நற்செய்தி வாசக மறையுரை (ஆகஸ்ட் 12)

பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம் புதன்கிழமை
மத்தேயு 18: 15-20
இருவர், மூவர் இயேசுவின் பெயரின் பொருட்டு ஒன்றாகக்கூடியிருக்கும் இடத்தில் அவர் இருக்கிறார்
நிகழ்வு
ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ளது கென்யா என்ற நாடு. இந்த நாட்டில் மாசை (Masai) என்றோர் இனக்குழு உண்டு. இந்த இனக்குழுவினர் ஆடு மாடு மேய்க்கக்கூடியவர்கள். அதனால் இவர்கள் மேய்ச்சல் நிலங்களில் முகாமிட்டு அங்கு தங்கி இருப்பார்கள்.
இப்படிப்பட்ட மக்களுக்கு நடுவில் திருப்பலி மற்றும் அருளடையாளக் கொண்டாட்டங்களை நிறைவேற்றி வந்த அருள்பணியாளர் ஒருவர் வித்தியாசமானதொரு செயலைச் செய்துவந்தார். அது என்னவெனில், மாசை இனக்குழுவினருக்குத் திருப்பலி நிறைவேற்ற வருகின்றபொழுது, ஓரிரு மைல்களுக்கு முன்னால் முகாமிட்டுவிட்டு, பின்னர் ஒரு கூடை நிறையப் புற்களைச் சேகரித்துக்கொண்டு, அதை அந்த இனக்குழுவின் தலைவரிடம் கொடுப்பார். இனக்குழுவினர் தலைவரோ, அந்தக் கூடையைத் தனக்கு அடுத்திருக்கும் வீட்டிற்குக் கடத்தவேண்டும். அடுத்த வீட்டினர் தங்களுக்கு அடுத்திருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்குக் கடத்தவேண்டும். இப்படியே எல்லாக் குடும்பத்திற்கும் சென்று, கூடை அருள்பணியாளரைச் சேரும். அதன்பிறகு அவர் அந்த மக்கள் நடுவில் திருப்பலி நிறைவேற்றுவார்.
இதில் கவனிக்கவேண்டிய செய்தி என்னவெனில், அடுத்த குடும்பத்தோடு நல்லுறவோடு இல்லாத குடும்பம் அந்தக் குடும்பத்திற்குப் புற்கள் நிறைந்த கூடையைக் கடத்தக் கூடாது. காரண,ம் அடுத்த குடும்பத்தோடு நல்லுறவோடு இருக்கின்ற குடும்பம் மட்டுமே, புற்கள் நிறைந்த கூடையை அடுத்த குடும்பத்திற்குக் கடத்தவேண்டும் என்றொரு எழுதப்படாத சட்டம் இருந்தது. இதனால் அடுத்த குடும்பத்தோடு நல்லுறவோடு இல்லாத குடும்பம் தங்களிடம் வந்த கூடையைக் கடத்த முடியாத நிலை ஏற்பட்டுக் கால தாமதமாகும். இதை அறிய வரும் அருள்பணியாளர், இந்த மக்கள் தங்களுக்கிடையே நல்லுறவோடு இல்லை; அதனால்தான் கூடை திரும்பி வருவதற்கு இவ்வளவு கால தாமதம் ஆகின்றது என்று நினைத்துக்கொண்டு, வேறோர் இனக்குழுவினர்க்குத் திருப்பலி நிறைவேற்றப் போய்விடுவார்.
ஆனால், மாசை இனக்குழுவில் இப்படியெல்லாம் நடப்பது அரிதிலும் அரிதுதான். அருள்பணியாளர் தங்களிடம் திருப்பலி நிறைவேற்ற வருகின்ற நேரத்தில், கொடுத்து அனுப்பும் புற்கள் நிறைந்த கூடையை, அடுத்த குடும்பத்தோடு நல்லுறவு இல்லாத குடும்பம், உடனே உறவைச் சரிசெய்து, கூடையை அடுத்த குடும்பத்திற்கு அனுப்பி வைக்கும். இவ்வாறு அருள்பணியாளரால் அனுப்பி வைக்கப்பட்ட கூடை அவரை விரைவாகப் போய்ச் சேரும். இதன்பிறகு அவர் மிகவும் மகிழ்ச்சியோடு அவர்கள் நடுவில் திருப்பலி நிறைவேற்றிவிட்டுச் செல்வார் (-Willi Hoffsuemmer).
