நற்செய்தி வாசக மறையுரை (அக்டோபர் 17)

பொதுக்காலம் இருபத்து எட்டாம் வாரம் சனிக்கிழமை
லூக்கா 12: 8-12
ஏற்றுக்கொள்ளுதலும் ஏற்றுக்கொள்ளப்படுதலும்
நிகழ்வு
‘Daily Bread’ என்றோர் இதழில் வெளிவந்த நிகழ்வு இது. ஒரு பள்ளியில் நன்றாக வகுப்பெடுத்துக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் சில நாள்களாகவே மன நிம்மதியில்லாமல், விரக்தியோடு இருந்தார். அவர் மன விரக்தியோடு இருந்ததோடு இருந்தது, அவருடைய வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமல்லாது, பள்ளியில் இருந்த பெரும்பாலானவர்களுக்கு நன்றாகவே தெரிந்தது.
இப்படிப்பட்டவர் ஒருநாள் தன் வகுப்பு மாணவர்களிடம், “மனித வாழ்விற்கு அர்த்தத்தைத் தருவது எது?” என்றொரு கேள்வியைக் கேட்டார். ஒருசில மாணவர்கள் தங்களுடைய உள்ளத்தில் தோன்றிய பதிலை அவரிடத்தில் சொல்லலாம் என்றுதான் நினைத்தார்கள்; ஆனால், அவர்கள், ‘இவரே! மனவிரக்தியில் இருக்கின்றார். இவரிடம் நாம் நமக்குத் தெரிந்ததைச் சொல்ல, பதிலுக்கு இவர் நம்மிடம் ஏதாவது ஏடாகூடமாகச் சொன்னால், அது அவமானமாகிவிடும்’ என்று நினைத்துக்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.
அப்பொழுது ஒரு மாணவி எழுந்தாள்; அவள் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவள். அவள் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், “மனித வாழ்விற்கு அர்த்தத்தைத் தருவது, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு ஏற்றாற்போல் வாழ்வது” என்று சொல்லிவிட்டு அமர்ந்துகொண்டாள். அந்த மாணவி இப்படியொரு பதிலைச் சொன்னதும் ஆசிரியர், அவளிடம், “நீ இந்த வகுப்பு முடிந்ததும் என்னை வந்து பார்” என்றார். இதைக் கேட்டு வகுப்பில் இருந்த மாணவ, மாணவிகள் யாவரும், “இவளுக்கு என்ன ஆகப் போகிறதோ? தெரியவில்லையே!” என்று முணுமுணுக்கத் தொடங்கினார்கள்; ஏனெனில், அந்த ஆசிரியருக்குக் கடவுள் நம்பிக்கையே கிடையாது.
வகுப்பு முடிந்தது. குறிப்பட்ட அந்தக் கிறிஸ்தவ மாணவி வகுப்பு ஆசிரியரைப் போய்ப் பார்த்தாள். அப்பொழுது அவர் அவளிடம், “கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு ஏற்றாற்போல் வாழ்ந்தால், மனித வாழ்விற்கு – என்னுடைய வாழ்விற்கு – அர்த்தம் கிடைத்துவிடுமா?” என்றார். “ஆம் ஐயா! அடிப்படையில் நான் ஒரு பிற சமயத்தைச் சார்ந்தவள். ஏனோதானோ என்று வாழ்ந்துகொண்டிருந்த நான், என்றைக்குக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேனோ, அன்றைக்கே என்னுடைய வாழ்வில் புது அர்த்தம் பிறந்ததை உணர்ந்தேன். அதனால்தான் நான் உங்களிடம் அப்படிச் சொன்னேன்” என்றாள்.
அந்த மாணவி சொன்னதை வியப்பு மேலிடக் கேட்டுக்கொண்டிருந்த ஆசிரியர், “நான் அவ்வாறே செய்கின்றேன்” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து கிறிஸ்தவக் கோயிலுக்குச் சென்று, திருமுழுக்குப் பெற்று, உண்மையான கிறிஸ்தவராக வாழத் தொடங்கினார். இதனால் அவர் தன்னுடைய வாழ்விற்கான அர்த்தத்தைக் கண்டுகொண்டார்.
கடவுள் நம்பிக்கையில்லாத ஆசிரியரிடம், ‘கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால், வாழ்விற்கான அர்த்தம் கிடைக்கும்’ என்று சொன்னால், அவர் என்ன நினைப்பாரோ… சக மாணவ, மாணவிகள் என நினைப்பார்களோ என்பன பற்றியெல்லாம் கவலைப்படாமல், தான் ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவை எல்லாருக்கும் முன் எடுத்துச் சொன்னார் அந்தக் கிறிஸ்தவ மாணவி. இதனால் கடவுள்மீது நம்பிக்கை இல்லாத ஆசிரியரே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார் (Daily Bread, May 08, 1995).
ஆம், நாம் ஒவ்வொருவரும் இந்த நிகழ்வில் வருகின்ற மாணவியைப் போன்று மக்கள் முன்பு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவேண்டும்; அவரை அறிக்கையிட வேண்டும். அதைத் தான் இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவை ஏற்றுக்கொள்வோரை இயேசு ஏற்றுக்கொள்வார்
இன்றைய நற்செய்தி வாசகம், நேற்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கின்றது. நேற்றைய நற்செய்தியில் இயேசு, யாருக்கும் அஞ்சாமல், கடவுளின் பாதுக்காப்பை உணர்ந்து அவரைப் பற்றி அறிவிக்கவேண்டும் என்று சொல்லியிருப்பார். இன்றைய நற்செய்தியிலோ, “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார்….” என்கின்றார்.
தொடக்கத் திருஅவையில், கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டதற்காகப் பலர் உரோமையை ஆண்டுவந்த மன்னர்களால், பலவாறாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் ஒருசிலர் உயிருக்கு அஞ்சி இயேசுவை மறுதலித்து வந்தார்கள். இத்தகைய பின்னணில் தனது நற்செய்தி நூலை எழுதிய லூக்கா நற்செய்தியாளர் “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார்” என்று ஆண்டவர் இயேசு கூறுவதாக எழுதுகின்றார்.
இன்றைக்கும்கூட கிறிஸ்துவ மதிப்பிடுகளின்படி வாழ்வதற்கான பல்வேறு சவால்கள் வந்த வண்ணமாய்த்தான் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையிலும் நாம் இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு உகந்தவர்களாய் வாழ்வதில்தான் நம் தனித்தன்மை இருக்கின்றது.
சிந்தனை
‘இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்’ (மத் 24: 13) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு, அவரை மக்கள் முன் அறிக்கையிட்டு, அவரில் இறுதிவரை நிலைத்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.