இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 8-ம் தேதி.

இயேசுகிறிஸ்து நாமும் தம்மைப்போல் இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தகுணமும் உள்ளவர்களாய் பிறரிடம் மிகுந்த பிறரன்பு மிக்கவர்களாய் வாழ வேண்டுமென்று தமது கட்டளைகளிலும் போதனைகளிலும் எடுத்துரைக்கிறார். “இதுவே என்னுடைய கற்பனை ” என்கிறார்.
நாம் சேசுவின் திரு இதயத்தை அன்பு செய்தால் நாம் சேசுவை மட்டுமல்ல இன்னும் சேசு தமது சகோதரர்களென்றும், தமது பரம பிதாவின் மகன்களென்றும் அழைக்கிற மற்றெல்லா மனிதர்களையும் அன்பு செய்வோம். நாம் சேசுவின் அன்புக்காக எல்லா மனிதர்களையும் மரியாதையோடும், அன்போடும் நடத்துவோம். தவிர அவர்களுடைய மனதைப் புண்ணாக்கி அவர்களுடைய பெயரை களங்கப்படுத்தும் எதையும் தவிர்த்து நடக்க கவனமாயிருப்போம்.
நல்ல கிறிஸ்தவர்கள் தங்களுடைய பிறரிடத்திலுள்ள குறைகளைப்பார்க்கிலும் அவர்களது புண்ணியங்களைப்பற்றி அதிகமாய் கவனிப்பார்கள். சில சமயங்களில் தங்களுடைய பிறரிடம் குற்றம் உண்டென்று அவர்களுக்கு உறுதியாய் தெரிந்தாலும் அதை அவசரமின்றியும் தக்கக் காரணமின்றியும் வெளியே சொல்லாதிருப்பதோடுகூட அவர்களுடைய நல்ல பெயரையும் தங்களாலியன்ற மட்டும் காப்பாற்றுவார்கள். அன்னப்பறவை நீரைப் பிரித்து பாலை மட்டும் குடிப்பதுபோல் நல்லக் கிறிஸ்தவர்கள் தங்கள் பிறரிடத்தில் எது குற்றம், எது துர்மாதிரிகையென்று பாராமல், அவர்களிடத்திலுள்ள நன்மையை மட்டும் கவனித்து வெளியே பேசுவார்கள்.
அதற்கு மாறாக தீய கிறிஸ்தவர்கள் பிறர் குடும்பங்களில் காணும் புண்ணியங்களை விட்டு விட்டு கண்ணை மூடிக் கொண்டு அவர்களுடைய குறைகளை மட்டும் பேசுவார்கள். பிறரிடம் தீயக் காரியங்களைக் கண்டால் அவர்களைத் திருத்த வேண்டும். அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக தீமையாய் அறிவிப்பார்கள். இப்படியாக அவர்களுடைய நல்ல பெயரை கெடுத்து விடுவார்கள்.
செயல்.
திவ்விய சேசு உன்னிருதயத்தில் அடிக்கடி எழுந்தருளிவர ஏதுவாயிருக்கிற உன் நாவால் பிறர் சிநேகத்தைப் பங்கப்படுத்தக்கூடிய எந்தக் குற்றத்தையும் வெகு எச்சரிக்கையோடு அகற்றிவிடும். எல்லார் மட்டிலும் பொறுமையாய் நடந்துகொள். எல்லோரோடும் சிநேகமாயிரு. ஒருவரையும் பகைக்காதே. பரிசுத்த பிறர் சிநேகப் பயிற்சியால் சேசுவின் திரு இருதயத்துக்குப் பிரியப்பட சமயந்தேடு. உன் அயலானைப்பற்றி எப்போதும் நன்மையாய் நினைக்கவும், பேசவும் கற்றுக் கொள். எளியவர்களிடமாய்த் திவ்விய சேசு இருக்கிறாரென்றெண்ணி அவர்களுடைய ஆத்தும சரீரத்துக்கு உன்னாலான உதவியைச் செய். கடைசியாய் உனக்கு மற்றவர்கள் செய்யாதிருக்க விரும்புவதை, நீயும் மற்றவர்களுக்குச் செய்யாதே.
சேசுவின் திரு இருதய நவநாள்.
கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்று திருவுளம் பற்றியிருக்கிற திவ்விய சேசுவே, தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி ஆராதனைக்குரிய உமது திருநாளில் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக்கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக்கொள்ளும் மன்றாட்டு ஏதென்றால்…
(வேண்டியதை உறுதியோடு கேட்கவும்)
சகல நன்மைகளுக்கும், பேறுபலன்களுக்கும் வற்றாத ஊரணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப்போகிறேன். தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப்போகிறேன். தாமே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே நான் தட்டிக் கேட்கப்போகிறேன். ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே தேவரீருடைய தஞ்சமாக ஒடிவந்தேன். இக்கட்டு இடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவிரென்று நம்பியிருக்கிறேன்.
தேவரீர் சித்தம் வைத்தாலே போதும். என் செபம் பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே, தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுவதும் அபாத்திரவான் தான், ஆகிலும் நான் இதனாலே அதைரியப்பட்டு பின்னடைந்து போவேனல்ல; தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தை தேவரீர் தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் எங்களை நோக்கியருளும். என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கு இரங்காமற் போகாது.
இரக்கமுள்ள திருஇருதயமே! என் விண்ணப்பத்தின்மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே! தேவரீரை நான் வாழ்த்தி வணங்கி போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே! ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதய தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியை கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும். நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன்.
ஆமென்.

Comments are closed.