சிறாரைப் பாதுகாப்பதற்கு அனைத்துவிதமான முயற்சிகள்

சிறாரைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 12, இவ்வெள்ளியன்று உலகினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூன் 12, இவ்வெள்ளியன்று, குழந்தைத் தொழிலை எதிர்க்கும் உலக நாள் (World Day Against Child Labour) கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, குழந்தை தொழில்முறை இரத்துசெய்யப்படவேண்டும் என்ற ஹாஷ்டாக்குடன் (#NoChildLabourDay) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“பல சிறார், தங்கள் வயதிற்கு மீறிய வேலைகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர், இது அவர்களின் குழந்தைப்பருவத்தைப் பறிக்கின்றது மற்றும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது, எனவே, அவர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு, நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் பதிவாகியுள்ளன.

ஜூன் 10, கடந்த புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் மறைக்கல்வியுரையின் இறுதியிலும், குழந்தைத் தொழிலை எதிர்க்கும் உலக நாள் பற்றிக் குறிப்பிட்டு, குழந்தை தொழில்முறை ஒழிக்கப்படுமாறு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும், ஜூன் 12, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “இயேசுவின் திருஇதயத்திலிருந்து இரக்கம், மன்னிப்பு, மற்றும், கனிவை நாம் பெற்றால், நம் இதயம், மிகவும் பொறுமையுள்ளதாக, மிகவும் தாராளமனதுள்ளதாக, மற்றும், மிகவும் இரக்கமுள்ளதாக படிப்படியாக மாறும்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

திருத்தந்தையின் சந்திப்புக்கள்

மேலும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களையும், அரசியலமைப்பு சட்டம் சார்ந்த விவகாரங்களைக் கண்காணிக்கும், இத்தாலிய அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைவர் Marta Cartabia அவர்களையும், இத்தாலியில் கலாச்சாரத்திற்குப் பணியாற்றும் தேசிய திருஅவை இயக்கத்தின் (MEIC) முக்கிய பிரதிநிதிகள் உட்பட, இன்னும் சில முக்கிய நபர்களை, வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.