இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். ஜுன் 15.

திருஇருதயம் தேவ வணக்கத்துக்கும் தேவ பயத்துக்கும் ஆசிரியர்.
இயேசுவின் திருஇருதயப் பக்தியானது தேவ அன்பின் பக்தி, அன்புக்கு தேவபயமும் தேவ வணக்கமும் அடித்தளம். இவற்றிலிருந்து தேவ அன்பைப் பிரிக்கமுடியாது. தன் தாய் தகப்பனை உருக்கமாய் அன்புச் செய்கிற குமாரன் அவர்களுக்குச் சகலத்திலும் கீழ்ப்படிந்து மரியாதை செய்து அவர்களுக்கு யாதொரு வருத்தம் வருவியாமலும் அவர்களுடைய துன்பத்துக்கு காரணமாயிராமலும் நடந்து தன்னால் இயன்றவரையில் அவர்களின் விருப்பப்படி நடப்பான். திவ்விய மீட்பர் இவ்வுலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவருடைய திரு இருதயமானது நடந்து கொண்ட விதத்தைக் கவனித்துப் பார். தமது திவ்விய பிதாவின் மட்டில் எவ்வளவு மரியாதை, எம்மாத்திரம் வணக்கம், ஆராதனை காண்பித்துவந்தார்; தமது பிதாவின் மகிமையைத் தேடுவதிலும், அவருடைய திருச்சித்தத்தை நிறைவேற்றுவதிலும், தேவ மகத்துவத்துக்கு எது உகந்ததோ அதை எப்போதும் செய்வதிலும், எவ்வளவு ஞான ஆவல் காண்பித்தார்!
ஆண்டவருக்கு நாம் காண்பிக்கவேண்டிய அன்பைப் பற்றிப் பேசாமல், அவருக்குக் காண்பிக்கவேண்டிய மரியாதை வணக்கத்தைப் பற்றிச் சில கன்னியர் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறதைக் கண்ட அர்ச். மார்கரீத் மரியம்மாள் சேசுவின் திரு இருதயத்தை நோக்கி ஒருநாள் முறையிடுகையில், திவ்விய இரட்சகர் புனிதையை நோக்கி : மகளே, அன்பின் பரிசுத்த பாசத்தால் நீ நமது இருதயத்தை அணுகிவர நாம் உனக்கு ஓர் விசேஷ வரமளிக்கிறோமென்பது உண்மை என்றாலும் நமது அளவற்ற தேவ மீட்பின் மட்டில் மரியாதையும், பயமும், வணக்கமும் இருக்கவேண்டும். ஆதலால் அந்தக் கன்னியர்களுடைய நடபடிக்கை உமக்கு விருப்பமானதுதான் என்று திருவுளம் பற்றினார்.
ஆதலால் தேவ பயமும், மரியாதை, வணக்கமும் நமக்குப் பயனும் தேவையுமானது. ஏனென்றால் ஒரு பக்கத்தில் பாவியானவன் எதிர்பார்க்கிற தீர்வை, நரகம் இவைகளின் பயமும், வேறோர் பக்கத்தில் அளவற்ற மகத்துவமான இரக்கம் நிறைந்த நமது அன்புக்குரிய ஆண்டவர் பேரில் நமக்குள்ள மரியாதை வணக்கமும், பாவத்தைப் பகைத்து வெறுக்க உதவுகிறதென்பதற்குச் சந்தேகமில்லை. இந்தத் தேவ பயமானது நாம் உறுதிபூசுதல் பெறும்போது நாம் அடைகிற தூய ஆவியின் ஏழுவரங்களில் ஒன்று. இது நம்முடைய புனிதப்படுத்தலுக்கு அடித்தளமாயிருக்கிறது. மெய்யாகவே தேவபயமானது பாவத்திலிருந்து நம்மை விலக்குகிறதுமல்லாமல், நாம் தேவ அருளை அடையவும், கிறிஸ்தவனுக்குரிய புண்ணியங்களை அனுசரித்து நமது ஆண்டவருக்கு மாறாத அன்போடு ஊழியம் செய்யவும் நமது ஆத்துமத்தை ஆயத்தப்படுத்துகிறது. ஆனதுபற்றியே பரிசுத்த ஆவியானவர் ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர் சங்கீதம்: 112 : 1 என்று திருவுளம்பற்றுகிறார்.
