புனித பவுலின் திருத்தூதுப்பணித்துவ அதிகாரம்

இறைவேண்டலை மையப்படுத்திய ஒரு தொடரை பல வாரங்களாக, தன் புதன் மறைக்கல்வியுரைகளில் வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வாரம், ஜூன் 23ம் தேதியன்று, புனித பவுல், கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் காணப்படும் கிறிஸ்தவ படிப்பினைகள் குறித்த ஒரு புதியத்தொடரை துவக்கினார். அதன் தொடர்ச்சியாக, புனித பவுலின் திருத்தூதுப்பணிக்குரிய அதிகாரம் குறித்து, ஜூன் 30, புதன்கிழமையன்று, வத்திக்கானின் புனித தாமாசோ வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடல்  குறித்த நம் புதன் மறைக்கல்வித் தொடரில், இன்று, புனித பவுல் எவ்வாறு தன் திருத்தூதுப்பணிக்குரிய அதிகாரத்தை கையாண்டார் என்பதைச் சிந்திப்போம். கிறிஸ்துவால் கொணரப்பட்ட புதிய வாழ்வு குறித்த தன் போதனையை, ஒரு தந்தைக்குரிய அக்கறையுடன் கலாத்தியருக்கு நினைவூட்டுகிறார் புனித பவுல். மேலும், மோசேயின் சட்டங்களிலிருந்து நற்செய்தி வழங்கும் விடுதலையைப் பற்றியும் எடுத்துரைக்கிறார். ஒரு திருத்தூதர் என்ற வகையில், தன் அதிகாரம் பற்றி விளக்குகிறார் புனித பவுல். திருஅவையை சித்ரவதைப்படுத்துபவராக இருந்த தான், எவ்வாறு இறைவனின் கருணையால் அழைப்புப் பெற்று, உயிர்த்த கிறிஸ்துவை அறியவும், அனைத்து நாடுகளுக்கும் திருத்தூது உரைப்பவராகவும் மாறிய, தன் மனமாற்ற பயணத்தை விவரிக்கிறார் அவர். இறைஇரக்கத்தின் வல்லமை தன் வாழ்வில் செயல்படுவதை வலியுறுத்திக் கூறும் புனித பவுல், நம் வாழ்விலும், கடவுள், எவ்வாறு நுழைகிறார் என்பதையும், தூயஆவியாரால் நம்மை எவ்வாறு புதுப்பித்து மாற்றியமைக்கிறார் என்பதையும், நற்செய்தியையும் அதன் விடுதலைச் செய்தியையும் வழங்கும் மறைப்பணியாளர்களாக இறைவன் எவ்வாறு நம்மைப் பலப்படுத்தி மாற்றுகிறார் என்பதையும், நாம் ஆழமாக சிந்திக்க அழைப்பு விடுக்கிறார்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையர்களின் வாகன ஓட்டுநராக பணியாற்றி, ஜூன் 30, இப்புதனன்று பணி ஒய்வு பெறும் Renzo Cestiè அவர்களுக்கு தான் ஆழ்நத நன்றியைத் தெரிவித்தார்.  வத்திக்கானில், கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், பெண்துறவியர், பொது நிலையினர் என எண்ணற்றோர் பணிபுரியும் நிலையில், 14 வயதில், வத்திக்கானில் பணியாற்றத்துவங்கி, தற்போது பணி ஓய்வுபெறும் Renzo  அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன் என்றார் திருத்தந்தை. இந்த வேளையில், வத்திக்கானில் பணிபுரியும் அனைத்து பொதுநிலையினருக்கும் நன்றியுரைப்பதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள விழைகிறேன், எனக்கூறி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.