ஜூலை 3 : நற்செய்தி வாசகம்

நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 24-29
பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார். தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
திருத்தூதரான தூய தோமா (ஜூலை 03)
நிகழ்வு
தோமாவைக் குறித்து சொல்லப்படும் தொன்மம்.
இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு தோமாவிற்கு இந்தியாவிற்குப் போகுமாறு சீட்டு விழுந்தது. எனவே அவர் இந்தியாவிற்கு வந்தார். அப்போது குண்டபோரஸ் என்னும் மன்னன் அழகு மிளிர்ந்த ஒரு மாளிகை கட்ட நினைத்தான். இந்தப் பொறுப்பை அவன் தன்னுடைய ஆலோசகராகிய ஹப்பான்ஸ் என்பவரிடம் ஒப்படைத்தான். ஹப்பான்ஸ் யாரிடம் இந்த வேலையைக் கொடுப்பது என நினைத்துக்கொண்டிருக்கும்போது, அவருக்குக் கனவில், தோமா என்னும் ஒருவர் இருக்கிறார், அவர் கட்டடக் கலையில் வல்லுநர் என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டது. எனவே அவர் தோமாவை அணுகிச் சென்று, மாளிகை கட்டும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். மன்னர் தோமாவிடம் மாளிகை கட்டுவதற்கான போதிய பணத்தைக் கொடுத்துவிட்டு, இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுப் பயணம் சென்றார்.
தோமாவோ, மன்னன் மாளிகை கட்டக் கொடுத்த பணத்தை அதற்காகப் பயன்படுத்தாமல், ஏழை எளியவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து, மன்னர் தோமாவை அழைத்து, “மாளிகை எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவர், “மாளிகை இங்கே இல்லை. விண்ணகத்திலே கட்டப்பட்டிருக்கிறது” என்றார். இதைக் கேட்டு சினமடைந்த மன்னன், தோமாவை சிறையில் அடைத்தான். இதற்கிடையில் மன்னனின் சகோதரன் காத் என்பவன் இறந்துபோனான். ஒருநாள் அவன் மன்னருக்குக் கனவில் தோன்றி, “சகோதரனே! விண்ணகத்தில் உனக்காக ஓர் அழகு மிளிர்ந்த மாளிகை கட்டப்பட்டிருக்கிறது, மேலும் நீ சிறையில் அடைத்து வைத்திருக்கும் மனிதர் சாதாரண மனிதர் அல்ல, அவர் கடவுளின் தூதர்” என்று உரைத்தான். இதை அறிந்த மன்னன் சிறையில் இருந்த தோமாவை விடுதலைசெய்து அனுப்பினான். அதோடு மட்டுமல்லாமல் அவரிடமிருந்து திருமுழுக்குப் பெற்று உண்மைக் கிறிஸ்தவனாக வாழத் தொடங்கினான்.
வாழ்க்கை வரலாறு
திதிம் என அழைக்கப்படும் தோமா கலிலேயாவைச் சார்ந்தவர். இவரும் தூய பேதுரு, அந்திரேயா, யோவான் யாக்கோபு போன்று மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தார். ஆண்டவர் இயேசு அழைத்த உடன், இவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார். விவிலியத்தில் யோவான் நற்செய்தியைத் தவிர மற்ற நற்செய்தி நூல்களில் இவரைக் குறித்த செய்திகள் காணக் கிடைக்கவில்லை. யோவான் இவரைக் குறித்து சொல்கிற செய்திகளை வைத்துக்கொண்டு இவர் எப்படிப்பட்ட ஆளுமை என நாம் புரிந்துகொள்ளலாம்.
இயேசுவின் நெருங்கிய நண்பரான இலாசர் இறந்தபோது, இயேசு பெத்தானியாவிற்கு செல்லவேண்டும் என்று முடிவெடித்தார். அப்போது சீடர்கள் எல்லாம் இயேசுவிடம், “ரபி, இப்போதுதானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” என்று சொல்லி அவரைத் தடுத்தார்கள் (யோவா 11:8). ஆனால் தோமாவோ, “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என்று சொல்லி தான் இயேசுவுக்காக எதையும் செய்யத் துணிந்தவர் என்பதை வெளிப்படுத்துகிறார்.
