மூவொரு கடவுள் (ஜூன் 07)

I விடுதலைப் பயணம் 34: 4b-6, 8-9
II 2 கொரிந்தியர் 13: 11-13
III யோவான் 3: 16-18
அனைவரும் நிலைவாழ்வு பெற விரும்பும் மூவொரு கடவுள்
நிகழ்வு
செய்தியாளர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் விண்ணகத்தின் வாசலுக்கு முன்பாக நின்றுகொண்டு, அங்கிருந்த பேதுருவை நேர்காணல் செய்யத் தொடங்கினார். முதல் கேள்வியாக அவர் பேதுருவிடம், “விண்ணகத்தில் எத்தனை இந்துக்கள் இருக்கின்றார்கள்?” என்றார். அதற்குப் பேதுரு, “இந்துக்கள் எல்லாம் இங்கு கிடையாது” என்றார். “சரி, இஸ்லாமியர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் செய்தியாளர். “இஸ்லாமியர்கள் எல்லாம் இங்கு கிடையாது” என்றார் பேதுரு. இப்பதிலைக் கேட்டு பெரிதும் வியப்புற்ற அந்தச் செய்தியாளர், “அப்படியானால், பிரிந்த சபையைச் சார்ந்தவர்கள் எத்தனை பேர் இங்கு இருக்கின்றார்கள்?” என்றார். “பிரிந்த சபையைச் சார்ந்தவர்களும் இங்கு கிடையாது” என்றார் பேதுரு.
“அப்படியானால், இங்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டும்தான் இருக்கின்றார்களா?” என்று சற்று கோபத்தோடு கேட்டார் செய்தியாளர். “கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும் இங்கு கிடையாது” என்று பொறுமையாகச் சொல்லி முடித்த பேதுருவிடம், கோபத்தின் உச்சிக்கே சென்ற செய்தியாளர், “விண்ணகத்தில் இந்தும் இல்லை; இஸ்லாமியரும் இல்லை; பிரிந்த சபையைச் சார்ந்தவர்களும் இல்லை; கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும் இல்லை என்றால் யார்தான் இங்கு இருக்கின்றார்கள்?” என்று கேட்டார். அப்பொழுது பேதுரு மிகவும் அமைதியாக, “விண்ணகத்தில் இந்து, இஸ்லாமியர், பிரிந்த சபையைச் சார்ந்தவர், கத்தோலிக்க சபையைச் சார்ந்தவர் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது; இங்கு எல்லாரும் கடவுளின் மக்கள்; எல்லாரும் கடவுளுடைய அன்பில் மகிழ்ந்திருக்கின்றார்கள்.” என்றார்.
ஆம், விண்ணகம் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கானதோ, பிரிவிற்கானதோ அல்ல, அது எல்லாருக்கும் ஆனது. ஏனென்றால், கடவுள் எல்லாரும் நிலைவாழ்வு பெற விரும்புகின்றார். மூவொரு கடவுளின் பெருவிழாவான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, ‘அனைவரும் நிலைவாழ்வு பெற விரும்பும் மூவொரு கடவுள்’ என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
எவரும் அழிய விரும்பாத கடவுள்
யோவான் எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகமானது, இயேசுவுக்கும் பரிசேயர் தலைவர் நிக்கதேமிற்கும் இடையே நடக்கும் நீண்ட உரையாடலாக இருக்கின்றது. இந்த உரையாடலில் மூன்று முதன்மையான உண்மைகள் வெளிப்படுக்கின்றன. அதில் முதலாவது உண்மை. கடவுள் எவரும் அழிவுற விரும்புவதில்லை என்பதாகும். “எவரும் அழியாமல்” என்று இன்றைய நற்செய்தியில் வருகின்ற வார்த்தைகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன.
இதையே நாம் வேறுவிதமாகச் சொல்லவேண்டும் என்றால், கடவுள், யூதர் மட்டுமல்ல, அனைவருமே வாழ்வு பெறவேண்டும் என்று விரும்புகின்றார் என்று சொல்லலாம். யோவான் நற்செய்தி பத்தாம் அதிகாரத்தில் இயேசு சொல்லக்கூடிய, “நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்” (யோவா 10: 10) என்ற வார்த்தைகளும், புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் வருகின்ற, “எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகின்றார்” (1திமொ 2: 4) என்ற வார்த்தைகளும் இதற்குச் சான்றுகளாக வருகின்றன. இதன்மூலம் கடவுள், யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் வாழ்வடைய விரும்புகின்றார் என்ற உண்மையானது நமக்கு விளங்குகின்றது.
