இயேசுவின் திரு இருதய வணக்கம் மாதம்

திரு இருதயத்துக்குத் தங்களைக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் கத்தோலிக்க குடும்பங்களெல்லாம் நசரேத்தூர் திருக்குடும்பத்தின் புண்ணிய மாதிரிகைகளை உத்தம் விதமாய்ப் பின்பற்றப் பிரயாசப்பட வேண்டும். அங்கே அர்ச். சூசையப்பரும் மாமரியன்னையும் கட்டளையிட்டார்கள். திவ்விய சேசு அவர்களுக்குக் கீழ்ப்படிந்தார். என்றாலும், ஆண்டவருடைய சுபாவந்தான் சகலத்தையும் நடத்திக் கொண்டு வந்தது. அவர்களுடைய ஜெபம், வேலை, அசனம், சம்பாஷனை ஒவ்வொன்றும் ஒவ்வொரு புண்ணிய முயற்சியாகவும், பக்தி முயற்சியாகவும், நன்மாதிரிகைக் குரியதாகவுமிருந்தது. இந்தக் குடும்பத்திலுள்ள மூவரும் தங்கள் சொந்த வீடாகிய தேவாலயத்தில் தங்கள் பாக்கியத்தைக் கண்டடைந்தார்கள். மாலைப் பொழுதில் மூவரும் ஒன்று சேர்ந்து சம்பாஷனை(ஜெபம்) செய்வார்கள். அந்த சம்பாஷனை பக்திக்கடுத்ததாகவே இருக்கும். திவ்விய சேசுவின் வார்த்தைகள் அவருடைய திரு இருதயத்திலிருந்து புறப்படும் வார்த்தைகள். அவர் வேதம் போதிக்கும்போது ஜனத்திரளின் இருதயத்தை இளக்கி அவர் பரிசமாய் இழுத்தது அவரது தெய்வீக வார்த்தைகள்தான்.
திவ்விய சேசு வெளியரங்க வாழ்வில் தமது பிள்ளைகளாகிய அப்போஸ்தலர்கள் நடுவில் இருந்தபோதும், குடும்பத்தின் தகப்பன்மார்களுக்கும் உத்தம மாதிரிகையாய் விளங்கினார். அவர்களுடைய ஆத்தும சரீர நன்மையைப் பற்றி மிக கவலை எடுத்துக் கொள்கிறார். அவர்களுக்குப் போதிக்கிறார். பட்சத்தோடும் உறுதியோடும் அவர்கள் குற்றத்தைக் கண்டித்துத் திருத்துகிறார். அவர்கள் நடுவில் சமாதானமும், தகப்பனுக்கும் பிள்ளைக்குமுள்ள ஒற்றுமையும் குடிகொண்டிருக்கச் செய்கிறார். அவர்கள் ஆத்தும் சரீரத்துக்கு அபாயம் வருவிக்கும் எதிரிகளிடத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார். மாறாத பிறரன்போடு அவர்களோடு புழங்குகிறார். கடைசியாய்ச் சகல புண்ணியங்களையும் அனுசரித்து அவர்களுக்கு இடைவிடாமல் நன்மாதிரிகை காண்பிக்கிறார்.
அப்போஸ்தலர்கள் நடுவில் திவ்விய இரட்சகர் நடந்தது போல் நல்ல கத்தோலிக்கக் குடும்பத்திலுள்ள தாய்தந்தையர்களும் தங்கள் பிள்ளைகளின் நடுவில் நடப்பார்கள். தங்கள் பிள்ளைகளின் படிப்பினைக்கும், ஆத்தும் மீட்புக்கும் உத்திரவாதிகளான அவர்கள், தாங்கள் சேசுக் கிறீஸ்துவின் பதிலாளிகள் என்று எண்ணிக் கொள்ளக் கடவார்கள். அவர்களுடைய இளம்பிராயத்திலேதானே, விசுவாசத்தின் பிரதான சாத்தியங்களையும், எங்குமிருந்து எல்லாவற்றையும் பார்க்கிற தேவ சன்னிதானத்தையும், அவர்கள் அடைய வேண்டிய மோட்ச பாக்கியத்தின் நினைவையும், விலக்கவேண்டிய நரகத்தின் நினைவையும், ஆத்துமத்துக்குக் கேடு வருவிக்கிற பாவத்தின் மேல் பகையையும், கடைசியில் சகல கிறீஸ்துவப் புண்ணியங்களின் அனுசரிப்பையும் அவர்களுடைய மனதிலும் இருதயத்திலும் பதியும்படி செய்யவேண்டியது.
பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களின் நற்புத்திமதிகளையும், நன்மாதிரிகைகளையும் எப்போதும் நினைத்துக் கொள்வார்களென்பது ஒரு பக்கத்தில் உண்மையானால், வேறொரு பக்கத்தில் அவர்கள் பெற்றோர்களிடம் கண்ட துர்மாதிரிகைகளும் அவர்கள் ஞாபகத்தைவிட்டு ஒருபோதும் விலகாது. இந்த ஞாபகம் அவர்களுடைய மீட்பு விஷயத்தில் வெகு ஆபத்தான விசாரத்தை விளைவிக்கும்.
சேசுவின் திரு இருதயப் பக்தியில் விளங்கும் பெற்றோர்கள் தங்கள் குடும்பத்தையும் வீட்டையும் அத்திரு இருதயத்தின் தேவாலயமாக ஏற்படுத்துவார்கள். இந்தத் தேவாலயம் பரிசுத்ததனத்திலும், புனித தனத்திலும் விளங்கும்படி காப்பாற்றுவார்கள்.
முற்றும்
சேசுகிறீஸ்துவில் பிரியமுள்ள சகோதர உறவுகளே இந்த 30 நாட்களும் சேசுவின் திரு இருதய அன்பை உணர்ந்தோம் இனி அந்த திவ்ய இருதயத்திற்கு ஆறுதல் கொடுத்து மோட்ச வழியில் நடக்க திருக்குடும்பத்தின் தலைவரான அர்ச்.சூசையப்பரை மன்றாடுவோம் அதன் வழியாக சேசுவின் திரு இருதயத்தின் அரசியான நமது மகா பரிசுத்த கன்னித்தாய் நம்மை சேசுவின் திவ்ய இருதயத்தின் பக்தியில் வளர்ப்பார்கள்

Comments are closed.