இன்னொரு சமயம் இயேசு சீடர்களிடம், “நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து, உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்” என்று சொல்லும்போது தோமா, “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்திற்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்பார். அதற்கு இயேசு, “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்பார். (யோவா 14: 1-6). இப்பகுதியில் இயேசு சொன்னது மற்ற சீடர்களுக்கும் புரியாதிருக்கும். ஆனால் அவர்கள் இயேசுவிடம் கேள்வி கேட்கத் துணியவில்லை. தோமாதான் மிகவும் துணிச்சலாக கேள்வியைக் கேட்டு, விளக்கத்தைத் தெரிந்துகொள்கிறார். இதன்மூலம் அவர் உண்மையை அறிந்துகொள்ள முற்படுபவர் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
இயேசு தன்னுடைய உயிர்ப்புக்குப் பிறகு, சீடர்களுக்குத் தோன்றினார். அவர் தோன்றிய நேரம் தோமா அங்கு இல்லை. எனவே சீடர்கள் அனைவரும், இயேசு தோன்றிய செய்தியை தோமாவிடம் எடுத்துச் சொன்னபோது, “அவர் நான் அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட காயங்களில் என் விரலையும், அவருடைய விலாவில் ஏற்பட்ட காயத்தில் என்னுடைய கையை விட்டால் ஒழிய நம்ப மாட்டேன் “என்கிறார். எட்டு நாட்களுக்குப் பிறகு சீடர்கள் அனைவரும் (தோமாவும் அதில் இருந்தார்) ஒன்றாகக் கூடி வந்தபோது, இயேசு அவர்கள் நடுவே தோன்றி அவர்களை வாழ்த்தினார். பின்னர் தோமாவிடம், “தோமா உம்முடைய விரலை என்னுடைய கையிலும், கையை என்னுடைய விலாவிலும் விட்டுப் பார்” என்று சொல்லிவிட்டு, “ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்பார். அப்போது தோமா, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்பார் (யோவா 20: 28). இப்பகுதியைக் வைத்து, நிறையப் பேர் ‘தோமா ஒரு சந்தேகப் பேர்வழி’ என்பர். ஆனால் உண்மையில் அவர் முழு உண்மையை அறிந்துகொள்வதற்காக இப்படிச் செயல்பட்டார் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும். “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்” என்று தோமா அறிக்கையிட்ட நம்பிக்கை அறிக்கையைப் போன்று வேறு யாரும் இப்படி வெளிப்படுத்தவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு, தோமா தற்போதைய ஈரான், பெர்சியா போன்ற பகுதிகளுக்குச் சென்று நற்செய்தி அறிவித்ததாகவும், இறுதியில் இந்தியாவின் தென்பகுதியில் வந்து நற்செய்தி அறிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் கிபி. 52 ஆம் ஆண்டு தோமா கேரளாவில் உள்ள கிராங்கநூர் பகுதியில் தரை இறங்கினார் என்றும் அங்கே ஏழு ஆலயங்களைக் கட்டி எழுப்பினார் என்றும் உறுதியாக நம்பப்படுகின்றது. அதற்கு கேரளாவில் உள்ள தோமையார் கிறிஸ்தவர்களே சான்றாக இருக்கின்றார்கள்.
தோமா கிராங்கநூரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அதன்பிறகு, சென்னையிலுள்ள மயிலாப்பூர் பகுதியில் நற்செய்தி அறிவித்தார். அவருடைய போதனையைக் கேட்டு நிறைய மக்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றினார்கள். இதனால் அவருக்கு இந்து பூசாரிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. ஆனால் தோமா தனக்கு வந்த எதிர்ப்புகளை எல்லாம் முறியடித்துவிட்டு, தொடர்ந்து நற்செய்தியை அறிவித்து வந்தார். ஒருசமயம் அவர் சின்ன மலையில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது பகைவர்கள் வந்து, அவர்மீது ஈட்டியைப் பாய்ச்சி அவரைக் கொலை செய்தார்கள். இவ்வாறு தோமா, முன்பு சொன்ன, “வாருங்கள் நாமும் போவோம், அவரோடு இறப்போம்” என்ற வார்த்தையை உண்மையாக்கிக் காட்டினார்.