எல்லார்மீதும் அன்புகொள்ளும் கடவுள்
கடவுள், யாரும் அழிந்து போய்விடாமல், எல்லாரும் வாழ்வுபெற வேண்டும் என்று விரும்புகின்றாரே… அதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நமக்கு ஒரு கேள்வி எழலாம். அதற்கு இன்றைய நற்செய்தி வாசகம் பதில் தருகின்றது. ஆம், நம்மீது கொண்ட அன்பினாலேயே கடவுள் யாரும் அழிவுறாமல், எல்லாரும் வாழ்வடைய வேண்டும் என்று விரும்புகின்றார்.
கடவுள் நம்மீது அன்பு கொண்டார் எனில், அது சாதாரண அன்பல்ல அல்லது ஒரு வெறும் சொல் மட்டுமல்ல, மாறாக அது செயல். கடவுள் நம்மீதுகொண்ட அன்பின் வெளிப்பாடாகத்தான் தன் ஒரே மகன் இயேசுவை இவ்வுலகிற்கு அளித்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்ட பேரன்பை வெளிப்படுத்தினார். விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், கடவுள் இரக்கமும் பரிவும் உள்ளவர், பேரன்பு கொண்டவர் என்று எடுத்துக்கூறுகின்றது அல்லவா! அதற்கு அர்த்தம் தருவதாய் இருக்கின்றது, கடவுள் தம் ஒரே மகனை நாம் அனைவரும் நிலைவாழ்வு பெறுவதற்காகக் கையளித்தது! யாரும் தம் ஒரே மகனையே கையளிப்பார்களா…? ஆனால், கடவுள் நமக்காகத் தம் ஒரே மகனைக் கையளித்து, தன் அன்பை வெளிப்படுத்தினார்.
நம்பினோருக்கு நிலைவாழ்வை அளிக்கும் கடவுள்
கடவுள் நாம் அனைவரும் நிலைவாழ்வு பெறுவதற்காக தன் ஒரே மகனையே கையளித்தார் எனில், அந்த நிலைவாழ்வினைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் ஒரு முக்கியமான செயலைச் செய்யவேண்டும். அதுதான் அவருடைய ஒரே மகன்மீது நம்பிக்கை வைத்து வாழ்வது. இது குறித்து இயேசு, தன்னிடம் வந்த மக்களிடம் சொல்கின்றபொழுது, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்” (யோவா 6: 29) என்று குறிப்பிடுவார். ஆகையால், நம்மீதுகொண்ட பேரன்பினால், கடவுள் நமக்கு நிலைவாழ்வினைத் தர இருக்கின்றபொழுது அதற்கு நாம் அவருடைய மகன் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும். இது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.
இங்கு நமக்கு முன் ஒரு கேள்வி எழலாம். அது என்னவெனில், கடவுள் தன் மகன்மீது நம்பிக்கை கொள்பவருக்கு நிலைவாழ்வைத் தருகின்றார் எனில், அவர் மகன் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாதவருக்கு என்ன தருவார் என்பதுதான் அந்தக் கேள்வி. யாரும் அழிவுற விரும்பாத கடவுள் யாருக்கும் தண்டனைத் தீர்ப்பு தருவதில்லை (யோவா 5:22) மாறாக, அவர்களுடைய நம்பிக்கையின்மையே அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பை அளிக்கின்றது. புனித பேதுரு தன்னுடைய இரண்டாவது திருமுகத்தில், நாம் மனம்மாறவேண்டும் என்பதற்காகக் கடவுள் பொறுமையோடு இருக்கின்றார் என்று குறிப்பிடுவார் (2 பேது 3: 9). இங்கு மனம்மாற்றம் என்பது, இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுவதுபோல, நம்முடைய நடத்தயைச் சீர்படுத்துவது (2 கொரி 13:11) அதைத் தொடர்ந்து ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்வது.
ஆகையால், நாம் நம்மீது பேரன்புகொண்ட கடவுள் நமக்குத் தரும் நிலைவாழ்வினையும், இயேசு கிறிஸ்துவின் அருளையும், தூய ஆவியாரின் நட்புறவையும் நாம் பெற்றுகொள்ள, இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, அவர் வழியில் நடக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘பெறுவதல்ல, தன்னையே தருவதுதான் அன்பு’ ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்க்பெல்லோ (1807-1882) என்ற எழுத்தாளர். ஆகவே, நாம் அனைவரும் நிலைவாழ்வு பெற தன் ஒரே மகனையே தந்து பேரன்பிற்கு இலக்கணமாக இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.