கிறிஸ்துவின் உயிர்ப்பை பறைசாற்றுவது முக்கியப் பணி

கிறிஸ்தவம் எவ்வாறு உயிர்வாழும் என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு, கிறிஸ்து உயிர்த்துவிட்டார் என்ற நற்செய்தியை இவ்வுலகினரோடு பகிர்ந்துகொள்வது நமக்கு மிகவும் முக்கியம் என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் தலைமை ஆயர் ஒருவர் கூறினார்.

ஜூன் 29, இச்செவ்வாயன்று, திருத்தூதர்களான புனித பேதுரு, புனித பவுல் ஆகியோரின் பெருவிழா சிறப்பிக்கப்பட்ட வேளையில், இவ்விழாவை, கத்தோலிக்கத் திருஅவையுடன் இணைந்து கொண்டாட வந்திருந்த, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமையேற்றிருந்த Chalcedon உயர் பீடத்தின் தலைமை ஆயர் எம்மானுவேல் அவர்கள் இவ்வாறு கூறினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் முதுபெரும் தந்தை பார்த்தலோமேயு அவர்களின் சார்பில் வத்திக்கானுக்கு வருகை தந்திருந்த தலைமை ஆயர் எம்மானுவேல் அவர்கள், திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர் – முனைவர் Andrea Tornielli அவர்களுக்கு வழங்கிய ஒரு நேர்காணலில், கிறிஸ்தவர்கள் இவ்வுலகுடன் கொள்ளும் தொடர்பில் இன்னும் முன்னேற்றம் தேவை என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

உரோமைய ஆயரான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள Laudato si’ மற்றும் Fratelli tutti என்ற இரு திருமடல்களும், உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் இணைந்து ஆற்றக்கூடிய பல்வேறு பணிகளைப்பற்றிய சவால்களை வழங்கியுள்ளது என்று தலைமை ஆயர் எம்மானுவேல் அவர்கள் எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பார்த்தலோமேயு அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக கடவுளின் படைப்பைக் குறித்து காட்டிவரும் அக்கறை, தற்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மடல் வழியே இன்னும் கூடுதலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று கூறிய தலைமை ஆயர் எம்மானுவேல் அவர்கள், இயற்கையின் மீது நாம் காட்டும் அக்கறை, கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல்களுக்கு பெரும் உந்துசக்தியாக அமையும் என்று சுட்டிக்காட்டினார்.

அடைப்படை வாதமும், மதவாதக் கொள்கைகளும் மனித வரலாற்றில் அண்மையில் தோன்றிய தவறுகள் அல்ல என்பதை தன் பேட்டியில் குறிப்பிட்ட தலைமை ஆயர் எம்மானுவேல் அவர்கள், “மதத்தின் பெயரால் குற்றங்கள் செய்வது, மதத்திற்கு எதிராகச் செய்யபப்டும் மாபெரும் குற்றம்” என்று 1992ம் ஆண்டு முதுபெரும் தந்தை பார்த்தலோமேயு அவர்கள் கூறியதை நினைவுறுத்தினார்.

2023ம் ஆண்டு வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம் குறித்தும், நிசேயா பொதுச் சங்கத்தின் 1700ம் ஆண்டு நிறைவு 2025ம் ஆண்டு வரவிருப்பதையும் குறிப்பிட்ட தலைமை ஆயர் எம்மானுவேல் அவர்கள், இத்தருணங்கள், கிறிஸ்தவர்களின் ஒன்றிப்பை வளர்க்கும் தருணங்களாக அமையவேண்டும் என்ற தன் விருப்பத்தையும் வெளியிட்டார்.

Comments are closed.