திருத்தந்தை குணமடைய, புற்றுநோய் சிறார் செபம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில், தான் அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெற்றுவரும் சிறாரோடு, தந்தைக்குரிய பாசத்தையும் அருகாமையையும் தெரிவித்தார் என, திருப்பீட தகவல் தொடர்புத் துறையின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்தார்.

இதற்கிடையே, ஜெமெல்லி மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் சிறாரும், இளையோரும், திருத்தந்தை விரைவில் குணம்பெறுவதற்கு தங்கள் வாழ்த்துக்களையும், செபங்களையும் தெரிவித்துள்ளனர்.

இச்சிறாரும், இளையோரும் இணைந்து திருத்தந்தைக்கு அனுப்பியுள்ள மடலில், திருத்தந்தையே, நாம் ஒருவரையொருவர் நேரில் பார்க்க இயலாவிட்டாலும், எங்களது ஆழ்ந்த முத்தங்களையும், நல்வாழ்த்துக்களையும் அனுப்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இன்னும், உரோம் குழந்தை இயேசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜூலியா என்ற சிறுமி, தான் திருத்தந்தையின் கரங்களைப் பற்றிக்கொணடு நடந்த புகைப்படம் ஒன்றை பதிவுசெய்து, அதற்கு அருகில், எனதன்புள்ள திருத்தந்தையே, நான் நோயாய் இருந்தபோது, தாங்கள் எனக்காகச் செபித்ததை உணர்ந்தேன், இப்போது, எனது இறைவேண்டலை தாங்கள் உணர்வீர்கள் என்று எழுதியிருக்கிறார். இதனை அந்த மருத்துவமனை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Comments are closed.