தேவபயத்தில் இரண்டுவிதமுண்டு. ஒன்று தீமையும் கெடுதலுமானது. மற்றொன்று பிரயோஜனமும் அடிமைகளுக்கு உரியது. அவர்களுடைய மனது துர்மார்க்கத்தில் மூழ்கியிருக்கிறது. என்றாலும் அடிமைகளைப்போல் கடூர தண்டனைக்குப் பயந்து குற்றம் செய்யாமலிருக்க முயற்சிப்பார்கள். இதேவிதமாய் சில கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். தேவ நீதியின் கோபாக்கினை தங்கள் மேல் விழுந்து தங்களை எங்கே நரகபாதாளத்திலே தள்ளிவிடுமோவென்று பயந்து பாவத்தைத் தவிர்ப்பார்கள். ஆனால் தண்டனைக்குப் பயந்து பாவத்தை விலக்குவார்கள், ஆனால் பாவத்தின் மேல் பற்றுதல் வைத்திருப்பார்கள். தங்களுடைய நடத்தை கடவுளுக்கு சிறிதளவும் பொருந்தாதென்று அவர்கள் அறிந்திருந்தாலும், ஆசாபாசங்களுக்கும், சாவான பாவங்களுக்கும், தங்கள் வாழ்வைக் கையளிக்க விரும்புவார்கள். இவ்வித அச்சத்தில் தேவ அன்பு என்பது கடுகளவுமில்லாததால் இது தீமையானதுதான்.
நன்மையும் பயனுள்ள தேவபயத்தில் அடிமைகளின் பயம், பிள்ளைகளின் பயம் ஆகிய இரண்டு படிகளுண்டு. அடிமைகளின் பயத்தைக் கொண்டிருக்கிற ஆத்துமமானது பாவத்தைப் பகைத்து அருவருத்துத் தள்ளுகிறது. ஏனெனில் பாவமானது தன்னை மோட்ச சம்பாவனையிலிருந்து விலக்கி முடிவில்லா நரகாக்கினைக்குத் தன்னை ஆளாக்கிவிடுமென்று ஆத்துமம் உணர்ந்திருக்கிறது. இந்தப் பயத்தை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கும் மனஸ்தாபம் அடிமை மனஸ்தாபம் எனப்படும். இந்த மனஸ்தாபம் பாவ கேடுகளை நீக்கவேண்டுமானால் குருவானவரிடமிருந்து ஒப்பரவு ஆசீர்வாதம் பெறுவது அவசியம். ஆனால் பிள்ளைகளின் பயமும் நாம் பாவத்தைப் பகைத்து அருவருக்கச் செய்கிறது. இவ்வித அருவருப்புக்குக் காரணம் நரகாக்கினையல்ல; மட்டில்லாத அன்புக்கு தகுதியான சேசுவின் திரு இருதயத்துக்குப் பாவமானது துக்கம் வருவிக்கிறதே என்கிற நினைவே இதற்குக் காரணம். தகப்பன் தன்னைத் தண்டிக்கமாட்டாரென்று அறிந்திருந்தாலும், அவருக்குச் சற்றேனும் வருத்தம் வருவிக்கக்கூடிய எதையும் வெகு கவனமாய் விலக்குகிற அன்புள்ள பிள்ளையின் பயம் இதுவே. இந்த நல்ல பிள்ளைக்கு வரக்கூடிய பெரிய கவலை, துன்பம் ஏதென்றால், தன் அன்பார்ந்த நல்ல தகப்பனுடைய இருதயத்துக்கு வருத்தம் வருவித்தேனே என்னும் நினைவுதான்.
சேசுக்கிறிஸ்துவின் உண்மையான அன்புள்ள உத்தம கிறிஸ்தவர்கள் தாழ்ச்சி வணக்கத்தோடு தேவ சந்நிதியில் வாழ்கிறார்கள். தாங்கள் செபம் பண்ணும்போது மகாத்துமாவாகிய ஆபிரகாம் என்பவரின் மாதிரியாக நான் சாம்பலும் தூசியுமாயிருந்தாலும் நான் என் ஆண்டவரோடு பேசுவேன் என்று வணக்கத்தோடும் நம்பிக்கையோடும் வேண்டிக்கொள்வார்கள். நல்ல கிறிஸ்தவர்கள் மற்ற மனிதர்கள் மட்டிலும் விசேஷமாய் சேசுவின் பிரதிநிதிகளாகவும் அவருடைய தெய்வீக அதிகாரத்திற்கு பங்காளிகளாகவும் விளங்குகிற குருக்கள் ஆயர்கள் மட்டிலும் சங்கை வணக்கம் புரிவார்கள். இவ்வித உத்தம பற்றுதல்களோடு வாழும்படி இந்தக் கிறிஸ்தவர்களைத் தூண்டுவது அவர்களிடத்திலுள்ள உயிருள்ள விசுவாசமேயாகும்.

Comments are closed.