வாசக மறையுரை (மே 28)

பொதுக்காலம் எட்டாம் வாரம் வெள்ளிக்கிழமை
I சீராக்கின் ஞானம் 44: 1, 9-12
II மாற்கு 11: 11-26
காய்க்காத அத்தி மரம்
தடம் பதிப்பவர்கள் மாமனிதர்கள்:
துறவி ஒருவர் இருந்தார். இவரிடம் பலர் சீடர்களாக இருந்து பயிற்சி பெற்றார்கள். ஒருநாள் இவர் தன் சீடர்களிடம், “ஒருசில கிராமங்களில் மனிதர்கள் இறக்கக்கின்ற பொழுது, அவர்களைத் தென்னை மட்டையில் பாடைகட்டித் தூக்கிக்கொண்டுபோய், அடக்கம் செய்கிறார்களே, அது ஏன்?” என்றார். இதற்கு ஒவ்வொரு சீடரும் ஒவ்வொரு மாதிரியான பதிலைச் சொன்னார்கள். இறுதியில் ஒரு சீடர் எழுந்து, “தென்னை மரத்திலிருந்து விழும் தென்னைமட்டை, மரத்தில் தனக்கென ஒரு தடத்தைப் பதித்துவிட்டுத்தான் விழுகின்றது. மனிதரும் இந்த மண்ணை விட்டுப் பிரிகின்றபொழுது, தனக்கென ஒரு தடத்தைப் பதித்துவிட்டுச் செல்லவேண்டும் என்பதற்காகத்தான், அவ்வாறு செய்கின்றார்கள்” என்றார்.
ஆம், மனிதர்களாகிய நாம் இந்த மண்ணுலகில் வாழ்ந்ததற்கான தடம் இருக்கவேண்டும். அதற்கு நாம் கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள விதமாய் வாழவேண்டும். அதைத்தான் இந்த நிகழ்வும் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இன்றைய நற்செய்தி வாசகம், இயேசு கிறிஸ்து காய்க்காத அத்திமரத்தைச் சபித்தல், எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்துதல், நம்பிக்கை, இறைவேண்டல் ஆகியவற்றைக் குறித்துப் பேசுதல் ஆகிய பல நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கின்றது. இவையெல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கின்றது என்பதுதான் இதிலுள்ள சிறப்பாகும்.
இயேசு அத்திமரத்தில் கனிகளைத் தேடிய காலம், கனிகொடுக்கின்ற பருவகாலம் கிடையாது. அது கனி கொடுப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஆக வேண்டியிருந்தது. அப்படியிருந்தும் இயேசு அதைச் சபித்தார் என்பதை ஓர் அடையாளமாக எடுத்துக் கொள்ளவேண்டும். அடுத்ததாக, இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்தியதற்குக் காரணம், அதை நிர்வாகம் செய்த தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் முறைகேடாக நடந்து கொண்டார்கள் என்பதால்தான். எனவே, அத்திமரம் சபிக்கப்படுதல், எருசலேம் திருக்கோயில் தூய்மையாக்கப்படல் ஆகிய நிகழ்வுகள், ஒருவர் உரிய பலன் கொடுக்கவில்லை என்றால், அவர் அதற்கான தண்டனை பெறுவது உறுதி என்ற உண்மையை நமக்கு உணர்த்துகின்றன.
இதற்கு முற்றிலும் மாறாக, இன்றைய முதல் வாசகம் இரக்கமுள்ள மனிதர்களாக இருந்தும், நினைவுகூரப்படாத சிலர் இருக்கின்றனர் என்கிறது. எனவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்வில் இரக்கம், அன்பு, போன்ற கனிகளைக் கொடுத்து, இறைவனுக்குச் சான்று பகர்வோம்.
சிந்தனைக்கு:
 நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கின்றது (யோவா 15: 😎.
 ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார் (உரோ 2: 6)
 கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்வைப் பயனுள்ள விதமாய் வாழ்கின்றோமா? சிந்திப்போம்.
ஆன்றோர் வாக்கு:
‘உங்களுடைய வாழ்க்கையின் இலட்சியம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதை விடவும், பயனுள்ளவிதமாய் இருக்க வேண்டும் என்றிருந்தால், உண்மையில் நீங்கள் மாமனிதர்கள்’ என்பார் எமர்சன். ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்வை எல்லாருக்கும் பயன்தரும்படி வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.