ஜூலை 5 : நற்செய்தி வாசகம்

நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30
அக்காலத்தில்
இயேசு கூறியது: “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.
மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
இளைப்பாறுதல் தரும் இயேசு
பொதுக்காலம் பதினான்காம் ஞாயிறு
I செக்கரியா 9: 9-10
II உரோமையர் 8: 9, 11-13
III மத்தேயு 11: 25-30
இளைப்பாறுதல் தரும் இயேசு
நிகழ்வு
ஜெசி, மெர்சி என்று தோழிகள் இருவர் இருந்தனர். இருவரும் சிறுவயதிலிருந்தே அவ்வளவு நெருக்கம்; ஒரே பள்ளிக்கூடத்தில்தான் படித்தார்கள்; ஒரே ஊரில்தான் திருமணமும் செய்துகொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு இருவடைய வாழ்க்கையும் மாறிப்போனது. ஜெசி சாதாரண குடும்பத்தில் வாக்கப்பட்டாலும், அவளுடைய கணவர் அவளை நல்லமுறையில் பார்த்துக்கொண்டார். மெர்சி வசதியான குடும்பத்தில் வாக்கப்பட்டாள். ஆனால், அவளுடைய கணவர் கொஞ்சம் ஊதாரியாக இருந்தார். இதனால் மெர்சி தன்னுடைய தோழி ஜெசியிடம் எப்பொழுதும் தன்னுடைய கணவரைப் பற்றிப் புலம்பத் தொடங்கினாள். தொடக்கத்தில் தன்னுடைய கணவரைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்த மெர்சி, பின்னர் சிறு சிறு பிரச்சனைகளையெல்லாம் அவளிடம் சொல்லிப் புலம்பத் தொடங்கினாள். இதனாலேயே மெர்சியின் வாழ்க்கை நிம்மதியில்லாமல் போனது.
இப்படி இருக்கையில், ஒருநாள் ஜெசி தன்னுடைய தோழி மெர்சியைப் பார்த்தபொழுது மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்பட்டாள். அவளைப் அப்படிப் பார்த்து நீண்ட நாள்கள் ஆகியிருந்தன. அதனால் ஜெசி, மெர்சியிடம், “உனக்கு என்னாயிற்று…? இன்றைக்கு இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றாயே!” என்றார்.
உடனே மெர்சி அவளிடம், “நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில் எல்லாரும் ஒரு நீண்ட சாலையில் தங்களுடைய சுமைகளை எல்லாம் மூட்டையாகக் கட்டி, சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு சென்றார்கள். நானும் என்னுடைய சுமைகளைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு சென்றேன். திடீரென்று எனக்கு முன்பாக இயேசு வந்து நின்றார். அவரிடம் நான், ‘இயேசுவே! என்னுடைய சுமையெல்லாம் இறக்கி வைத்து விட்டு, எனக்கு இளைப்பாறுதல் தாரும்’ என்றேன். அவரோ, ‘நீ சுமந்துகொண்டிருப்பதோ சாத்தானின் சுமை. அதையெல்லாம் என்னால் இறக்கி வைக்க முடியாது. நீதான் அதைத் தூக்கிக் கீழே போடவேண்டும். முதலில் சாத்தானின் சுமையைக் கீழே தூக்கி எறி. அப்பொழுது நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்.
நான் தூக்கத்திலிருந்து எழுந்தபொழுது, இத்தனை நாள்களும் நான் சாத்தானின் சுமையைத்தான் சுமந்து கொண்டிருந்திருக்கிறேன்; இயேசுவின் சுமையை அல்ல என்ற உண்மை விளங்கியது. அதனால் நான் சாத்தானின் சுமையைத் தூக்கி எறிந்துவிட்டு, இயேசுவின் சுமையைச் சுமந்துகொண்டேன். அதனால்தான் நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்றாள்.
ஆம். பல நேரங்களில் நாம் சுமைகள் என்று தூக்கச் சுமக்கின்ற சுமைகள் யாரும் சாத்தான் தருகின்ற சுமைகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொதுக்காலத்தின் பதினான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, இயேசு தரும் சுமையை அல்லது இயேசு தரும் இளைப்பாறுதலைப் பெற நாம் என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சுமைகளால் பாழாகும் மனித வாழ்க்கை
மனிதர்களாகிய நாம் இன்றைக்குப் பலவிதமான சுமைகளைத் தூக்கிக்கொண்டு அலைகின்றோம். இதனால் நம்முடைய வாழ்க்கையே பாழாகி, நிம்மதியில்லாமல் போய்விடுகின்றது. ஒவ்வொருநாளும் நாம் சுமக்கக்கூடிய சுமைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, சாத்தான் நம்மீது சுமத்தக்கூடிய சுமை. இதனை நாம் பார்த்த மேலே பார்த்த சுமையோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். பலநேரங்களில் நாம் கடந்த காலத்தைக் குறித்த கவலை… எதிர்காலத்தைக் குறித்த அச்சம்… இப்படித் தேவையில்லாதவற்றை எல்லாம் சுமையாகச் சுமந்துகொண்டு அலைகின்றோம். என்றைக்கு நாம் அதைத் தேவையில்லாத சுமை என்றும், சாத்தனுடைய சுமை என்றும் உணர்கின்றோமோ, அன்றைக்கு நாம் அதை உதறித் தள்ளிவிட்டுவிட்டு, மகிழ்ச்சியாக வாழலாம்.
