இயேசுவின் திரு இருதய வணக்கம் மாதம் ஜூன் -12

திரு இருதயம் உண்மையான மகிமையை கொடுக்கிறது.
அளவில்லாத மகிமையையும், பெருமையையும் மோட்சத்தில் அனுபவித்த திருச் சுதனாகிய சேசுக்கிறிஸ்து உலக மகிமையின் அழிவைக் கற்பிக்கும் பொருட்டு இவ்வுலகத்துக்கு வந்து அழியாத மோட்சத்தின் வழியைத் தமது மாதிரிகைகளால் காண்பிக்க திருவுளமானார்.
மெய்யான பெருமை எதில் அடங்கியிருக்கிறதென்று பலருக்கு நிச்சயமாய் தெரியாது. தங்கள் செயல்களால் தங்களைப் பிரபல்யப்படுத்தின மனிதர்கள்தான் பெரியவர்களென்று அவர்கள் எண்ணுவார்கள். சில வேளை இந்தச் செயல்கள் மனுக்குலத்துக்குக் கேடாயிருந்திருக்கலாம். தங்கள் சேனையின் வல்லமையால் நாடுகளை கீழே விழச் செய்த அரசர்களின் பெயரை அவர்கள் மகிமைப்படுத்திக் கொண்டாடுவார்கள். ஆனால் அந்த அரசர்கள் அந்த சண்டைகளால் ஜெயித்திருப்பார்களேயாகில் அவர்கள் பெரிய மனிதர்களல்ல, பெருங்கொலைக்காரர்கள். தங்கள் பேராசையை நிறைவேற்ற ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொன்ற கொலைக்காரர்கள். காற்றால் அலைக்கழிக்கப்படுகிற தூசியைப்போல் உடனே காணாமல் மறைந்து போகிற அரசை ஏற்படுத்த உலகத்தை மாசுப்படுத்தினார்கள். இத்தகைய அரசர்களின் வாழ்வு மனித சந்ததிக்குக் கேட்டைத்தான் விளைவிக்கும்.
மற்றவர்களுக்கு மேலாய்த் தன்னை உயர்த்த வேண்டுமென்கிற ஆசையானது மனிதர்களை தீயவர்களாக்குகின்றது. அப்படியே ஒரு மனிதனிடத்தில் தன் குடும்பத்துக்குப் போதுமான செல்வம் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். இதைக் கொண்டு அவன் சந்தோஷமாய் வாழலாம். ஆனால் தன்னைவிட பெரிய பணக்காரர்கள் இருக்கிறார்களே என்கிற கவலை அவனுக்கு ஏற்படுகிறது. ஒன்றில் அவர்களோடு சரிசமமாகவேண்டும் அல்லது அவர்களுக்கு மேற்பட்டவனாக வேண்டும், இது நிறைவேறுகிறவரையில் அவனுக்குத் திருப்தி ஏற்படாது. ஆதலால் அதிக செல்வந்தன் ஆக ஆக, அதிக கவலையும் பெரும் கேடும் உண்டாகிறது. ஏனென்றால் தன்னைவிட பெரிய பணக்காரர்கள் இன்னும் இருக்கிறார்களேயென்ற எண்ணம் அவனை இராப்பகலாய் வாட்டுகிறது.
இன்னும் கேள்:
ஒரு கிராமத்தில் ஒரு வாலிபனிருக்கிறான். அவனுக்கு அறிவும் திறமையும் உண்டென்று வைத்துக்கொள்வோம். ஆதலால் இவன் சொல்லுகிறபடி அவ்வூர் மக்களில் பலர் நடக்கிறார்கள். இந்த நிலையில் அவன் திருப்தி அடைந்திருப்பானா? இல்லை, இல்லை. இன்னும் மேலே ஏறவேண்டும் ஊருக்கு முதல் மனிதனாய் ஆகவேணும் என்ற, வீணும் விழலுமான பெருமை அவனுக்கு உண்டாகிறது! நாள் செல்லச் செல்ல அவனிலும் சாமர்த்தியவான்கள் தோன்றுகிறார்கள். அவர்கள் அதிகாரிகளாகவே இவன் கீழே போகிறான். அல்லது இவன் தன் வாழ்நாளெல்லாம் செல்வாக்கில் வாழ்ந்தாலும் இறந்த பிறகு வரும் பயனென்ன? (சில நாளைக்குள்ளாக இவனிலும் திறமையுள்ள வேறு சிலர் எழும்புகிறார்கள்) அவ்வூரார் இவனைக் கூடிய சீக்கிரம் மறந்துபோகிறார்கள். கொஞ்ச காலத்துக்குப் பிற்பாடு இவனைப்பற்றிப் பேசுபவர் ஒருவருமில்லை. சிலவேளை இவன் ஜீவித்த காலத்திலிருந்த செல்வாக்கைவிட, அந்தக் கிராமம், அதிக செல்வாக்காயிருக்கிறதாக்கும்.
உலக பெருமையானது மணலில் பதிகிற காலடித் தடத்துக்குச் சமம். அந்தத் தடமெல்லாம் ஒன்றில் காற்றினாலோ அல்லது மற்றப் பிராணிகளின் காலடியினாலோ அழிந்துபோகிறது. இதுபோல்தான் உலக பெருமையும் அழிந்துபோகும். இந்த அழிவுக்குரிய வீண் மகிமைக்காக தன் ஆத்துமத்தையும், நித்திய மோட்ச பாக்கியத்தையும் இழந்து போவது அறியாமை.
