வாசக மறையுரை (ஜூன் 01)

பொதுக்காலம் ஒன்பதாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I தோபித்து 2: 9-14
II மாற்கு 12: 13-17
ஏரோதியரின் வெளிவேடத்தை அறிந்த இயேசு
ஹிட்லரின் வெளிவேடம்:
இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றொழித்த அடால்ப் ஹில்டரைப் பற்றிச் சொல்லப்படுகின்ற செய்தி இது:
ஹிட்லர் ஜெர்மனியை 1933 ஆம் ஆண்டிலிருந்து 1945 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தை ஒரு சர்வாதிகாரியைப் போன்று ஆள்வதற்கு முன்பாக, அடிக்கடி கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளப் பயன்படுத்துவான். தான் ஜெர்மனியின் தலைவராக உயர்ந்த பின், மன்னிப்பும் அன்பும்தான் நாட்டின் தூண்களாக இருக்கும் என்பான். மட்டுமல்லாமல், ஆன்மிகக் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி, அவற்றைக் கிறிஸ்தவர்கள் நடத்தி வந்த பத்திரிகைகளுக்கு அனுப்புவான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, திருவிவிலியத்திலிருந்தே தான் ஆற்றலையும் உந்து சக்தியையும் பெறுவதாகப் பேசுவான். இதனால் கிறிஸ்தவர்கள் அவனைக் கடவுள் அனுப்பிய தூதராகவே எண்ணினார்கள்.
ஆனால், அவன் ஆட்சிக்கட்டிலில் ஏறிய பின் கிறிஸ்தவர்களைக் கொன்றொழித்தான்; கிறிஸ்தவ மறைப்பணியாளர்களைச் வதைமுகாமில் தள்ளிப் பலவாறாகச் சித்திரவதை செய்தார். இன்னும் பல்வேறு கொடுமைகளை அவர்களுக்குச் செய்தான். இதையெல்லாம் பார்த்துவிட்டுக் கிறிஸ்தவர்கள், ‘இவன் இப்படியெல்லாம் மாறுவான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! என்று அதிர்ந்துபோயினர் (Today in the World, June 3, 1989)
ஆம். வெளித்தோற்றத்திற்கு நல்லவனாகவும், உண்மையில் கொடுமையானவனாகவும் இருந்த ஹிட்லரைப் போன்றுதான் பலர் இன்றைக்கு நம் நடுவில் வலம்வந்து கொண்டிருக்கின்றார்கள். நற்செய்தியில் இயேசுவைச் சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்ற எண்ணத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, வெளியே இயேசுவைப் பற்றி உயர்வாகப் பேசும் ஏரோதியார்களைக் குறித்துப் படிக்கின்றோம். இவர்களுக்கு இயேசு என்ன பதிலளித்தார் என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்திய நிகழ்வு, அவரது காலத்தில் வாழ்ந்த அதிகாரவர்க்கத்திற்குச் சவால் விடுவதாகவே இருந்தது. இதனால் அதிகாரத்தில் இருந்தவர்கள் ஒருவர் மாற்றி ஒருவராக அவரைப் பேச்சில் சிக்க வைக்க, அவரிடம் வருகின்றார்கள். அப்படி வந்தவர்களில் முதலாவதாக வந்தவர்கள்தான் ஏரோதியர். இவர்கள் பரிசேயர்களால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள். இந்தப் பரிசேயர்கள் உரோமையர்கள் தங்களை ஆட்சிசெய்வதை அறவே வெறுத்தார்கள்; ஆனால், ஏரோதியர் உரோமையர்கள் ஆட்சி செய்வதை ஆதரித்தார்கள். இப்படி இருவேறுபட்ட குழுக்கள் இயேசுவை வீழ்த்தவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒன்றிணைந்து செயல்படுகின்றார்கள்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற ஏரோதியர் அவரை, “நீர் உண்மையுள்ளவர், ஆள் பார்த்துச் செயல்படாதவர்…” என்றெல்லாம் புகழ்கின்றார்கள். இயேசு மனிதரின் உள்ளத்தில் என்ன இருக்கின்றது என்று அறிந்திருப்பவர் அல்லவா! (யோவா 2: 25). அதனால் அவர் அவர்களின் வெளிவேடத்தை அறிந்து, அவர்கள் கேட்ட கேள்விக்குச் சரியான பதிலளித்து, அவர்களை வியப்படைய வைக்கின்றார். இங்கு நாம் நமது கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி ஒன்றே ஒன்றுதான், அது என்னவெனில் ஏரோதியரைப் போன்று வெளிவேடத்தனமாக இருக்கக்கூடாது என்பதாகும்.
சிந்தனைக்கு:
 நீங்கள் பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும், ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள் (மத் 5: 37).
 வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே ஐயோ! உங்களுக்குக் கேடு! (மத் 23: 27)
 உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித் திரிவோர் நம் நடுவில் ஏராளம். அவர்கள் மட்டில் கவனம் தேவை.
இறைவாக்கு:
‘தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்’ (மத் 5: 😎 என்பார் இயேசு. எனவே, நாம் வெளிவேடத்தை அகற்றி, தூய்மையான உள்ளத்தோடு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.