நாம் சுமக்கக்கூடிய இரண்டாவது சுமை, நமக்கு மேலே அதிகாரத்தில் உள்ளவர்கள் நம்மீது சுமத்தக்கூடிய சுமை. இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த சாதாரண மக்கள்மீது அதிகாரத்தில் இருந்த பரிசேயர்கள் ‘சட்டம்’ என்ற சுமக்க முடியாத சுமைகளைச் சுமத்தினார்கள் (மத் 23: 1-4). அதனால் மக்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். இன்றைக்கும் கூட நம்மை ஆளக்கூடியவர்கள் தேவையில்லாதையெல்லாம் நம்மீது சுமத்திக்கொண்டிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் நாம் ஓர் அமைப்பாகத் திரண்டு எழுகின்றபொழுது, அப்புறப்படுத்த முடியும் என்பது உறுதி. நாம் சுமக்கக்கூடிய மூன்றாவது சுமை, இயேசுவின் சுமை; ஆனால், இதை நாம் சுமை என்று சொல்வதை விடவும் சுகமான சுமை அல்லது இளைப்பாறுதல் என்று சொல்வதே சிறந்தது.
இயேசுவின் சுமை எத்தகையது?
இயேசு தரும் சுமையைச் சுமக்க அல்லது அவர் தரும் இளைப்பாறுதலைப் பெற, நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னால், அச்சுமை எத்தகையது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வது நல்லது.
இயேசு தரும் சுமை அல்லது இளைபாறுதல் என்பது துன்பமே இல்லாத வாழ்வு கிடையாது. மாறாகத் துன்பங்களை துணிவோடு தாங்கிக்கொள்ளக்கூடியது. மேலும் இத்தகைய இளைப்பாறுதல் நாம் இயேசுவிடம் விளங்கும் கனிவு, மனத்தாழ்மை, இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கக்கூடிய நீதி, எளிமை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதால் வரக்கூடியது. இன்றைக்கு ஒருசில போலிப் போதகர்கள் ‘என்னிடம் வந்தால் நிம்மதி கிடைக்கும்’, ‘மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்’ என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். இயேசு அப்படிப் போலியான அறிவிப்பைக் கொடுக்கவில்லை. மாறாக, கனிவின் வழியாக, மனத்தாழ்மையின் வழியாகக் கிடைக்கின்ற இளைப்பாறுதலைத் தருவதாகக் கூறுகின்றார்.
இயேசு அளிக்கும் இறைப்பாறுதலைப் பெற என்ன செய்வது?
இயேசு தருகின்ற இளைப்பாறுதல், இந்த உலகம் தருகின்ற இளைப்பாறுதலைப் போன்றது அல்ல, அது கனிவின் வழியாக, மனத்தாழ்மையின் வழியாகக் கிடைக்கக்கூடாது என்று பார்த்தோம். இத்தகைய இளைபாறுதலைப் பெற ஒருவர் என்ன செய்யவேண்டும் என்கின்ற கேள்வி எழுகின்றது.
இன்றைய நற்செய்தியின் தொடக்கத்தில் இயேசு, “…ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” என்று தந்தையைப் போற்றிப் புகழ்வார். ஆம், கடவுளின் வெளிப்பாடு மட்டுமல்ல, அவர் தருகின்ற இளைபாறுதலும் குழந்தைகளுக்கும், குழந்தை உள்ளம் கொண்டுவர்களுக்கும் மட்டுமே கிடைக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் குழந்தையின் உள்ளம் கொண்டிருப்பவரிடமே கனிவும் மனத்தாழ்மையும் குடிகொண்டு இருக்கின்றன. அப்படியானால், நாம் இயேசு தருகின்ற இளைப்பாறுதலைப் பெற, நம்மிடம் இருக்கின்ற ஆணவத்தை அகற்றிவிட்டு, மனத்தாழ்மைமையோடு வாழ்வது இன்றியமையாதது. ஆகையால், நாம் இயேசு தருகின்ற இளைப்பாறுதலை, அவர் தருகின்ற சுகமான சுமையைப் பெற மனத்தாழ்மையோடும் தாழ்ச்சியோடும் வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை

Comments are closed.