ஆனால் வேறோர் மகிமையிருக்கிறது. அது ஒரு போதும் வாடாது, ஒருபோதும் அழியாது. அது எந்த மகிமை? புனிதத்தை அஸ்திவாரமாகக் கொண்ட மகிமை. என்றென்றைக்கும் மகிமைப்படுத்தும்படி புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் மகிமை. இதுவே தாராளகுணமும், உத்தமதானமும் நிறைந்த கிறிஸ்தவர்களின் மகிமை.
நம்முடைய உன்னத மாதிரிகையாகிய சேசுவின் திரு இருதயமானது தமது போதகங்களினாலும், மாதிரிகைகளினாலும் மகிமையின் பாதையை நமக்குக் காண்பித்திருக்கிறது. திவ்விய சேசு இவ்வுலக வீண் மகிமையைத் தேடாமல் தமது பிதாவின் மகிமையையே தேடினார். தமக்கோவென்றால் நிந்தை அவமானங்களையும், பாடுகளையும் சிலுவை மரணத்தையும் மாத்திரம் தெரிந்து கொண்டார். இதன் வழியாகவே தமது மகிமை உத்தானத்துக்கும், சகல புனிதர்களுக்கும் நித்திய புகழ்ச்சி ஸ்தோத்திரங்களுக்கும் உரிமையாளரானார்.
புனிதர்கள் இவருடைய தெய்வீக மாதிரிகைகளையும் புண்ணியங்களையும் கண்டுபாவித்து, தங்கள் ஆசைப் பற்றுதல்களோடு எதிர்த்துப் போராடி, சோதனை நேரங்களில் திவ்விய சேசுவுக்குப் பிரமாணிக்கமாய் நடந்து, அவருடைய அன்புக்காக துன்ப தரித்திரங்களையும், நிந்தை அவமானங்களையும், கொடிய வேதனைகளையும் அனுபவித்து, சேசுக்கிறிஸ்துவின் ஊழியத்தில் சாகும் வரை நிலைத்திருந்தார்கள். இப்போதோவென்றால் திவ்விய சேசுவும், பரிசுத்த ஆவியானவரும் அவர்களை மோட்ச இராச்சியத்தில் மகிமைப்படுத்துகிறார்கள்.
அவர்கள் சர்வேசுரனின் பிள்ளைகளுக்குரிய நித்திய பாக்கியத்தை அனுபவிக்கிறார்கள். அவர்களைப் பகைத்தவர்களும், தீங்கிளைத்தவர்களும் நித்திய இருளிலும் நரக நெருப்பிலும், அவமானத்திலும் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். பரலோக மகிமையின் கதிர்களானது இவ்வுலகத்திலே புனிதர்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. திருச்சபையானது அவர்களை உலகத்தின் எத்திசையிலும் மகிமைப்படுத்தி அவர்களுக்கு வணக்கம் வருவிக்கிறது. அவர்களை விரோதித்து யாவராலும் மறந்து அவமதிக்கப்பட்டு வருகிறார்கள். அர்ச். இஞ்ஞாசியார், அர்ச். சவேரியார், அர்ச். ஞானப்பிரகாசியார் ஆகியோர் தங்களுடைய புனிதத்தன்மையால் தங்களுடைய பெயரைப் பிரபல்யப்படுத்தியிராவிடில் யார் அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி நினைப்பார்கள்?
அர்ச். இஞ்ஞாசியார் நோயுற்றிருந்த காலத்தில் புனிதர்களுடைய சரித்திரங்களை வாசித்ததினிமித்தம் தேவ அருட்கொடையால் தூண்டப்பட்டவராய் முழுதும் மனந்திரும்பி செபமும் தவமும் நிறைந்த வாழ்வு வாழ ஆரம்பித்து, தரித்திர வேடம் அணிந்து, தேவ சித்தத்துக்காக மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்குத் தொண்டூழியம் செய்வதில் தன்னை முழுதும் கையளித்தார்.
மகிமை பெருமையின் பேரில் நாட்டமுடையவரை அவருடைய அண்ணன் அர்ச். இஞ்ஞாசியாரை நோக்கி, நம்முடைய பேருக்கும் புகழுக்கும் தகாத இந்த இழிவான தொழிலை நீர் செய்வதை நான் பார்க்கும்போது, எனக்கு வெட்கமாயிருக்கிறது. நீர் தரித்திருக்கிற லொயோலாவென்னும் நம்முடைய முன்னோர்களுடைய புகழ் பெற்ற பெயரை ஞாபகப்படுத்திக்கொள்ளும். லொயோலா வம்சத்தின் பெருமைக்கு இழிவை வருவியாதேயும் என்றார். உலக மனிதர்களிடத்தில் விளங்குகிற மூடநம்பிக்கைக்கும், அறியாத்தனத்தன்மைக்கும் இதுவே ஒரு நல்ல அத்தாட்சி. அர்ச். இஞ்ஞாசியார் தமது புனிதத்தன்மையால் அழியாத மகிமையைத் தமது குடும்பத்துக்கு வருவியாதிருப்பாரேயாகில், லொயோலாவென்கிற பெயரும் மற்ற அநேக பெயர்களைப்போல் இருளில் மூழ்கியிருக்கும்.

Comments are closed.