ஜுன் 7 : நற்செய்தி வாசகம்

உலகை மீட்கவே கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பினார்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-18
அக்காலத்தில்
இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: “தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————-
மறையுரைச் சிந்தனை (ஜூன் 7) : மூவொரு இறைவன் பெருவிழா
இரக்கமும் பரிவும், பேரன்பும் கொண்ட (மூவொரு) இறைவன்
ஓர் ஊரில் அனாதை இல்லம் ஒன்று இருந்தது. அதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் தங்கி இருந்தார்கள். அந்த அனாதை இல்லத்தில் அவ்வப்போது சில அசம்பாவிதங்களும் நடந்துகொண்டு வந்தன. அதற்கெல்லாம் அந்த அனாதை இல்லத்தில் இருந்த குறிப்பிட்ட ஓர் இளைஞன் மட்டும்தான் காரணமாக இருப்பான் என்று அனாதை இல்லத்திற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரி நினைத்து வந்தார். அதனால் அந்த இளைஞனை எப்படியாவது கையும் மெய்யுமாக பிடித்து வெளியே அனுப்ப வேண்டும் என அவர் எண்ணிக்கொண்டிருந்தார்.
ஒருநாள் அந்த அதிகாரி இல்லத்தில் இருந்த பால்கனியிலிருந்து கீழே நடப்பவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது குறிப்பட்ட அந்த இளைஞன் யாருமே செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்ட பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தான். இதுதான் அவனைப் பிடிப்பதற்கு சரியான தருணம் என்று சொல்லி அவனையே அவர் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞன் தன்னுடைய கையில் வைத்திருந்த ஏதோ ஓர் அட்டையை அருகே இருந்த மரத்தில் தொங்கவைத்து விட்டுத் திரும்பிவிட்டான்.
அவனையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த அந்த அதிகாரி அவனுக்குப் பின்னாலே சென்று, அவன் மரத்தில் தொங்கப்போட்டிருந்த அட்டையை எடுத்துப் பார்த்தார். அந்த அட்டையை எடுத்துப் பார்ப்பதற்கு முன்பாக அந்த இளைஞன் அட்டையில் ஏதாவது தேவை இல்லாமல் எழுதியிருப்பான் என்றுதான் அவர் நினைத்திருந்தார். ஆனால் அவர் அட்டையை எடுத்துப் பார்த்தபோது அவருடைய எண்ணமெல்லாம் மாறிப்போனது. ஏனென்றால் அதில் ‘இந்த அட்டையைப் பார்க்கின்ற யாவரையும் நான் உண்மையாக அன்பு செய்கிறேன் (To whoever finds, I Love you)” என்று எழுதியிருந்தது. இந்த வசனத்தைப் படித்தபிறகு அவன் அந்த இளைஞனைக் குறித்த எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.
அந்த இளைஞன் ‘யாவரையும் நான் அன்பு செய்கிறேன்’ என்று எழுதியது போன்றுதான் மூவொரு இறைவனும் நம்மை முழுமையாக அன்புசெய்வதாக இறைவார்த்தையின் வழியாக, ஒவ்வொரு நிகழ்வின் வழியாக நமக்கு எடுத்துரைக்கின்றார். மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் அனைத்தும் ‘இரக்கமும் பரிவும் பேரன்பும் கொண்ட (மூவொரு) இறைவன் என்றதொரு சிந்தனையை வழங்குகின்றன. நாம் அதனைக் குறித்து சற்று விரிவாகச் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
அதற்கு முன்பாக மூவொரு இறைவனைக் குறித்து ஒருசிலவற்றை சிந்தித்துப் பார்ப்போம். கிறித்தவ இறையியலானது கடவுள், இறைத்தன்மையில் ஒருவராகவும், ஆள்த்தன்மையில் தந்தை, மகன், தூய ஆவி என மூவராகவும் இருக்கிறார். கடவுளின் இந்த இயல்பே திரித்துவம் (Trinity) அல்லது அதிபுனித திரித்துவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்று இறை ஆட்களில் தந்தையும் கடவுள், மகனும் கடவுள், தூய ஆவியும் கடவுள். இருப்பினும் தந்தை, மகனிடமிருந்தும் தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்; மகன், தந்தையிடமிருந்தும் தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்; தூய ஆவி, தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் வேறுபட்டவர். எனவே, இவர்கள் ஒரே கடவுளின் மூன்று ஆட்கள்; மூவரும் மூன்று கடவுள்கள் அல்லர். எந்தவித வேறுபாடும் இன்றி, இந்த மூவருக்கும் ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே இறைத்தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே” என எடுத்துகின்றது. எனவே நாம் இதைக் குறித்து முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முற்படாமல் மறையுண்மைகள் என ஏற்றுக்கொள்வோம்.
