நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 24)

பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் புதன்கிழமை
மத்தேயு 7: 15-20
போலிகள் சூழ் உலகு
நிகழ்வு
அமுதன் ஓர் இசைப் பிரியர். புதிதாக வரும் திரைப்படங்களுடைய இசைத் தட்டுகளை வாங்கி, அவற்றைத் தன்னுடைய வீட்டில் இருந்த ஒலிபெருக்கியில் போட்டுக் கேட்பது வழக்கம். அதில் அவனுக்கு ஓர் அலாதியான இன்பம்.
ஒருநாள் அவனிடமிருந்த ஒலிபெருக்கி வேலை செய்யாமல் போனது. அதை அவன் பல ஆண்டுகளாக வைத்திருந்தான். அதனால் அவன், ‘இந்த ஒலிபெருக்கியைச் சரிசெய்வதற்குப் பதில், புதிதாக வாங்கிவிடுவதே நல்லது’ என்று, தான் இருந்த சிற்றூரிலிருந்து நகருக்கு வந்து, ‘Made in Japan’ என்று எழுதப்பட்டிருந்த ஓர் ஒலிபெருக்கியைப் பத்தாயிரம் உரூபாய் விலை கொடுத்து வாங்கிச் சென்றான்.
தொடக்கத்தில் அந்த ஒலிபெருக்கி நன்றாகச் செயல்பட்டது. ‘கொடுத்த விலைக்கு இந்த ஒலிபெருக்கி தகும்’ என்று அமுதன் மிகவும் பூரிப்படைந்தான். திடீரென்று ஒரு நாள் அந்த ஒலிபெருக்கி பழுதடைந்தது. ஆகவே, அவன் அந்த ஒலிபெருக்கியை, ஒலிபெருக்கியிலிருந்து பழுதை நீக்கும் கடைக்குத் தூக்கிக்கொண்டு சென்றான். கடைக்காரர் அந்த ஒலிபெருக்கியிலிருந்து பழுதை நீக்கும்பொழுதுதான் கண்டுபிடித்தார், அது ஜப்பானில் செய்யப்பட்டது அல்ல, இந்தியாவில் செய்யப்பட்டது என்று. அவர் அமுதனிடம் இந்த உண்மையைச் சொன்னபோது, ‘நாம் ஏமாந்துபோனோமே’ என்று நொந்துபோனான்.
போலிகள் எங்கும் பெருகிவிட்டன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களிலிருந்து, உண்ணும் உணவு வரை பெருகிவிட்டன. இதில் மதமும் விதிவிலக்கல்ல. எங்கு பார்த்தாலும் போலிப் போதகர்கள், போலிச் சாமியார்கள் பெருகிவிட்ட இந்தச் சூழலில், அவர்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு, போலி இறைவக்கினர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்கின்றார். அவர்களைக் குறித்து எச்சரிக்கை இருப்பதற்கு அவர்கள் எப்படிப்பட்டர்கள் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. இன்றைய நற்செய்தி வாசகம் அவர்களைக் குறித்த தெளிவினைத் தருகின்றது. நாம் அதைப் பற்றி இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
யார் இந்தப் போலி இறைவாகினர்கள்?
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் போலி இறைவாக்கினர்கள் மிகுந்திருந்தார்கள் (2அர 3: 13; எசா 44: 25; எரே 23: 16). இவர்கள், ஆண்டவருடைய வெளிப்பாடு அல்லது செய்தி தங்களுக்குக் கிடைத்தது என்று சொல்லிக்கொண்டு, தங்களை ‘இறைவாக்கினர்’ என்று அறிவித்துக் கொண்டு, மக்கள் நடுவில் பணிசெய்து வந்தார்கள். இதில் கவனிக்கவேண்டியது என்னவெனில், இவர்கள் எப்பொழுதுமே மன்னர்களையும் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடிய செய்தியை மட்டுமே சொல்லி வந்ததுதான். நாட்டிற்கு எதிராகப் போர் வரும் சூழல் இருந்தாலும், அமைதி, அமைதி என்றே சொல்லிவந்தார்கள். இயேசுவின் காலத்திலும், அவருக்குப் பிறகும்கூட இந்தப் போலி இறைவாக்கினர்கள் மிகுதியாக இருந்தார்கள் (மத் 24: 11; திப 20: 29). இவர்களுடைய முதன்மையான நோக்கம். பேரும் புகழும் பணமும் சம்பாதிப்பதுதான். அதற்காக இவர்கள் எப்படிப்பட்ட செயலையும் செய்யத் தயாராக இருந்தார்கள்.
போலி இறைவாக்கினர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?
போலி இறைவாக்கினர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு வரும் ஓநாய்களாக இருப்பார்கள் என்று சொல்லும் இயேசு, இவர்களை இவர்களது செயல்களைக் கொண்டு அடையாளம் கண்டுகொள்ளலாம் என்று தெளிவாய்ச் சொல்கின்றார். இதற்காக இயேசு பயன்படுத்தும் உருவகம்தான் மரம், கனி பற்றிய உருவகம் ஆகும். நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும் என்று சொல்லும் இயேசு, போலி இறைவாக்கினர்களை அவர்கள் செய்யக்கூடிய பித்தலாட்டங்கள், ஏமாற்று வேலைகள், தன்னலத்தை மட்டுமே மையப்படுத்திய செயல்கள் ஆகியவற்றைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்ளலாம் என்கின்றார். ஆகையால், நாம் போலி இறைவாக்கினர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.
போலி இறைவாக்கினர்களையும் போலிகளையும் குறித்துச் சிந்தித்துப் பார்க்கின்ற இந்த வேளையில், நாம் போலிகளாக இருக்கின்றோமா அல்லது இறைவனுக்கும், நம்மை நம்பி வாழ்பவர்களுக்கும் உண்மையாய் இருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும் என்பது போல், நாம் நல்லவர்கள், உண்மையானவர்கள் என்பதை நமது நற்செயல்களால் நிரூபிக்கவேண்டும். அப்பொழுதான் நாம் நல்லவர்களாய், உண்மையுள்ளவர்களாய் இருக்கமுடியும்.
நாம் நல்ல கனிகளைக் கொடுக்கின்றோமா அல்லது நச்சுக் கனிகளைக் கொடுக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘அவர்களது முடிவு அவர்களுடைய செயல்களுக்கு ஏற்பவே அமையும்’ (2 கொரி 11: 15) என்று போலி இறைவாக்கினர்களைக் குறித்துக் கூறுவார் புனித பவுல். ஆகையால், நாம் நச்சுக் கனிகளை அல்ல, நல்ல கனிகளைக் கொடுத்து, நல்லவர்களாய், உண்மையுள்ளவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.