இயேசுவின் திரு இருதய வணக்கம் மாதம் ஜுன் 19

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தகுணமுள்ள சேசுவை சர்வேசுரனுடைய செம்மறியென்று அர்ச். ஸ்நாபக அருளப்பரை அழைக்கிறார். ஆனால் விவிலியத்தின் வேறோரிடத்தில் அவரை யூதாவின் சிங்கமென்று சொல்லியிருக்கிறதை வாசிக்கிறோம். பிதாவினால் அவருக்குக் கொடுக்கப்பட்ட அலுவலை எவ்வளவு விடாமுயற்சியோடும் தைரியத்தோடும் நிறைவேற்றினாரென்று நமக்குத் தெரியும். தமது விரோதிகளால் விளைந்த இடையூறுகளின் நடுவில் தமது பிதாவின் புகழ்ச்சியையும், அன்பையும் தமது ஆத்தும மீட்பையுமே முன்னிட்டு உழைத்துப் பாடுபட்டு மரித்து இறைப்பணியில் பிரமாணிக்கமாயிருந்தார்.
அருட்சாதனங்கள் வழியாய், விசேஷமாய் உறுதிபூசுதல் வழியாய் சேசுவின் திருஇருதயமானது ஞான தைரியத்தை நமது ஆத்துமத்தில் ஏற்படுத்தி உலகம், பசாசு, சரீர்மென்கிற மூன்று எதிரிகளோடு, நாம் எதிர்த்துப் போராடவும், நம்முடைய ஆசைபற்றுதல்களை ஜெயித்து கிறிஸ்தவனுக்குரிய புண்ணியங்களை கடைபிடித்து நமது ஆத்துமத்தையும், இன்னும் அநேகருடைய ஆத்துமங்களையும் மீட்கவும் பண்ணுகிறது.
சிம்சோனிடத்தில் விளங்கின உடல் பலம் கிறிஸ்தவர்களுடைய ஞானத் திடனுக்கு சாயலாயிருக்கிறது. கடவுள் இம்மனிதனுக்கு மிக அதிகமான வலுவை கொடுத்ததாக விவிலியத்தில் வாசிக்கிறோம். இவர் சிங்கங்களைக் கொன்றதாகவும், பகைவர்கள் தன் கைகால்களைக் கட்டப் பயன்படுத்திய பெரிய வடங்களை நூலைப்போல் அறுத்து எறிந்ததாகவும், உபயோகமில்லாத சாதனங்களால் தன் விரோதிகளில் அநேகரைக் கொன்றதாகவும், தேவாலயத்தின் பலமான பெரும் தூண்களை அசைத்துப் பிடுங்கினால் அந்தக் கட்டிடம் கீழே விழுந்து விரோதி மாண்டுபோனதாகவும் நாம் அறிகிறோம். இதேவிதமாய் நாம் நமது ஆத்தும் விரோதிகளை வென்று, பசாசின் தந்திர சோதனைகளையும், உலக துர்மாதிரிகைகளையும், திருச்சபை விரோதிகளின் தொந்தரவுகளையும் எதிர்த்து நின்று ஜெயித்து வேதசாட்சிகள், புனிதர்களுடைய மாதிரிகைகளைத் தாராள குணத்தோடு பின்பற்ற சேசுவின் திரு இருதய அருட்கொடைக்கு நம்மை ஏற்றவர்களாகச் செய்யும். புதுநன்மை வாங்கின அந்த பாக்கியமான நாளிலே நமது திருமுழுக்கு வார்த்தைப்பாட்டைப் புதுப்பித்து உறுதிப்படுத்தினோம். உலகம் பசாசை விட்டுவிட்டோமென்று யாவரும் அறிய வார்த்தைப்பாடு கொடுத்தோம். கிறிஸ்தவர்களெல்லோரும் இந்த வார்த்தைப்பாட்டின்படி உலகத்தைத் துறந்து, துறவற அந்தஸ்தில் பிரவேசிக்கவேண்டுமென்று நாம் சொல்லவில்லை. ஆனால் சகலரும் உலகம் படிப்பிக்கிற தப்பான போதகங்களையும் தீய அலுவல்களையும் விலக்கி, தங்கள் ஆசாபாசங்களை ஜெயித்து தங்களுடையவும், தங்கள் குடும்பத்தாருடையவும் ஆத்தும மீட்பைத் தேடி, கிறிஸ்தவனுக்குரிய கடமைகளையெல்லாம் நிறைவேற்றி, திவ்விய மாதிரிகையாகிய சேசுக்கிறிஸ்துவின் வாழ்வையும், புண்ணியங்களையும் தங்களிடத்தில் பிறப்பிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
இந்தக் கடமையை நிறைவேற்ற புனிதர்கள் கையாண்ட வழிகளை நாமும் பின்பற்றினாலொழிய மற்றப்படி நம்மால் இயலாது. அந்த வழிகள் எவை?
