ஜூன் 8 : நற்செய்தி வாசகம்

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!
அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————–
“நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்”
பொதுக்காலம் பத்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I 2 கொரிந்தியர் 1: 18-22
II மத்தேயு 5: 13-16
“நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்”
உப்பைவிட உங்களை அன்பு செய்கிறேன்:
மன்னர் ஒருவர் இருந்தார். இவருக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். ஒருநாள் இவர் தன் மூன்று மகன்களையும் ஒருவர் பின் ஒருவராக அழைத்து, “நீ என்னை எவ்வளவு அன்பு செய்கின்றாய்?” என்றார். முதலாவது மகன், “இந்த உலகிலுள்ள பொருள்கள் எல்லாவற்றையும்விட நான் உங்களை அன்புசெய்கின்றேன்” என்றான். இரண்டாவது மகன், “நான் உங்களை இந்த உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தையும்விட அன்பு செய்கின்றேன்” என்றான். கடைசி மகன், “நான் உங்களை உப்பைவிட அன்பு செய்கின்றேன்” என்றான்.
கடைசி மகன் இவ்வாறு சொன்னதுதான் தாமதம், மன்னருக்குச் சினம் தலைக்கு ஏறியது. “மற்ற இருவரும் என்னை இவ்வுலகில் உள்ள பொருள்களை விடவும், உயிரினங்களை விடவும் அன்பு செய்யும்பொழுது, நீ மட்டும் உப்பை விட அன்புசெய்கின்றாயா? உன் மனத்தில் என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கின்றாய்?” என்று. மன்னர் அவனைச் சிறையில் அடைத்தார்.
மன்னருடைய கடைசி மகன்மீது அரண்மனையில் இருந்த தலைமைச் சமையற்காரருக்குத் தனிப்பட்ட அன்பு இருந்தது. அவர் நடந்ததைக் கேள்விப்பட்டுச் சிறைக்கு வந்தார். அப்பொழுது கடைசி மகன் அவரிடம், “நான் சிறையிலிருந்து வெளியே வருவது உங்களுடைய கையில்தான் இருக்கின்றது… நீங்கள் உணவு சமைக்கும்பொழுது மூன்று நாள்களுக்கு உணவில் உப்புப் போடாதீர்கள். அப்படிச் செய்தால் நான் சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவேன்” என்றான். தலைமைச் சமையற்காரரும் சரியென்று சொல்லிவிட்டு, அவ்வாறே செய்தார். இதனால் மன்னர் உட்பட அரண்மனையில் இருந்த யாவரும் ‘உணவில் ஏதோ ஒன்று குறைகின்றதே!’ என்று தலைமைச் சமயற்காரரிடம் புலம்பினர். அப்பொழுது அவர் மன்னரிடம் உணவில் உப்புப்போடவில்லை என்று சொன்னபிறகுதான், மன்னருக்கு உப்பின் மகத்துவம் புரிந்தது. பிறகு அவர் தன் கடைசி மகன்தான் மற்ற எல்லாரையும் தன்னை மிகுதியாக அன்புசெய்கின்றான் என்பதை உணர்ந்து, அவனை விடுதலை செய்தார்.
ஆம், உணவில் உப்பு மிகவும் இன்றியமையாதது. நற்செய்தியில் இயேசு, “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கின்றீர்கள்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தமிழில் நாம் அறுசுவைகளைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு என்றுதான் குறிப்பிடுகின்றோம். இதில் நாம் கவனிக்கவேண்டியது எல்லா வார்த்தைகளும் ‘உப்பு’ என்று முடிவதைத்தான். இதன்மூலம் உப்பு உணவில் எவ்வளவு முக்கியமான பங்கை வகிக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். பழங்காலத்திலும் சரி, இன்றைக்கும் சரி உப்பை உணவிற்குச் சுவையூட்டுவதற்கு மட்டுமல்லமல், பொருள்களைப் பதப்படுத்துவதற்கும் மக்கள் பயன்படுத்துகின்றார்கள். இதையெல்லாம் அறிந்தவராய் இயேசு தன் மலைப்பொழிவில், “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கின்றீர்கள்” என்கிறார். அப்படியானால், நாம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் வாழவேண்டாமா?.
சிந்தனைக்கு:
 உப்பில்லாத பண்டம் குப்பையிலே; உயர்ந்த இலட்சியங்களுடன் வாழாத மனிதரும் குப்பையிலே
 நீங்கள் மிகுந்த கனிதந்து, என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது (யோவா 15: 😎
 நமது வாழ்க்கை பலருக்கும் நலம்பயப்பதாக இருக்கின்றதா?
ஆன்றோர் வாக்கு:
‘மகிழ்ச்சியாகவும் பயனுள்ளவிதமாகவும் இருப்பதே மனித வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்’ என்பார் பதினான்காம் தலாய் லாமாவான டென்சின் கியாட்சோ. எனவே, நாம் கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையைப் பயனுள்ளவிதமாய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.