நற்செய்தி வாசக மறையுரை (ஆகஸ்ட் 19)

பொதுக்காலம் இருபதாம் வாரம் புதன்கிழமை
மத்தேயு 20: 1-16
“நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை”
நிகழ்வு
அது ஒரு சாதாரண குடும்பம். அந்தக் குடும்பத்தில் அமல், விமல் என்று இரண்டு பையன்கள் இருந்தார்கள். இதில் அமலுக்கு வயது பதினைந்து, விமலுக்கு வயது பதின்மூன்று. அமலுக்கும் விமலுக்கும் அடிக்கடி சண்டை வரும். அந்தச் சண்டையை அவர்களுடைய தாய்தான் தீர்த்து வைப்பார். அமலுக்குத் தன்னுடைய பெற்றோர் தன்னுடைய தம்பிக்குத்தான் எப்பொழுதும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள்; தனக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை என்ற வருத்தம் இருந்துகொண்டே இருந்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், விமல் தன்னுடைய தாயிடம், வீட்டிலுள்ள மிதிவண்டியை எடுத்துச் சிறிதுநேரம் ஓட்டிக்கொள்ளட்டுமா என்று கேட்டதற்கு உடனே சம்மதித்தார் அவனுடைய தாய். இதற்குப் பிறகு விமல் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு ஊரை ஒருமுறை சுற்றி வந்து, மிதிவண்டி இருந்த இடத்தில் அப்படியே வைத்துவிட்டு, விளையாடப் போய்விட்டான்.
இதை அமல் பார்த்துக்கொண்டே இருந்தான். மாலைநேரம் வந்தது. அப்பொழுது அமல் தன் தாயிடம், “அம்மா! மிதிவண்டியைச் சிறிதுநேரம் வெளியே ஓட்டிவிட்டு வரட்டுமா?” என்றான். இதற்கு அவனுடைய தாய், “தம்பி! பொழுது சாய்ந்து, நன்றாக இருட்டிவிட்டது. இந்த நேரத்தில் நீ வண்டியை ஓட்டிக்கொண்டு போனால், யார் மீதாவது இடித்து விடுவாய். அதனால் பெரிய பிரச்சனை வரும். நீ நாளைக் காலையில் வண்டியை எடுத்து ஓட்டிக்கொள்; இப்பொழுது வேண்டாம்” என்றார்.
இதைக் கேட்டு அமலுக்குக் தன் தாயின்மீது கோபம் கோபமாய் வந்தது. “நீங்கள் எப்பொழுது பாராபட்சத்தோடுதான் நடந்துகொள்கிறீர்கள். தம்பி எதையாவது கேட்டால், அதை உடனே கொடுத்துவிடுகிறீர்கள். நான் கேட்டால் மட்டும் அதற்கு மறுப்புச் சொல்கின்றீர்கள். எனக்கு உங்களைக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை” என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் போய் புரண்டு படுத்துக் கொண்டான். இதனால் அவனைச் சமாதானப்படுத்துவதற்காக அவனுடைய தாய்க்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. பின்னர் அமலின் தாய் அவனுக்குப் பிடித்தமான தின்பண்டம் வாங்கிக்கொடுத்தும் அவன் அமைதியானான்.
இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவன் அமலைப் போன்றுதான், இன்றைக்குப் பலர் தங்களுடைய குடும்பத்திலும், தாங்கள் பணிபுரியும் இடத்திலும், கடவுளிடமிருந்தும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை; அநியாயம் இழைக்கப்பட்டுவிட்டது என்று புலம்புவதைக் காண முடிகின்றது. இன்றைய நற்செய்தியில், இயேசு சொல்லக்கூடிய திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமையில் வரும், முதலில் வேலைக்கு வந்தவர்கள் தங்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாகச் சொல்கின்றபொழுது, திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களிடம், நான் உங்களுக்கு அநியாயம் செய்யவில்லை… எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக்கூடாதா? என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த உவமை நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இறைநீதியை எடுத்துச் சொல்லும் இயேசுவின் திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமை
ஆண்டவராகிய கடவுள் எல்லார்மீதும் இரக்கமும் அன்பும் கொண்டிருந்தாலும், சமூகத்தில் உள்ள ஒடுக்கப்பட்டவர்கள், திக்கற்றவர்கள், கைம்பெண்கள் ஆகியோர்மீது அவர் இன்னும் மிகுதியாக அன்பும் இரக்கமும் கொண்டிருக்கின்றார் என்பதை நாம் மறுக்க முடியாது. இதற்குத் திருவிவிலியத்தில் உள்ள ஒருசில பகுதிகள் சான்றாக இருக்கின்றன (எசா 1: 17). இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமைகூட, கடவுள் எளியவர்மீதும் வறியவர்மீதும் மிகுந்த அன்பும் இரக்கமும் பரிவும் கொண்டிருக்கின்றார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது.
இந்த உவமையில் வருகின்ற, காலையில் வந்தவர் முதல் மாலையில் வந்தவர் வரை என எல்லாப் பணியாளர்களுக்கும் ஒரு தெனாரியம் கூலியாகக் கொடுக்கப்படுகின்றது. இது முதல் பார்வைக்கு அநியாயமாகத் தோன்றலாம். ஆனால், கடைசி வந்தவர்களுக்கும் குடும்பம் இருக்கும் என்பதாலேயே திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களுக்கு ஒரு தெனாரியம் கூலியைக் கொடுத்து, அவர்கள்மீதான, அதாவது வறியவர்கள் மீதான தன்னுடைய தனிப்பட்ட அன்பையும் இரக்கத்தையும் காட்டுகின்றார்.
இறைவனின் நீதி அநீதி கிடையாது
திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடைசியில் வந்தவர்களுக்கு ஒரு தெனாரியம் கூலியைக் கொடுத்ததைப் பார்த்த முதலில் வந்த பணியாளர்கள் அவரிடம், “கடைசியில் வந்தவர்களோடு எங்களை இணையாக்கிவிட்டீரே!” என்கின்றார்கள். அப்பொழுதுதான் திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களிடம், நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை; எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா?” என்கின்றார். ஆம், முதலில் வந்தவர்களிடம் ஒரு தெனாரியம் என்று திராட்சைத் தோட்ட உரிமையாளர் பேசியிருந்தார். அவர் பேசியதுபோன்று ஒரு தெனாரியம் கொடுத்தார். அதனால் அவர் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை. மாறாக, வறியவர்கள் பசியாய் இருக்கக்கூடாது என்பதற்காக திராட்சைத் தோட்ட உரிமையாளர், அவர்களுக்குத் தன்னுடைய விருப்பப்படி கொடுத்து, வறியவர்கள்மீது இருக்கும் தன் அன்பை வெளிப்படுத்துகின்றார் (லேவி 19: 13; இச 24: 14-15)
ஆகையால், இந்த உவமையில் வருகின்ற திராட்சை உரிமையாளரைப் போன்று அல்லது கடவுளைப் போன்று வறியவர்கள்மீது நாம் அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்வோம்.
சிந்தனை
‘எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும் நீதி வழங்குங்கள்’ (திபா 82: 3) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம் ஆண்டவரைப் போன்று ஏழைகளுக்கும் எளியோருக்கும் நீதி வழங்கி, அவர்கள்மீது தனிப்பட்ட அன்பு கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.