முதலாவது செபம், செபமாலை :- ஜெபத்தால் ஆகாத காரியம் ஒன்றுமேயில்லை. ஜெபமாலையானது நமது ஆத்துமத்தை மேலே எழுப்பி சகல கொடைகளுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றாகிய சேசுவின் திரு இருதயத்தோடு நம்மை ஐக்கியப்படுத்துகிறது. இந்த புனித நீரால் நாம் தேறுதலடைந்து, இறைப்பணியில் உத்தமர்களாய் தாராள குணத்தோடு நடந்து, சாத்தானுடைய தந்திர சோதனைகளையெல்லாம் வென்று ஜெபங்கொள்வோம். சோதனை வேளையில் நமது ஆத்துமத்தை சேசுவின் திருஇருதயத்தின் பக்கமாய் எழுப்பி அப்போஸ்தலரோடு சீடர்கள் அவரிடம் வந்து, ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம் என்று சொல்லி அவரை எழுப்பினார்கள் (மத்தேயு 8:25 என்றும் அல்லது ஒலோபெர்னஸ் என்பவனுடைய தலையை வெட்டுமுன் யூதித் என்பவன்: அவனது படுக்கையை அணுகி, அவனுடைய தலைமுடியைப் பிடித்துக்கொண்டு ‘இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வலிமை அளித்தருளும்” யூதித்து13:7 என்று கேட்டதுபோல் நாமும் கேட்போமாக.
இரண்டாவது :- அடிக்கடி தேவநற்கருணை உட்கொள்ளுதல். உணவானது எப்படி உடலின் உயிரைக் காப்பாற்றுகின்றது. கடைசி யுத்தத்தில் ஆத்துமத்திற்குத் திடன் உண்டாகும் படியாய்ச் சாகப்போகிற கிறிஸ்தவர்களுக்கு தேவநற்கருணை கொடுக்கத் திருச்சபையானது படிப்பிக்கிறது. திருச்சபையின் துவக்கத்தில் கிறிஸ்தவர்கள் நாள்தோறும் தேவநற்கருணை வாங்குவது வழக்கம். அதனால் ஞான சுறுசுறுப்பும், உத்தமதனமுமுள்ள வாழ்வு வாழ்ந்தார்கள்.
வேத கலாபனை காலத்தில் வேதசாட்சிகள் அடைபட்டிருந்த சிறைக்கூடத்திற்கு ரகசியமாய்த் தேவநற்கருணை கொண்டுபோய்க் கொடுக்கப்படும். புனிதர்கள் சேசுகிறிஸ்துவின் திரு உடலாலும் இரத்தத்தாலும் உறுதியடைந்து, தங்கள் உறவினர்களுடைய கண்ணீரையும், கொடுங்கோலருடைய கொடுமையையும் கவனியாமல் புனிதர்கள் முடி பெறும் இடத்துக்கு மகிழ்ச்சியாக சென்றனர். இக்காலத்திலே குருக்களும், வேத போதகர்களும், அருட்சகோதரிகளும் தங்கள் சுயநாட்டையும், உறவினர்களையும் விட்டு அயல் நாட்டுக்குப்போய் ஆத்தும் மீட்புக்காக உழைக்கிறதைக் காண்கிறோம். இன்னும் கிறிஸ்தவர்களுக்குள்ளே ஞான சுறுசுறுப்பும், ஆத்தும மீட்பில் ஆவலுமுள்ள பலர் தங்கள் சகோதரர்களுடைய ஆத்தும மீட்புக்காக புண்ணியப் பயிற்சியிலும் வாழ்நாளை நற்செயல்களிலும் செலவழிக்கிறார்கள். மனிதர்களும் வானதூதர்களும் ஆச்சரியப்படத்தக்க விதமாய் இவ்வளவு ஞானத் தைரியத்தைக் காண்பிக்கிறதற்குக் காரணம், தங்கள் ஆத்துமத்தில் அவர்கள் உட்கொள்ளும் தேவநற்கருணையிலுள்ள சேசுவின் திரு இருதயந்தான். ”சேசுக்கிறிஸ்துவை ஆத்துமங்களில் விதை, வெற்றியை அறுப்பாய்” என்ற ஒரு மேதகு ஆயருடைய வாக்கியம் இதற்கு சரியாய் ஒத்திருக்கும்.

Comments are closed.