதிகாரமும் அளித்தார். மேலும், “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
மேலும் அவர், “நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று அவர்களுக்குக் கூறினார்.
அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
அனுப்பப்படுதலும் அறிவித்தலும்
பொதுக்காலம் பதினைந்தாம் ஞாயிறு
I ஆமோஸ் 7: 12-15
II எபேசியர் 1: 3-14
II மாற்கு 6: 7-13
அனுப்பப்படுதலும் அறிவித்தலும்
நிகழ்வு
அன்று இறையழைத்தல் ஞாயிறு என்பதால், அந்தப் பங்கின் பங்குப்பணியாளர், இறைப்பணிக்காக மக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கும்மாறு மறையுரையில் குறிப்பிட்டார். திருப்பலி முடிந்ததும், பங்குப் பணியாளரைச் சந்திக்க அந்தப் பங்கில் இருந்த பணக்காரர் ஒருவர் வந்தார். அவர் பங்குப் பணியாளரிடம், “இன்று உங்களுடைய மறையுரையில் இறைப்பணிக்காக மக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்குமாறு சொன்னீர்களே! இறைப்பணிக்காக – மறைப்பணிக்காகப் பண உதவி அல்லது காசோலையை அனுப்பி வைத்தால் போதாதா! பிள்ளைகளை அனுப்பி வைக்க வேண்டுமா?” என்றார்.
பணக்காரர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பங்குப்பணியாளர், அவர் பேசி முடித்ததும் அவரிடம், “மறைப்பணிக்கு பண உதவியோ அல்லது காசோலையோ அனுப்பி வைத்தால் போதாதா… பிள்ளைகளை ஏன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்கின்றீர்கள். ஒன்றை உங்கள் மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்: கடவுள் தன்னுடைய பணி இம்மண்ணுலகில் நடைபெறக் காசோலையை அனுப்பி வைக்கவில்லை. தன் ஒரே மகனான இயேசுவை அனுப்பி வைத்தார். இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும், நான் ஏன் உங்கள் பிள்ளைகள் இறைப்பணிக்காக அனுப்பி வைக்கவேண்டும் என்று” என்றார். பணக்காரரோ எதுவும் பேசமுடியாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
இறைப்பணி செய்ய மக்கள் முன்வரவேண்டும் என்ற உண்மையை உணர்த்தும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளின் அழைப்பையும், அழைக்கப்பட்டவர்கள் எப்படிப் பணிசெய்தார்கள், நாம் எப்படிப் பணி செய்யவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
கடவுள் யாரையும் தன் பணிக்காக அழைக்கலாம்
இன்று எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், பணியாளர்களைத் தகுதி பார்த்துத் தேர்ந்தெடுக்கின்றது; ஆனால், கடவுளுடைய அழைப்பைப் பொறுத்தளவில் இது முற்றிலும் நேர் எதிராக இருக்கின்றது. இந்த உலகம் மடமை அல்லது ‘தகுதியில்லாதவர்கள்’, ‘வலுவற்றவர்கள்’ என்று யாரையெல்லாம் கருதியதோ, அவர்களைக் கடவுள் தம் பணிக்கென அழைக்கின்றார் (1 கொரி 1: 27).
முதல்வாசகத்தில் ஆமோசின் அழைப்பையும், நற்செய்தியில் பன்னிரு திருத்தூதர்களின் அழைப்பையும் குறித்து வாசிக்கிறோம். இறைவாக்கினர் ஆமோஸ் காட்டு அத்திமரத் தோட்டக்காரர், ஆடுகளை ஓட்டிக்கொண்டு இருந்தவர். யூதா நாட்டைச் சார்ந்த அவரைக் கடவுள் வடநாட்டினருக்குத் தன்னுடைய வார்த்தையை அறிவிக்க அழைக்கின்றார். நற்செய்தியில், திருத்தூதர்களாக ஆண்டவர் இயேசு தேர்ந்தெடுத்த பன்னிருவரும் மிகுதியாகப் படித்தவர்கள் கிடையாது. பணக்காரர்களும் கிடையாது. அத்தகையோரை இயேசு தன் பணிக்காக அழைக்கின்றார்.
இதில் நாம் கவனிக்கவேண்டிய செய்தி என்னவெனில், கடவுள் தகுதியில்லாதவர்களைத் தன் பணிக்கென அழைத்தாலும், இறுதிவரைக்கும் அவர்களைத் தகுதியில்லாதவர்களாக வைத்திருக்கவில்லை என்பதுதான். தகுதியில்லாத பன்னிருவரைத் திருத்தூதர்களாகத் தேர்ந்தெடுத்த இயேசு, அவர்களுக்குத் தம் அதிகாரத்தைக் கொடுத்து, அவர்களைத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகின்றார். பழைய ஏற்பாட்டில் வரும் மோசே, இறைவாக்கினர் எசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகியோர் இதற்கு நல்ல சான்றுகள். கடவுள் தகுதியில்லாதவர்களைத் தம் பணிக்கென அழைத்து, அவர்களைத் தகுதியுள்ளவர்களாக மாற்றக் காரணம், இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் சொல்வது போன்று, கடவுள் அவர்களைத் தம் அன்பினால் முன்குறித்து வைத்துள்ளார் என்பதால். எனவே, தம் அன்பினால் முன்குறித்து வைத்தவர்களை – அவர்கள் உலகப் பார்வைக்குத் தகுதியில்லாதவர்களாக இருந்தாலும், அழைக்கின்றார் என்பதால், அழைக்கப்பட்டவர்கள் சொல்லும் செய்தியைக் கேட்பது மிகவும் இன்றியமையாதது.
அனுப்பப்பட்டவர் வழியாகக் கிடைக்கும் ஆசியும் தண்டனையும்
ஆண்டவரால் அழைக்கப்பட்டவர் அறிவிக்கும் நற்செய்தியைக் கேட்பது மிகவும் இன்றியமையாதது என்று மேலே குறிப்பிட்டிருந்தோம். ஏனெனில், அழைக்கப்பட்டவர்கள் அறிவிக்கும் செய்தி, ஆண்டவருடைய செய்தியாக இருக்கின்றது. ஆதலால், ஒருவர் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர் அறிவிக்கும் நற்செய்திக்குச் செவிகொடுப்பதைப் பொறுத்தே அவருடைய உயர்வும் தாழ்வும் இருக்கின்றன என்று உறுதியாகச் சொல்லலாம்.

Comments are closed.