ஜூலை 23 : நற்செய்தி வாசகம்

விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17
அக்காலத்தில்
சீடர்கள் இயேசுவின் அருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: “விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது:
‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’
உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
மத்தேயு 13: 10-17
“உங்கள் கண்களும் காதுகளும் பேறுபெற்றவை”
நிகழ்வு
மெட்டில்டா என்றொரு கல்லூரி மாணவி இருந்தார். இவருடைய தந்தைக்கு பிறந்தநாள் நெருங்கி வந்துகொண்டிருந்தது. இதனால் இவர் தன்னுடைய தந்தைக்குப் பிறந்தநாள் பரிசாக என்ன கொடுக்கலாம் என்று மிகத்தீவிரமாக யோசித்தார்; இறைவனிடத்தில்கூட இது குறித்து இவர் வேண்டினார். அப்பொழுதுதான் ‘திருவிவிலியத்தைப் பரிசாகக் கொடுத்தால் நன்றாக இருக்கும்’ என்று இவருக்கு வெளிப்படுத்தப்பட்டது.
‘தந்தையின் பிறந்தநாள் பரிசாகத் திருவிவிலியத்தைக் கொடுத்து விடலாம்… ஆனால், அதில் என்ன எழுதிக் கொடுக்கலாம்?’ என்று மெட்டில்லா மீண்டும் யோசிக்கத் தொடங்கினார். ‘மெட்டில்டாவிடமிருந்து’ என்று எழுதிக் கொடுக்கலாமா…? என்று நினைத்தார். ‘அப்படி எழுதிக் கொடுப்பது அவ்வளவு சிறப்பில்லை’ என்று நினைத்த அவர், அந்த எண்ணத்தைக் கைவிட்டார். பின்னர், ‘உங்கள் குட்டி இளவரசியிடமிருந்து’ என்று எழுதிக் கொடுக்கலாமா…? என்று நினைத்தார். ‘ஏழு கழுதை வயதாகின்றது; இன்னும் என்ன குட்டி இளவரசி!’ என்று நினைத்து, அந்த எண்ணத்தையும் கைவிட்டார்.
இப்படியே இவர் சிந்தித்துக் கொண்டிருக்கும்பொழுது, தற்செயலாகத் தன் தந்தை வைத்திருந்த புத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தார். அவ்வாறு பார்க்கும்பொழுது, ஒரு புத்தகத்தில் ‘From the Author’ (ஆசிரியரிடமிருந்து) என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மெட்டில்டா, தன் தந்தைக்கு அளிக்கவிருந்த பிறந்தநாள் பரிசான திருவிவிலியத்தின் முதல் பக்கத்தில் ‘ஆசிரியரிடமிருந்து’ என்று எழுதிக் கொடுத்தார். அதை அன்போடு வாங்கிப் பார்த்த மெட்டில்டாவின் தந்தை, ‘எனக்கு இந்தத் திருவிவிலியத்தை எழுதிய இதன் ஆசிரியரான கடவுளிடமிருந்தா இந்தப் பரிசு வந்திருக்கின்றது; அப்படியானால், இத்திருவிவிலியத்தை நான் எந்தளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்த முடியுமோ, அந்தளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்தவேண்டும்’ என்று உறுதி எடுத்துக் கொண்டார்.
இதற்குப் பின்பு அவர் திருவிவிலியத்தைக் கருத்தூன்றி வாசிக்கத் தொடங்கினார். திருவிவிலியம் அவரைத் தொட்டது. இதனால் அவர் ஒரு நற்செய்திப் பணியாளராக மாறி, நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். அவ்வாறு அவர் மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கும்பொழுது, “திருவிவிலியம் என்பது மற்ற நூல்களைப் போன்ற ஒரு சாதாரண அல்ல, அது கடவுள் மானிடர் யாவருக்கும் கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசு. இதை ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு பயன்படுத்தினால் ஏராளமான ஆசிகள் கிடைக்கும்” என்றார்.
ஆம். திருவிவிலியம் என்பது கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் மிகவும் மேலான ஓர் அன்புப் பரிசு. இதை நாம் நம்பிக்கையோடு வாசித்து, அதன்படி வாழ்ந்தால், நாம் மிகுந்த கனிதருவோம் என்பது உறுதி. நற்செய்தியில் இயேசு, இறைவார்த்தையைக் கேட்டு நடப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லும் விதைப்பவர் உவமைக்கு விளக்கம் தருவதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கண்ணிருந்தும் குடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் வாழ்ந்தவர்கள்
“ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்பதிலிருந்து இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகின்றது. உவமை என்பது கண் காணாவற்றை (ஓரளவு) புரிந்துகொள்வதற்கு கண்முன்னால் இருக்கின்ற ஒரு கதையாடல் வடிவம். இயேசு தன்னுடைய போதனையில் மூன்றில் ஒரு பகுதியை உவமையாகத்தான் பயன்படுத்தினார். இயேசு சொன்ன உவமைகள் அவரை ஏற்றுக்கொண்ட மக்களுக்குப் புரிந்தன; அவரை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்குப் புரியாமல் மறைவாய் இருந்தன. இதனால் இயேசு இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளை (எசா 6:9) மேற்கோள் காட்டி, அவர்கள் கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்கள் இருக்கின்றார்கள் என்கின்றார்.
ஆம், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டும், அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பவர்கள், யாவரும் கண்ணிருந்தும் குருடர்கள்தான்; காதிருந்தும் செவிடர்கள்தான்.

Comments are closed.