மூவொரு கடவுள் எப்படிப்பட்டவர் என அறிந்த நாம் இன்றைய இறைவார்த்தையின் வழியாக நமக்கு வழங்கப்படும் செய்தியினையும் சிந்தித்துப் பார்ப்போம். விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் “ஆண்டவர் இரக்கமும் பரிவும், உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தாமதிப்பவர்; பேரன்புமிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்” என்று வாசிக்கின்றோம். இக்கருத்தை அதாவது ஆண்டவர் எவ்வளவு பேரன்பு மிக்கவராக இருக்கிறார் என்பதை நற்செய்தி வாசகமானது இன்னும் தெளிவாக விளக்கின்றது. “தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெரும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்” என்று அங்கே நாம் வாசிக்கின்றோம். ஆம், உலக மீட்புக்காக தன்னுடைய மகனையே கையளிக்கின்ற அளவுவுக்கு கடவுளது அன்பு மேலானது, உயர்வானது. கடவுளின் இத்தகைய அன்பிற்கு பாத்திரமாக இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இறைவனின் அன்பிற்குப் பாத்திரமாக இருக்க நாம் செய்யவேண்டிய முதல் காரியம் அவருடைய அன்பு மகனும், நம் ஆண்டவருமான இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வதாகும். நம்பிக்கை என்று சொல்கிறபோது எத்தகைய நம்பிக்கை என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். வெறுமனே பெயரளவில் இருக்கும் நம்பிக்கை நம்மை நிலைவாழ்வுக்குக் கொண்டு செல்லாது. மாறாக நற்செயலுடன் கூட நம்பிக்கையே நம்மை நிலைவாழ்வுக்கு இட்டுச் செல்லும். இப்படிப்பட்ட நம்பிக்கைக்கு எடுத்துகாட்டாக இருப்பவர்தான் நம் முதுபெரும் தந்தை ஆபிரகாம். யாக்கோபு எழுதிய திருமுகம் 2:23 ல், “ஆபிரகாம் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டார், அதனை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்’ என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் அவர் கடவுளின் நண்பர் என்னும் பெயர் பெற்றார்” என்று வாசிக்கின்றோம் . ஆம், ஆபிரகாம் ஆண்டவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார். அதனாலேயே அவர் கடவுளுக்கு உகந்தவர் ஆனார். நாமும் ஆண்டவரிடத்தில் ஆபிரகாம் கொண்டிருந்த நம்பிக்கையைக் கொண்டு வாழும்போது மூவொரு கடவுள் தரும் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.
அடுத்ததாக நாம் செய்யவேண்டிய காரியம்; நாம் நம்முடைய நடத்தையை சீர்படுத்துவதாகும். அதாவது பழைய பாவ வாழ்விலிருந்து மனம்மாறி புதிய வாழ்வு, கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழவேண்டும். தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவார், “சகோதர சகோதரிகளே, இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வதாவது: மகிழ்ச்சியாய் இருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்படுத்துங்கள்” என்று. ஆம், நாம் ஒவ்வொருவரும் மூவொரு கடவுளின் அன்பிற்கு உகந்தவர்களாக இருக்க நம்முடைய நடத்தையை – வாழ்வை – சீர்படுத்தவேண்டும்.
முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். ஒருமுறை அவன் தூர தொலைவில் இருக்கின்ற தன்னுடைய நாட்டு மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதாக கால்நடையாகவே சுற்றுப் பயணம் மேற்கொண்டான். அப்போது குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் அவனுடைய கால்களைப் பதம்பார்த்தன. அவன் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்ததும், அரண்மனைக்கு வந்து மந்திரியிடம் ஆணையிட்டான். “மந்திரியாரே! நம்முடைய நாட்டில் இருக்கும் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருக்கின்றன. ஆகையால் என்னுடைய கால்கள் காயமடையாதவாறு, சாலைகள் அனைத்திலும் மிருகத் தோல்களை விரியுங்கள்” என்றான். இதைக் கேட்ட மந்திரிக்கு தூக்கிவாரிப் போட்டது. எல்லாச் சாலைகளிலும் மிருகத் தோல்களைப் பரப்பவேண்டுமென்றால் நிறைய மிருகங்களைக் கொல்லவேண்டுமே என்று தீவிரமாக யோசித்தான்.
அப்போது அரசபையில் இருந்த முதியவர் ஒருவர், “அரசே! நம்முடைய நாட்டுச் சாலைகள் அனைத்திலும் மிருகத் தோல்களைப் பரப்புவதற்குப் பதிலாக உங்களுக்கு தோலினால் ஒரு செருப்புத் தைத்துப் போட்டுக்கொள்ளலாமே” என்று ஆலோசனை கூறினார். அரசனுக்கும் அது சரியெனப் பட்டது.
கதையில் வரும் அரசனைப் போன்று நாமும் நம்மை, நம்முடைய வாழ்வைச் சீர்படுத்தாமல், அடுத்தவரை, இந்த உலகினை சீர்படுத்த நினைக்கிறோம். உலகைச் சீர்படுத்துவதற்குப் பதில் நம்மைச் சீர்படுத்துவது மிகவும் பொருத்தமானதாகும்.
நிறைவாக மூவொரு கடவுளின் அன்பிற்கு உகந்தவர்களாக வாழ நாம் செய்யவேண்டியது: அமைதியாக வாழவேண்டும் என்பதுதான். இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் அதைதான் குறிப்பிடுகின்றார். இன்றைக்கு நாடுகளுக்கிடையே, ஊர்களுக்கு இடையே போர்களும், கலவரங்களும் வெடித்து, அமைதியற்ற ஒரு சூழ்நிலைதான் நிலவிக்கொண்டிருக்கிறது. இத்தகைய பின்னணியில் நாம் அமைதியோடு வாழ்வதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் ஒன்றாக இருக்கின்றது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அர்ஜென்டினாவிற்கும், அதன் அண்டை நாடான சிலிக்கும் இடையே போர் மூழும் சூழல் ஏற்பட்டது. அப்படிப்பட்ட தருணத்தில் பொனவெந்தூர் என்ற ஆயர் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஏற்படவேண்டும் என்பதற்காக பொது இடங்களிலும், மக்கள் ஒன்று கூடிவரும் இடங்களிலும் தீவிரமாகப் பேசினார். அவருடைய பேச்சு மக்களுடைய மனத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. ஆம், பெரும் போர் ஏற்படும் சூழலானது அமைதி தவழும் இடமாக மாறிப்போனது.

Comments are closed.