முதல் வாசக மறையுரை (ஜூன் 26)

பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை
2 அரசர்கள் 25: 1-12
தீக்கிரையாக்கப்பட்ட எருசலேம் நகரம்
நிகழ்வு
துறவி ஒருவர் இருந்தார். ஒருநாள் இவரிடம் ஓர் இளைஞன் வந்தான். அவன் துறவியைத் தாழ்ந்து பணிந்து வணங்கிவிட்டுத் தன்னிடமிருந்த கேள்விகளை ஒவ்வொன்றாகக் கேட்கத் தொடங்கினான்.
“சுவாமி! திராட்சைப் பழங்களைச் சாப்பிடுவது தவறா?” என்றான் அந்த இளைஞன். “திராட்சைப் பழங்களைச் சாப்பிடுவது ஒன்றும் தவறில்லையே!” என்று துறவி சொல்லி முடித்ததும், “திராட்சைப் பழங்களோடு தண்ணீரையும் சேர்த்துச் சாப்பிட்டால் தவறா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான் இளைஞன். “அதுவும் தவறில்லையே! என்று துறவி சொன்னதும், “இவற்றோடு கொஞ்சம் நுரைமத்தையும் (Yeast) சேர்த்துச் சாப்பிட்டால் தவறா?” என்றான் இளைஞன்.
இதற்குப் பதிலேதும் சொல்லாத துறவி அவனிடம் திருப்பிக் கேள்வியைக் கேட்கத் தொடங்கினார். “தம்பி! உன்னுடைய தலையில் நான் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டேன் என்றால், உனக்கு வலிக்குமா?” “வலிக்காது” என்று இளைஞன் சொன்னதும், “மண்ணோடு கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து உன்னுடைய தலையில் கொட்டினால், உனக்கு வலிக்குமா?” என்றார் துறவி. “அப்பொழுதும் வலிக்காது?” என்று இளைஞன் சொன்னதும், துறவி அவனிடம், “சரி, மண்ணையும் தண்ணீரையும் நன்றாகக் கலக்கி, தீச்சூளையில் வைத்து அதைச் செங்கலாக்கி, உன் தலையில் எறிந்தால், உனக்குக் வலிக்குமா?” என்றார். இளைஞனால் எதுவும் பேச முடியவில்லை.
அப்பொழுது துறவி அவனிடம், “தம்பி! நீ செய்யக்கூடிய தவற்றினை எப்படி வேண்டுமானால் நியாயப்படுத்தலாம். அல்லது இதெல்லாம் ஒரு தவறா என்றுகூடக் கேட்கலாம்; ஆனால், தவறு தவறுதான். அதை யாரும் மறுக்க முடியாது” என்றார். இளைஞன் தான் குடித்துக்கொண்டிருப்பது தவறு என்பதை உணர்ந்தவனாய் வீடு திரும்பினான்.
இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞனைப் போன்றுதான் பலரும் தாங்கள் செய்யக்கூடிய தவற்றினை நியாயப்படுத்தக் கூடியவர்களாகவும், இதெல்லாம் ஒரு தவறா என்று வாதிடக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். இன்றைய முதல் வாசகத்தில், பாகாலை வழிபடுவது ஒரு தவறா என்று வாழ்ந்து வந்த செதேக்கியாவும் அவனுடைய மக்களும் எதிரியின் கையில் வீழ்ந்து, நாடுகடத்தப்படுவதைக் குறித்து வாசிக்கின்றோம். இவர்களுக்கு நேர்ந்த இந்த அழிவிற்குக் காரணமென்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவருக்கு ஊழியம் செய்ய மறந்த இஸ்ரயேல் மக்கள்
அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து, இஸ்ரயேல் மக்களை மோசேக்குப் பின் வழிநடத்தி வந்த யோசுவா மக்களைப் பார்த்து, “இப்பொழுது, ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் அவருக்கு ஊழியம் செய்யுங்கள்… உங்கள் மூதாதையர் பணிந்து வந்த தெய்வங்களை விட்டு விலகுங்கள்” (யோசு 24: 14) என்பார். இதற்கு மக்கள், “நாங்கள் எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்; அவரது குரலுக்குக் கீழ்ப்படிவோம்” (யோசு 24: 21: 24) என்பார்கள். ஆனால், ஆண்டுகள் மெல்ல உருண்டோடியபொழுது, அவர்களும் சரி, அவர்களுடைய வழிமரபினரும் சரி, ஆண்டவருக்கு ஊழியம் புரிவதையும், அவருடைய குரலுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதையும் விட்டுவிட்டுப் பாகால் தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள்.
இன்றைய முதல் வாசகத்தில் எருசலேம் நகரும், நகரில் இருந்த அரண்மனையும், பெரிய பெரிய வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டு, யூதாவை ஆண்டுவந்த ‘பொம்மை அரசனாகிய’ செதேக்கியா பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரால் நாடுகடத்தப்பட்டான் எனில், அதற்கு முக்கியமான காரணம், அவன் உண்மைக் கடவுளை மறந்துவிட்டு பிற தெய்வங்களைத் தேடியதுதான். ஆதலால், யூதா எதிரிகளின் கையில் விழுந்ததற்கு மிக முக்கியமான காரணம், அதை ஆண்டுவந்த மன்னர்களும், மக்களும் உண்மைக் கடவுளை மறந்துவிட்டு, பாகால் தெய்வத்தை வழிபாட்டு வந்ததுதான் என்று உறுதியாகச் சொல்லலாம்.
நாம் யாருக்கு ஊழியம் செய்கின்றோம்?
வரலாறு நமக்குத் திரும்ப திரும்ப பாடம் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால், நாம்தாம் மிகப்பெரிய இழப்பினைச் சந்திக்க வேண்டிவரும். அன்று இஸ்ரயேல் மக்கள் உண்மைக் கடவுளை மறந்து வாழ்ந்ததால், மிகப்பெரிய அழிவினைச் சந்தித்தார்கள். இன்று நாமும்கூட உண்மைக் கடவுளை மறந்துவிட்டு, அந்தக் கடவுள் இருக்கின்ற இடத்தில் பணம், பொருள், புகழ் இன்ன பிறவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தோமேமெனில், இதுபோன்ற அழிவினைச் சிந்திப்போம் என்பதே உறுதி. ஆகையால், நாம் நம்முடைய தீச்செயல்களை விட்டு, உண்மையான இறைவனுக்கு ஊழியம் செய்து, அவருடைய அன்பு மக்களாவோம்.
சிந்தனை
‘என்மீது அன்பு கூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்’ (இச 5: 10) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் நம் ஆண்டவரிடம் அன்புகூர்ந்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வோம்.

Comments are closed.