கரூர் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு பேராயரின் இரங்கல் செய்தி

தமிழகத்தில் கடந்த 27-09-2025 அன்று, கரூரில் நடைபெற்ற ஓர் அரசியல் கட்சிக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி நம் இதயங்களுக்குத் துயரத்தை அளிக்கிறது என்றும், அதிலும் குறிப்பாக, குழந்தைகளும் பெண்களும் அதிக அளவில் உயிரிழந்த பரிதாபம் மிகுந்த வேதனையைத் தருகிறது என்றும் இரங்கல் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார் சென்னை மயிலை உயர்மறைமாவட்டப் பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி.

உறவுகளை இழந்தவர்களின் குடும்பங்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் தமிழக ஆயர் பேரவை இறைவேண்டல் கலந்த ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று அவ்விரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ள பேராயர் அவர்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் சகோதர சகோதரிகள் விரைவில் நலம் பெறவும் கடவுளிடம் இறைவேண்டல் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எதிர்பாராத பெருந்துயர் நிகழ்வு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஆழ்ந்த துயரத்தைத் தருகிறது என்றும், இறைவேண்டல்கள் வழியாகப் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு நெருக்கத்தை உறுதியளித்தார் திருத்தந்தை. ஆறுதல் அருளும் இறைவன், இறந்தவர்களுக்கு நிலை வாழ்வை வழங்குவாராக என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராயர்.

துயரமான தருணத்தை தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் வேளையில், உறவினர்களின் இழப்பினால் துயருறும் குடும்பங்கள் அமைதியும் ஆறுதலும் வலிமையும் நம்பிக்கையும் பெற்றுக்கொள்ள இறைவனை இறைஞ்சுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ள பேராயர் அவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் உடல் நலம் மற்றும் ஆன்ம நலம் பெற்றிட எங்கள் இறைவேண்டல்களில் அவர்களை நினைவுகூருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.