உறவோடு வாழும் மனிதர்கள் நடுவில்தான் கடவுள் இருப்பார். அப்படிப்பட்ட இடமே திருப்பலி நிறைவேற்றுவதற்குச் சரியான இடம் என்பதை மாசை இனக்குழுவினர் நடுவில், மறைப்பணியைச் செய்துவந்த அந்த அருள்பணியாளர் அடையாள முறையில் உணர்த்துவது நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன்” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இச்சொற்களின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உறவை விரும்பும்… உறவில் மகிழும் கடவுள்
ஆண்டவராகிய இயேசு, கடவுள், நாம் எப்பொழுதும் நல்லுறவோடு, ஒன்றாக இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றார். இதை நாம் இயேசு சொல்லக்கூடிய, “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!” (யோவா 17: 21) என்ற இறைவார்த்தையிலும், “நீங்கள் உங்கள் காணிக்கையைச் செலுத்த வரும்பொழுது… நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள் (மத் 5: 23-24) என்ற இறைவார்த்தையிலும் நாம் காணலாம். இன்றைய நற்செய்தியிலும் நாம் அதைத்தான் “இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன்” என்று இயேசு சொல்லும் சொற்களிலும் காணலாம். இதன்மூலம் கடவுள் உறவை விரும்புகின்றவராக, உறவில் மகிழ்பவராக இருக்கின்றார் என்பதை அறிந்துகொள்ளலாம்.
நல்லுறவோடு வாழ என்ன செய்வது?
கடவுள் நல்லுறவில் மகிழ்கின்றவராக இருக்கின்றார் என்று சிந்தித்துப் பார்த்தோம். நாம் அடுத்தவரோடு நல்லுறவோடு இருக்க, தவறு செய்கின்ற ஒருவரைச் சுட்டிக்காட்டுவது நமது கடமையாகும். இதற்கு ஆண்டவர் இயேசு மூன்று வழிமுறைகளைச் சொல்கின்றார். ஒன்று, தவறு செய்த மனிதரை நாம் தனியாகச் சென்று, அவருடைய தவற்றைச் சுட்டிக்காட்டித் திருத்துதல். இரண்டு, ஓரிரு மனிதர்களைக் கூட்டிக்கொண்டு சென்று, தவறு செய்த மனிதரின் தவற்றைச் சுட்டிக்காட்டுதல். மூன்று, திருஅவையாரோடு சென்று தவறு செய்தவரின் தவற்றைச் சுட்டிக்காட்டி, அவரை நல்வழிக்குக் கொண்டு வருவது; அவரோடு நல்லுறவோடு இருப்பது. இந்த மூன்று வழிமுறைகளுக்கும் ஒருவர் ஒத்து வராவிட்டால், அவர் வேற்று இனத்தார் போல் இருக்கட்டும் என்கின்றார் இயேசு.
ஆம், நாம் மற்றவோடு நல்லுறவோடு வாழவேண்டும். அதுதான் இயேசுவின் விருப்பம். அதற்காகவே அவர் இந்த மூன்று வழிமுறைகளைச் சொல்கின்றார். ஆகையால், நாம் அடுத்தவரோடு நல்லுறவோடு வாழ்ந்து, கடவுளின் அன்பில் நிலைத்திருப்போம்.
சிந்தனை
‘உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் இறைவன் (தெய்வம்) தரிசனம்’ என்கிறது ஒரு பழைய திருவழிபாட்டுப் பாடல். எனவே, நாம் நல்லுறவோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.