232 ஆம் ஆண்டு தோமாவின் புனித பொருட்கள் எடேசாவிற்கு கொண்டு செல்லப்பட்டன. 15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர்கள் தோமாவின் கல்லறை இருந்த இடத்தில் ஆலயம் கட்டினார்கள். 1972 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த, திருத்தந்தை ஆறாம் பவுல் தோமாவை இந்திய நாட்டின் திருத்தூதராக அறிவித்தார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
இந்திய நாட்டின் திருத்தூதர் என அழைக்கப்படும் தூய தோமாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நம்பிக்கையோடு வாழ்வோம்
நற்செய்தியில் இயேசு தோமாவைப் பார்த்து, “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்பார் (யோவா 20: 29). இதையே நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். தோமா இயேசுவின் உயிர்ப்பைக் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள நினைத்தார். அதனால் அவர், இயேசுவின் கைகளில் என்னுடைய விரலையும், அவருடைய விலாவில் என்னுடைய கையை விட்டால் ஒழிய நம்ப மாட்டேன்” என்கிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் இறைவனிடத்தில் நம்மோடு வாழும் சக மனித்ரகளிடத்தில் நம்பிக்கை கொண்டு வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நம்பிக்கை என்பது எத்தகையது என்பதை எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தின் ஆசிரியர் அழகாகச் சொல்வார், “நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை” (எபி 11:1) நாம் நம்மைப் படைத்தவரில் ஏன், நம்மோடு இருப்பரில் ஐயமில்லாது இருக்கவேண்டும். அதுவே உண்மையான நம்பிக்கையாகும். ஆனால் பல நேரங்களில் கடவுளிடத்திலும் நம்பிக்கை கொள்வதில்லை, நம்மோடு வாழக்கூடிய சக மனிதரிடத்திலும் நம்பிக்கை கொள்வதில்லை. எப்போதும் அவ நம்பிக்கையிலே வாழ்ந்து மடிந்துபோய்விடுதில்லை.
எப்போதும் அவநம்பிக்கையோடும் சந்தேகப் புத்தியோடும் வாழ்ந்த ஒரு பெண்மணியைக் குறித்து சொல்லப்படும் வேடிக்கையான கதை.
கணவன் மனைவி, இரண்டு குழந்தைகள் என்று இருந்த வீட்டில் மனைவி எப்போதும் தன்னுடைய கணவன் மீது சந்தேகப்பட்டுக் கொண்டு இருந்தாள். காரணம் மனைவி அலுவலகத்தில் வேலை பார்த்தாள். கணவரோ வேலையேதும் இல்லாமல் வீட்டிலேயே இருந்தார். வீட்டில் இருக்கும் கணவர் என்ன செய்கிறார் என்பதுதான் அந்த மனைவிக்குச் சந்தேகம். அதனால் மனைவி அலுவலத்திற்குச் சென்று, தன்னுடைய கணவருக்கு போன் செய்து, “எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்பார். அவர் “வீட்டில் இருக்கிறேன்” என்பார். “வீட்டில் இருக்கிறீர்கள் என்றால், எங்கே மிக்ஸ்சியை ஆன் (On) செய்யுங்கள்” என்பார். அவரும் மிக்ஸ்சியை ஆன் செய்வார். உடனே மனைவி தன்னுடைய கணவர் வீட்டில்தான் இருக்கிறார் என நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொள்வார். இது வாடிக்கையாக ஒவ்வொருநாளும் நடந்தது.
ஒருநாள் மனைவி, தன்னுடைய கணவர் தான் அலுவலகம் சென்றபிறகு உண்மையிலேயே வீட்டில்தான் இருக்கிறாரா? அல்லது வேறு எங்கும் போய்விடுகிறாரா? என சோதித்துப் பார்க்க விரும்பினார். அதனால் அவர் அலுவலகம் செல்வதுபோல் வெளியே சென்றுவிட்டு, சிறிது நேரத்திற்குள் வீட்டிக்கு வந்தார். வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் கணவரைக் காணவில்லை. பிள்ளைகள் மட்டுமே இருந்தார்கள். இதைப் பார்த்து திடுக்கிட்டுப் போன மனைவி, தன்னுடைய பிள்ளைகளிடம், “அப்பாவைவை எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அப்பா இப்போதுதான் மிக்ஸ்சியைத் தூக்கிக்கொண்டு வெளியே போனார்” என்றார்கள். இதைக் கேட்டதுதான் தாமதம் ‘தன்னுடைய கணவர் தன்னை இத்தனை நாளும் இப்படிதான் ஏமாற்றிக்கொண்டிருக்கிறாரோ?’ என நினைத்து மயக்கம் போட்டு விழுந்தார்.

Comments are closed.